தர்சனத்தால் ஸம்ஸார நீக்கம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

“த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந – பவதி கிம் பவதிரஸ்கார:” என்பதாக “பவதி” என்கிற சப்தத்தை நாலு முறை அடுத்தடுத்து வெவ்வேறு அர்த்தங்களில் திருப்பி இந்த ச்லோகத்தைப் பூர்த்தி பண்ணியிருக்கிறார். மஹா கவிகளின் புலமையெல்லாம் தோற்றுப்போகிற மாதிரி வாக் ஸாமர்த்யத்தை ஆசார்யாள் காட்டியிருக்கிறார்.

‘த்ருஷ்டே பவதி’ என்னும்போது ‘பவதி’ என்றால் ‘தங்களிடத்தில்’ என்று அர்த்தம். ஒருத்தரிடம் மரியாதையாகத் ‘தாங்கள்’ என்று சொல்லவேண்டுமானால், ‘பவான்’ என்று குறிப்பிடவேண்டும். இதற்குப் பெண்பால் “பவதி” “பவதி பிக்ஷாம் தேஹி” என்கிறபோது “பவதி” என்றால் ஒரு வீட்டுக்காரியை ”அம்மணி!” என்று மரியாதையாகக் கூப்பிடுவதாக அர்த்தம். ”பவதி” என்பதே வினைச் சொல்லாக (verb) வரும் போது ‘உண்டாகிறது’ என்று அர்த்தம். ஆண்பாலில் வருகிற ‘பவத்’ என்பது ஏழாம் வேற்றுமை உருபோடு சேரும்போதும் ‘பவதி’ என்று ஆகும். அப்போது “தங்களிடத்தில்” என்று அர்த்தம் உண்டாகும். இங்கே அப்படித்தான் ‘த்ருஷ்டே பவதி’ என்பதில் “பவதி”க்கு அர்த்தம்.

“த்ருஷ்டே பவதி” என்றால், தங்களிடத்தில் (எங்கள்) த்ருஷ்டி ஏற்பட்டு விட்டால்’, அதாவது ‘எங்களுக்கு உன் தர்சனம் கிடைத்துவிட்டால்’ என்று அர்த்தம். அவன் எப்படிப்பட்டவன்? எல்லாருக்கும் ப்ரபுவாக, அகிலாண்ட நாயகனாக இருக்கிறவன். ‘ப்ரபவதி பவதி த்ருஷ்டே’ என்றால் ‘ப்ரபுவான உன்னிடம் (எங்கள்) பார்வை உண்டாகுமானால்’ என்று அர்த்தம். பகவத் தர்சனம் கிடைத்துவிட்டால்…. அப்புறம் என்ன ஆகிறது?

“ந வதி கிம் வ திரஸ்கார:”

வதிரஸ்கார:’ என்பதை ‘பவதி, ரஸ்கார:’ என்று பிரித்தால் தப்பு. ‘சுக்கு – மிளகு – திப்பிலி’ என்பதை ‘சுக்குமி-ளகுதி-பிலி’ என்று பிரித்தான் என்று கதை சொல்வார்களே, அப்படி ஆகிவிடும். ‘அநேகதம் தம்’ என்பதை ‘அநேக தந்தம்’ என்று பிரிக்கிற மாதிரியான தப்புத்தான் இது. ‘பவ திரஸ்கார:’ என்பதுதான் சரியான பிரிவினை. திரஸ்காரம் என்றால் மறைப்பது. மாந்த்ரீகத்தில் மறைக்கிற வித்தையை ‘திரஸ்கரிணி’ என்பார்கள். பவம் என்றால் ஸம்ஸாரம். முன்பே இந்த ‘ஷட்பதீ’யில் ‘பவ பய கேதச்சிதே’ என்கிற இடத்தில் ‘பவம்’ என்ற வார்த்தை வந்திருக்கிறது. ஸம்ஸார பந்தத்தை மறைப்பது, அதாவது ஸம்ஸார வாழ்க்கை மறையும்படிச் செய்வது, அல்லது ஸம்ஸாரத்தைப் போக்கிக்கொள்வதுதான் ‘பவதிரஸ்காரம்’.

‘ந பவதி கிம்’ என்கிற இடத்தில் ‘பவதி’ என்பது வினைச் சொல். இங்கே ‘பவதி’ என்றால், ’உண்டாகிறது’ என்று அர்த்தம். ‘ந பவதி கிம்’ என்றால் ‘உண்டாகிறதில்லையா என்ன?’ என்று அர்த்தம். எது உண்டாகிறதில்லையா? ஸம்ஸாரத்தின் மறைவுதான். ‘உன் தர்சனம் கிடைத்து விட்டால் அப்புறம் ஸம்ஸார நீக்கம் உண்டாகாமலும் இருக்குமா என்ன?’ என்று கேள்வி ரூபத்தில் கேட்கிறார். ‘உன் தர்சனம் கிடைத்தபின் ஸம்ஸாரம் விலகுகிறது’ என்று affirmative (நேர்) ஸ்டேட்மெண்டாகச் சொல்வதைவிட, இப்படிக் கேள்வி ரூபத்தில், ‘ஸம்ஸார நீக்கம் ஏற்படாதா என்ன? ஏற்படாமலும் போகுமா என்ன?’ என்று சொல்வது, சொல்லவந்த விஷயத்துக்கு மேலும் அழுத்தம் கொடுக்கிறது.

கீதையில் (2-59) , பரமாத்மாவை தர்சித்துவிட்டால் அதோடு உள் மனஸில் தேங்கியிருக்கும் வாஸனை ருசி எல்லாம் போய்விடும் என்று சொல்லியிருக்கிறது. அதோடு ஸம்ஸாரமும் போய்விடவேண்டியதுதான். அந்த இடத்தில் “பரம் த்ருஷ்ட்வா” என்று பகவான் சொல்லியிருக்கிறது போலவே ஸக ஆசார்யாள் “த்ருஷ்டே பவதி” என்கிறார். பகவத் தர்சனம் அத்தைவ ஸாக்ஷாத்காரத்துக்குத்தான் அழைத்துக்கொண்டு போகட்டும், அல்லது த்வைதமாக அவனை தர்சிப்பதகாவே தான் இருக்கட்டும் – எப்படியிருந்தாலும் அதற்கப்புறம் இந்த பூலோகத்தில் ஜனன மரணச் சுழலில் மாட்டிக்கொள்வதில்லை. “இப்படி ஏற்படாமல் கூடப் போகமுடியுமா என்ன – ந பவதி கிம் பவ திரஸ்கார:?” என்று கேட்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கருத்திலும் தொடர்சசி காட்டும் ச்லோகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  திருமாலுக்கு ஈச்வர சப்தம்
Next