திருமாலுக்கு ஈச்வர சப்தம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அடுத்த ச்லோகம், ஷட்பதீயில் ஐந்தாவது ச்லோகம்,

மத்ஸ்யாதிபி – ரவதாரை:

அவதாரவதாவதா ஸதா வஸுதாம் |

பரமேச்வர பரிபால்யோ

பவதா பவதாப பீதோஹம் ||

இங்கேயும் கடைசியில் பவதா என்று இரண்டு தடவை திருப்புகிறார். முதலில் ‘பவதா’வைத் தனி வார்த்தையாக எடுத்துக் கொள்ளவேண்டும். ‘தங்களால்’ என்று அர்த்தம். அடுத்து வருவது ‘பவ தாப பீதோஹம் (பீத: அஹம்) ‘ என்று பிரியும். ‘ஸம்ஸார தாபத்தினால் பீதி அடைந்துள்ள நான்’ என்று இதற்குப் பொருள்.

‘பரமேச்வர பரிபால்யோ வதா வதாப பீதோஹம்’ என்பதற்கு ‘ஸம்ஸார தாபத்தினால் பீதி (பயம்) அடைந்துள்ள நான் பரமேச்வரனான தங்களால் பரிபாலிக்கப்பட வேண்டியவனாக இருக்கிறேன்’ என்று அர்த்தம்.

பொதுவாக நாம் ஈச்வர சப்தம், பரமேச்வர சப்தம் முதலானவை சிவ பெருமானைக் குறிப்பிடுவதாகவே வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆசார்யாளோ எல்லாவற்றிலும் அத்வைதி, அபேத உணர்ச்சியே கொண்டவர். சிவ – விஷ்ணு அபேதமும் இவற்றில் ஒன்று. ‘ப்ரச்நோத்தர ரத்ந மாலிகா’ என்கிற க்ரந்தத்தில் ஆசார்யாள் கேள்வி – பதில் ரூபத்தில் உபதேசித்துக் கொண்டேபோகிறபோது, ‘பகவான் யார்? (கச்ச பகவான்?) ‘ என்று ஒரு கேள்வி கேட்டுவிட்டு, அதற்கு பதிலாக, “சங்கரனாகவும் நாராயணனாகவும் இருக்கப்பட்ட ஒரே ஆத்மாவான மஹேச்வரன் தான் (மஹேச: சங்கர நாராயணாத்ம ஏக:)” என்கிறார். துளிக்கூட ஹரி – ஹர பேதம் பாராட்டாதவர் அவர். சங்கரனைப் போலவே நாராயணனும் அவருக்கு மஹேச்வரன் தான். பரமேச்வரன் தான். அதனால், மஹாவிஷ்ணுவையே “பரமேச்வர” என்று கூப்பிட்டு, “நான் உன்னால் ரக்ஷிக்கப்பட வேண்டியவன்” (பரிபால்ய: அஹம்) என்று ப்ரார்த்திக்கிறார்.

இது ச்லோகத்தின் பிந்திய அடி. முந்திய அடியில் ‘வதா வதா’ என்று என்னவோ திருப்பித் திருப்பிச் சொல்கிறாரே. அதற்கு என்ன அர்த்தம்?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தர்சனத்தால் ஸம்ஸார நீக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அவதாரங்கள்
Next