பன்னிரு நாமங்கள் : நெற்றிக்கிடும் நாமம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அடுத்த ச்லோகம்:

தாமோதர குணமந்திர

ஸுந்தரவதநாரவிந்த கோவிந்த |

பவஜலதி மதந மந்தர

பரமந்தரம் அபநய த்வம் மே ||

“ந்த” என்ற சப்தம் திரும்பத் திரும்ப வருகிற மாதிரி மதுரமான பதங்களினால் ச்லோகத்தைச் செய்திருக்கிறார் நம்முடைய ஆசார்யாள். ஒவ்வொரு வரியிலும் இந்த சப்தம் வரவேண்டும் என்பதால் நாலாவது வரியில் இரண்டு பதங்களின் ஸந்தியில் ‘பரமந்தரம்’ என்று வைத்திருக்கிறார். பரமம் – தரம் என்ற இரண்டு வார்த்தைகள் சேர்ந்து ‘பரமந்தரம்’ என்றாகியிருக்கிறது. ‘அநேகதம் – தம்’ என்பது ‘அநேகதந்தம்’ என்றான மாதிரி.

முதல் இரண்டு வரிகளில் பகவானைக் கூப்பிடுகிறார். “தாமோதர, கோவிந்த” என்ற இரண்டு பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார். ‘குணமந்திர’, ‘ஸுந்தர வதநாரவிந்த’ என்பதெல்லாமும் ஸ்வாமியை அழைப்பதுதான். ஆனால் தாமோதரன், கோவிந்தன் என்பன பகவானின் ப்ரஸித்த நாமாக்களாகவே இருப்பவை.

பன்னிரண்டு நாமாக்கள் மஹாவிஷ்ணுவுக்கு முக்யம். பரமேச்வரனுக்கு (சிவபெருமானுக்கு) பவன், சர்வன், ஈசானன், பசுபதி, உக்ரன், ருத்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்ட நாமாக்கள் முக்யமாயிருப்பது போல் மஹா விஷ்ணுவுக்குப் பன்னிரண்டு. ஸஹஸ்ர நாமம், த்ரிசதி (முந்நூறு நாமம்) , அஷ்டோத்தர சதம் (108 நாமம்) முதலியன சொல்லி அர்ச்சனை பண்ணினாலும் முடிவில் இந்த அஷ்ட நாமாவையோ, த்வாதச (பன்னிரண்டு) நாமாவையோ சொல்லி முறையே ஈச்வரனையும், பெருமாளையும் அர்ச்சனை பண்ணவேண்டும். அஷ்டோத்தரம் முதலியன பண்ண முடியாதபோது இந்த எட்டு அல்லது பன்னிரண்டு நாமாக்களை மட்டும் மனஸாரச் சொல்லி அர்ச்சனை பண்ணினால் போதும் என்று சொல்லி இருக்கிறது. பிள்ளையாருக்கும் இப்படி விசேஷமான நாமாக்களாகப் பதினாறைச் சொல்லியிருக்கிறது.1

மஹா விஷ்ணுவுக்கு த்வாதச நாமாக்கள் முக்யமானவை. வைஷ்ணவர்களாக இருக்கப்பட்டவர் நெற்றியிலே போட்டுக்கொள்வதை ‘நாமம்’ என்று சொல்கிறோம். இந்தப் பேர் எப்படி வந்தது? வைஷ்ணவர், சைவர், ஸ்மார்த்தர், மாத்வர் யாவரும் நெற்றியில் மட்டுமில்லாமல் மார்பு, வயிறு, புஜம், மணிக்கட்டு முதலான இடங்களில் நாமமோ, விபூதியோ, கோபி சந்தனமோ இட்டுகொள்ள வேண்டும். ஆசார சீலர்கள் இப்படியே இன்றைக்கும் செய்கிறார்கள். இப்படிப் பன்னிரண்டு இடங்களில் நாமம் போட்டுக் கொள்ளவேண்டும். ‘த்வாதச நாமம் போட்டுக்கொண்டு வந்தார்’ என்று சொல்கிறோம். மஹா விஷ்ணுவுக்கு ரொம்பவும் ப்ரீதியாக இருக்கப்பட்ட பன்னிரண்டு நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக சரீரத்தின் ஒவ்வொரு இடத்திலும் உலகளந்தவனும், உலகமே உருவானவனுமான பகவான் நினைப்போடு திருமண் இட்டுக்கொள்ளவேண்டும் என்பதே தாத்பர்யம். இப்படி பகவானின் த்வாதச நாமாக்களுக்கு அடையாளமாக இருப்பதாலேயே இந்தப் பன்னிரண்டு திருமண் சின்னங்களுக்கும் த்வாதச நாமம் போடுவது என்று பேர் வந்தது. அப்புறம் திருமண் சின்னத்துக்கு “நாமம்” என்று பேராகிவிட்டது.2

இந்தப் பன்னிரண்டு நாமாக்களையே ஆசமனம் செய்யும் போதும் நாம் சொல்லி கன்னம், கண், மூக்கு, காது, புஜம், ஹ்ருதயம், தலை முதலான அவயவங்களைத் தொட்டுக் கொள்கிறோம்.

கேசவ – நாராயண – மாதவ – கோவிந்த – விஷ்ணு – மதுஸூதன – த்ரிவிக்ரம – வாமன – ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – பத்மநாப – தாமோதர என்பவையே இந்தப் பன்னிரண்டு நாமாக்கள்.

இதிலே வேடிக்கையாக, முக்யமான அவதாரங்களான க்ருஷ்ண, ராம என்ற இரண்டு பெயர்களும் இல்லை. ஆனாலும் கேசவன், கோவிந்தன், தாமோதரன் முதலானவை க்ருஷ்ண பரமாத்மாவின் பெயர்கள்தான். ‘கேசி’ என்ற அஸுரனைக் கொன்றதால் கேசவன், கோக்களை (பசுக்களை) ரக்ஷித்ததால் கோவிந்தன்.


1 இப்பகுதியில் விநாயகரைக் குறித்த “கண்ணன் பூஜித்த கணநாதன்” என்ற உரையில் “பால சந்த்ரன்” என்ற பிரிவு பார்க்க.

2 முதற் பகுதியில் “விபூதி, திருமண்ணின் மஹிமை” எனும் உரையும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அவதாரங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தாமோதரன்
Next