“மத்ஸ்யாதிபிரவதாரை” என்பதை வார்த்தை பிரித்தால் “மத்ஸ்யாதிபி: அவதாரை:”. அப்படியென்றால், ‘மத்ஸ்யம் முதலான அவதாரங்களால்’ என்று அர்த்தம். லோக ரக்ஷணத்துக்காக பகவான் தசாவதாரம் எடுத்ததைச் சொல்கிறார்.
லோக ரக்ஷணம் என்றால் என்ன? எல்லா தேசங்களுக்குமாக பெரிய கவர்ன்மென்ட், பெரிய கோர்ட், பெரிய ஸைன்யம், பெரிய போலீஸ் டிபார்ட்மென்ட் வைத்துக்கொண்டு பண்ணுகிற கார்யமா என்ன? இல்லை. வேதத்தை ரக்ஷித்துக் கொடுத்து, அவரவர்களும் ஸ்வதர்மத்தைப் பண்ணும்படியாக ஆக்கிவிட்டால் அதுதான் லோகரக்ஷணம். வேதரக்ஷணம் தான் லோகரக்ஷணம். வேத மந்த்ர சப்தங்கள் அட்மாஸ்ஃபியரில் குறையாமல் பரவிக்கொண்டு, வைதிக யஜ்ஞங்களால் ஸகல தேவதா ப்ரீதி ஏற்பட்டு விட்டால், தன்னால் லோகம் முழுதும் ரக்ஷிக்கப்பட்டதாக ஆகிவிடும். அதனால் எப்போதெல்லாம் வேத தர்மத்துக்கு ஹீனம் உண்டாகி, லோகம் க்ஷீணமாயிற்றோ அப்போதெல்லாம் பாலன கர்த்தாவான மஹாவிஷ்ணு அவதாரம் பண்ணி வேதத்தை புநருத்தாரணம் செய்வார். இதனால் லோகம் க்ஷேமம் அடைந்துவிடும்.
ஸோமுகாஸுரன், ஹயக்ரீவன் போன்ற அஸுரர்கள் வேதத்தையெல்லாம் ஜலக் காட்டிலே ஒளித்து வைத்தபோது பகவான் மீனாகத் தோன்றி அதை மீட்டு வந்தது தான் மத்ஸ்யாவதாரம். ‘ப்ரளய பயோதி ஜலே’ என்று ஜயதேவர் அஷ்டபதியில் இதைச் சொல்லியிருக்கிறது.
இது மாதிரியான பத்து அவதாரங்களில் பகவான் தம்முடைய உயர்ந்த ஸ்தானத்தை விட்டு இந்த பூலோகத்துக்கு இறங்கி வருகிறார். பரமபதம் என்று சொல்கிற உத்தமமான வைகுண்டத்திலிருந்து இறங்கி நம் லோகத்துக்கு வருகிறார். ‘அவதாரம்’ என்றாலே ‘இறங்கி வருவது’ என்பதுதான் அர்த்தம். ‘தார’ என்றால் உச்சி. தார ஸ்தாயி என்று மேல் ஸஞ்சாரத்தைச் சொல்கிறோம் அல்லவா? ‘அவ-தாரம்’ என்றால் reverse order -ல் அந்த உச்சியிலிருந்து கீழே வருவது. பரம கருணையால் பகவான் இப்படி இறங்கி வருகிறான். கீழே இருக்கிற நம்மைக் கையைப் பிடித்து மேலே அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்பதற்காக, உச்சத்துக்கெல்லாம் உச்சத்திலுள்ள பகவான் நம் லெவலுக்கு இறங்கி வருகிறான்.
‘அவதாரவதா’ என்று ச்லோகத்தில் வருவதற்கு ‘இறங்கி வந்தவனாக ஆனதால்’ என்று அர்த்தம்.
“மத்ஸ்யாபி: அவதாரை:” – மத்ஸ்யம் முதலான அவதாரங்களால்: “அவதாரவதா” – கீழே இறங்கி வந்தவனாக ஆனதால்.
அவதாரவதா + அவதா என்பதே ‘அவதாரவதா வதா’ என்று அடுத்தடுத்து மூன்று ‘வதா’வைக் கொடுக்கிறது. பின்னே சொன்ன ‘அவதா’ என்பதில் ‘அவ’ என்பது ரக்ஷிப்பதைக் குறிக்கும். ‘மாமவ’, ‘மாமவ’ என்று அநேக கீர்த்தனைகளில் வருவது ‘மாம் + அவ’ என்பதே. “மாம் – என்னை, அவ – காப்பாற்று’ என்பது அர்த்தம்.
