தாமோதரன் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘தாமோதரன்’ என்றால், ‘கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்’ என்று அர்த்தம். தாமம் என்றால் கயிறு. ‘கேஸ் பெட்டி’ , ‘கேட் வாசல்’ என்று ஒரே அர்த்தமுள்ள இரண்டு வார்த்தைகளைச் சேர்த்துச் சொல்கிறமாதிரி ‘தாமக் கயிறு’ என்று சொல்லிச் சொல்லித்தான் ‘தாம்புக் கயிறு’ என்று வந்துவிட்டது!

தாமம் – கயிறு; உதரம் – வயிறு. கயிற்று வயிற்றனே தாமோதரன்.

“வெண்ணெய் திருடுகிறாயா? உன்னைக் கட்டிப் போடுகிறோன், பார்” என்று யசோதை பால க்ருஷ்ணனைப் பிடித்துக் கயிற்றால் கட்டிப் போடப் பார்த்தாள். அவள் எத்தனை கயிறுகளைச் சேர்த்து ஒட்டுப் போட்டுக் கொண்டே போன போதிலும் தன்னுடைய சின்ன வயிற்றைச் சுற்றிக் கட்டுவதற்குப் போதாதபடி மாயாஜாலம் பண்ணினார் பகவான். அப்புறம் அவள் வேர்த்து விருவிருத்துப் போனதைப் பார்த்துப் பரிதாபப்பட்டுத் தாமாகவே கயிற்றிலே கட்டுப்பட்டார், அந்த அவஸரத்திலேதான் ‘தாமோதரன்’ என்று பேர் ஏற்பட்டது. “உரலோடு சேர்த்து யசோதை கட்டிப்போட, மிருதுவான உன் வயிற்றைக் கயிறு உறுத்தும் படி எளிமையாகக் கட்டுப்பட்டாயே!” என்று ஆழ்வாராதிகள் இதை உருகி உருகிப் பாடி அநுபவித்திருக்கிறார்கள். “தான் பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்படும் பக்த பராதீனன், ஆனாலும் அவர்கள் ‘என்னால் கட்டிவிட முடியுமாக்கும்’ என்று அஹம்பாவத்தோடு நினைக்கிறவரையில் தன்னைக் கட்டமுடியாது; தானே கருணைகொண்டு கட்டுப்பட மனஸ் வைத்தால்தான் முடியும் என்று காட்டுபவன் தாமோதரன். பிற்பாடு பாரத யுத்தம் ஏற்படுவதற்கு முன், ஸ்வாதீன ப்ரேமையில் ஸஹாதேவன் ‘உன்னைக் கட்டிப்போடுகிறேன் பார்’ என்று ஸவால் விட்டபோது, அவன் நிஜமாகவே கட்டிப்போடும்படியாகவும் பகவான் நின்றிருக்கிறான். தாமோதரனாய் இருக்கும்போது, இந்த ஷட்பதீ ஸ்தோத்ரம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்துள்ள விநயத்தோடு கூடிய பக்தியை எடுத்துக் காட்டியிருக்கிறான்.

“தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை” என்று ஆண்டாள் சொல்லியிருக்கிறாள். தன்னை தரித்த தாயாரான தேவகியின் குடலைத் தன்னுடைய கர்ப்பவாஸத்தால் பரிசுத்தி பண்ணிவிட்டான் என்பது அவள் சொல்வதற்கு அர்த்தம். எவனது குடலுக்கு வெளியிலே மேல் பக்கம் தாம்புக்கயிற்றைப் போட்டு வளர்ப்புத் தாய் யசோதை புண்ணாக, அழுக்காக ஆகும்படிச் செய்தாளோ அவன் தன் ஜனக மாதாவின் (பெற்ற தாயாரின்) குடலை தன்னுடைய வாஸத்தாலேயே தூய்மை செய்தவனாக்கும் என்று காட்டியிருக்கிறாள்.

இது பக்தி பூர்வமாக சொல்கிற அர்த்தம். Philosophical-ஆக (தத்வரீதியில்) ‘தாம உதரன்’ என்றால் ‘எல்லாவற்றுக்கும் இருப்பிடமான வயிற்றைக்கொண்டவன். அதாவது எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன்’ என்று அர்த்தம் பண்ணுவார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பன்னிரு நாமங்கள் : நெற்றிக்கிடும் நாமம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  திருப்பெயர்களின் பொருள்
Next