தனியாக ஒரு பழத்தை எடுத்தால் இப்படி. பூவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பழுக்க வேண்டும் என்பது தனி மநுஷ்யன் விஷயம். ஸமூஹம் என்று எடுத்துக்கொண்டால் அதிலே எங்கேயோ அபூர்வமாக ஒருசில மநுஷ்யர்கள் தான் இப்படிப் பழுக்கிறார்கள். இதற்காகவும் குறைப்படவேண்டாம், ஸமூஹத்தை ஒரு மரம் என்று வைத்துக் கொண்டால் ஒரு மரத்தில் எத்தனை இலைகள் இருக்கின்றன? ஸீஸனுக்கு ஸீஸன் எத்தனை ஆயிரம் இலையும் பூவும் உதிர்ந்து கொண்டிருக்கின்றன? விழுகிற பூக்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பூ விழுந்த பின் உண்டாகிற பிஞ்சுகள் கொஞ்சந்தான். அந்தப் பிஞ்சுகளிலும் வெம்பி விடாமல் கடைசி ஸ்டேஜ்வரை பக்வமாகிக்கொண்டே போய்ப் பழுத்த பழமாகிறவை ரொம்பவும் ஸ்வல்பம்தான். இயற்கையில் இப்படித்தான் இருக்கிறது. ஜீவ ஸ்ருஷ்டியிலும் ஏராளமானவர் இலையாயும் பூவாயும், சருகாய், வாடலாய்க் கருகி விழுந்து, காயிலும் ஏராளமானவை வெம்பி விழுந்தும், பக்ஷிகளும் குரங்குகளும் கடித்து விழுந்தும், முடிவாக மிஞ்சும் கொஞ்சமே பழமானாலும் போதும்; அதுவே ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜனம் என்றுதான் பகவான் லீலை பண்ணிக் கொண்டிருக்கின்றான்.
ஜன ஸமுதாயத்தில் அடங்கிய எல்லாரும் நிறைந்த நிறைவாக ஆகி பூர்ணத்வம் அடையாவிட்டால் பரவாயில்லை; மரத்துக்குப் பழம் மாதிரி, ஜனத்தொகையில் எவரோ ஒருத்தர், ஆயிரத்தில் லக்ஷத்தில் ஒருத்தர் பூர்ணமாகி விட்டால்கூட போதும்; அப்படி ஒரு ஆத்மா நிறைகிறதற்குத்தான் இத்தனை பேர் ஸ்ருஷ்டியாகி, இத்தனை காம க்ரோதாதிகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறதெல்லாம். அத்னாம் பெரிய ஸமுத்ரத்தைக் கடைந்து ஒரு சின்னக் கலசம் அம்ருதம் எடுத்ததுபோல் இவ்வளவு ஜீவ கோடிகளுள் ஸம்ஸாரத்தைக் கடைவதிலிருந்து அம்ருத தத்வமாக ஆன உதாரண புருஷர்கள் ஸ்வல்பம் உண்டானாலும் போதும். பவக்கடலைக் கடைந்து அதன் ஸாரமாக ஸ்வல்ப அளவு அம்ருதத்தை எடுக்க உதவுகிற மத்தாகத்தான் ஆசார்யாள் இங்கே பகவானை நினைத்து ‘பவஜலதி மதன மந்தர’ என்கிறார். அப்படிச் சொல்வதால், இந்த ஸம்ஸாரத்துக்குள்ளேயே விஷம் மட்டுமில்லாமல் அம்ருதமும் இருக்கிறது என்று நமக்கு ஆறுதல் உண்டாக்குகிறாற் போலிருக்கிறது. மத்தைப் போட்டுக் கடைந்த உடனே வெண்ணெய் வந்து விடுமா? எத்தனையோ நாழி சிலுப்பினால்தான் வரும். அதுவரை அவசரப்படக்கூடாது, ஆத்திரப்படக்கூடாது. நம்பிக்கை இழக்கக்கூடாது.
நிதானமாக, படிப்படியாக அபிவ்ருத்தி எவருக்கும் உண்டு. ஆகவே நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்த மத்து கயிற்றிலிருந்து நழுவி விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான். என்ன கயிறு? பக்தி என்கிற கயிறுதான்! ‘சிவாநந்த லஹரி’யில் ஆசார்யாள் பரமேச்வரனிடம், ‘பக்திக் கயிற்றால் என் மனக்குரங்கை நன்றாகக் கட்டிப்போடு’ (த்ருடம் பக்த்யா பத்த்வா) என்று சொல்லியிருக்கிறார். நாம் பக்திக் கயிற்றால் பகவான் என்ற மத்தைச் சுற்றி, பிடிப்பை நழுவ விடாமலிருந்தால் அவர் இந்த ஸம்ஸார ஸாகரத்தைக் கடைந்து முதலில் விஷங்களைத் திரட்டி அப்புறப்படுத்திவிட்டுப் பிறகு நமக்கு அம்ருதம் எடுத்துக் கொடுத்துவிடுவார். அதாவது, அமர நிலையான மோக்ஷத்தைக் கொடுத்துவிடுவார்.
பிறப்பு – இறப்பு, ஜனன – மரணம்தான் ஸம்ஸாரம். அம்ருதம் என்றால் இறப்பில்லாதது. இறப்பேயில்லை என்றால் அப்புறம் மறு பிறப்பு இல்லை. அப்படிப்பட்ட சாச்வதமான மோக்ஷானந்தமான அம்ருதத்தை இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்தே பக்தியின் துணை கொண்டு பகவாநுக்ரஹத்தால் பெறவேண்டும் என்பது தாத்பர்யம்.
ஸம்ஸார ஸாகரத்தை விட்டுக் கடத்துவிப்பது என்றால் லோகத்தை அப்படியே துறந்துவிடச் செய்வது. ஸம்ஸாரத்தைக் கடைந்து அம்ருதம் பெறுவது என்றால், அதை விட்டுப் போகாமல், எல்லாவற்றிலும் உள்ள எல்லாமுமான ப்ரஹ்மம் லோகத்திலும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு இஹத்திலேயே பரத்தைப் பெறுவது – என்றிப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். ஞானமாகவே போனால், வைராக்யத்தில் ஸம்ஸாரத்தைத் துறந்து அதைக் கடப்பது; பக்தியாகப் போனால், அவன் க்ருபையிலுள்ள நம்பிக்கையால் ஸம்ஸாரத்தை விட்டுப் போகாமலே இதிலேயே அவனுடைய அம்ருத தத்வத்தைக் கடைந்து பெறுவது என்று வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.
‘ஷட்பதீ’யை ஸம்ஸாரத்திலிருந்து கடப்பதில் ஆரம்பித்து, – “தாரய ஸம்ஸார ஸாகரத:” என்று முதல் ச்லோகத்தில் ஆரம்பித்து கடைவதில் முடிக்கிறதால் எதையுமே விடாமல், ஒதுக்காமல், எதிலும் ஆத்ம தத்வத்தை அறிகிற பெரிய விசாலமான நிறைவில் முடிப்பதாக ஆகிறது.