‘அவதா ஸதா வஸுதாம்’ என்று இங்கே ச்லோகத்தில் இருப்பது, எப்பொழுதும் (ஸதா) லோகத்தை (வஸுதாம்) பகவான் அவதாரங்களால் அவனம் (ரக்ஷணை) செய்து கொண்டிருப்பதைச் சொல்கிறது.
வஸு என்றால் பல தினுஸான செல்வங்களையும் குறிக்கும். இயற்கை என்கிற எல்லாச் செல்வங்களையும் (natural resources) பூமி கொடுப்பதால் பூமிக்கு ‘வஸுதா’ என்று பேர். ‘வஸுந்தரா’ என்றும் சொல்வதுண்டு. இப்படிச் செல்வம் நிரம்பின பூமியானது ஜனங்களின் பாபத்தினால் வற்றி வாடிப் போகிற போதெல்லாம் அதை ரக்ஷித்துப் பழையபடி ஆக்குவதற்காக ஸ்வாமி அவதரிப்பதை ஆசார்யாள் சொல்கிறார். ஜனங்கள் பண்ணும் ஸகல பாபத்தையும் தாங்கிக்கொள்கிற பூமாதேவி ஒரு ஸ்டேஜுக்கு மேல் தாங்க முடியாமல் பகவானிடம் போய் முறையிடுவாள். உடனே அவர் அவதாரம் பண்ணிவிடுவார். பூமா தேவி பசு ரூபத்தில் போய் முறையிட்டவுடன் பகவான் க்ருஷ்ணனாக அவதாரம் பண்ணிப் பசு மந்தைகளை மேய்த்ததாக பாகவதத்தில் இருக்கிறது.
‘இப்படி லோகத்தை மத்ஸ்யம் முதலான அவதாரங்களால் எப்போதும் ரக்ஷிக்கிற பரமேச்வரா! ஸம்ஸார தாபத்தினால் பயந்து கிடக்கிற நானும் உன்னால் ரக்ஷிக்கப்பட வேண்டியவன்’ என்பது இந்த ச்லோகத்தின் அர்த்தம்.
லோக ரக்ஷணத்துக்காக பரம கருணையோடு திரும்பத் திரும்ப பகவான் அவதரிப்பதை வாக்கின் போக்கிலேயே காட்டி விடுகிறமாதிரி, “அவதாரவதாவதா… பவதா பவதாப” என்று ஒரே சப்தங்களைத் திரும்பத் திரும்ப அடுக்கி வைத்திருக்கிறார்!
‘திருப்பித் திருப்பி அவதாரம் பண்ணுகிற விஷ்ணுவுக்குத்தான் கர்ப்பவாஸம் உண்டு. எங்கள் ஈச்வரனுக்குக் கிடையாது’ என்று சைவர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதும், ‘தான் கீழே இறங்கி வந்தாகிலும் ஜனங்களை உயர்த்த வேண்டும் என்று அவதாரம் பண்ணும் பரம காருண்யம் எங்கள் பெருமாளுக்குத்தான் உண்டு, ஈச்ரவனுக்கு இல்லை’ என்று வைஷ்ணவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதுமாக இருக்க, நம் ஆசார்யாளோ பெருமாளையே, ‘பரமேச்வரா!’ என்று கூப்பிட்டு அவதாரங்களையும் சொல்லி ஸமரஸப்படுத்தியிருக்கிறார்.
‘புருஷர்களுக்கு உயர்ந்த புருஷோத்தமனே ஹரி; மஹேச்வரன் என்பதாக ஈச்வர பட்டம் உடையவன் த்ரயம்பகனான (முக்கண்ணனான) ஒருவனே அன்றி வேறில்லை’ என்று காளிதாஸன் சொல்லியிருக்கிறான்: ஹரிர் யதைக: புருஷோத்தம ஸ்ம்ருத: மஹேச்வரஸ் – த்ரயம்பக ஏவ நாபர: *
‘அமரம்’ என்கிற ஸம்ஸ்க்ருத டிக்ஷ்னரியிலும் ஈச்வர: சர்வ ஈசாந: என்பதாக ‘ஈச்வர’ என்கிற டைட்டிலை சர்வனும் ஈசானனுமான சிவனுக்கே கொடுத்திருக்கிறது.
ஆனால் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் கொஞ்சம் கூட வித்யாஸம் பாராட்டாத நம் ஆசார்யாள் இங்கே “பரமேச்வர” என்று மஹாவிஷ்ணுவையே கூப்பிடுகிறார். “என்னை ரக்ஷியப்பா” என்று அவனை வேண்டிக் கொள்கிறார்.
* ரகுவம்சம் 3.49