துதியின் ஸாரம் : ஸம்ஸாரத் துன்ப நீக்கம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

முதல் ச்லோகத்தில் ‘தாரய ஸம்ஸார ஸாகரத:’ – ‘ஸம்ஸார ஸாகரத்திலிருந்து அக்கரை சேரு!’ என்று ப்ரார்த்தித்தார். அடுத்த ச்லோகத்தில் ‘ஸம்ஸார பயத்தையும் வேதனையையும் சிதைக்க வல்லதான பாதாரவிந்தத்தை நமஸ்கரிக்கிறேன்’; ‘பவபய கேத-ச்சிதே வந்தே’ என்றார். மூன்றாவதில் ஸம்ஸாரத்தைப் பற்றி ‘ரெஃபரன்ஸ்’ இல்லை. பரமாத்ம – ஜீவாத்மாக்கள் ஒன்றேயானாலும் வ்யவஹாரத்தில் ஸமுத்ரமும் அலையும் மாதிரி இருப்பவர்கள் என்று அதில் சொல்கிறார். யோசித்துப் பார்த்தால் இதிலும் ஸம்ஸார ஸமாசாரம் உட்கிடையாக இருக்கிறது. வ்யவஹார நிலை என்பது தான் ஸம்ஸாரம். அதையேதான் பொதுவாக ஸமுத்ரம் என்பது. (முதல் ச்லோகத்தில் வரும் ‘ஸாகரம்’, ஆறாவதிலே வரும் ‘ஜலதி’ என்பனவற்றுக்கு ஸமுத்ரம் என்றே அர்த்தம்.) இந்த ஸம்ஸார ஸமுத்ரத்திலே அடிபட்டு, முழுகிப்போகாமலிருக்க வழி, இப்படி இதிலே த்வைதமாக உள்ளபோதுகூட, ‘நாம் இந்த ஸமுத்ரத்தின் அங்கமல்ல. பரமாத்ம ஸமுத்ரத்தின் அங்கம்தான், அதன் அலைதான். அலை ஸமுத்ரத்தில் ஒடுங்கி ஒன்றாய்விடுகிறது போல நாம் பரமதாத்மாவிலேயே ஐக்யமாகி விட வேண்டியவர்கள்தான்’ என்ற நினைவுடன் இருப்பதேயாகும். ‘ஸமுத்ரம் தானே அலையாக ஆகியிருப்பது? அப்படி பரமாத்மா அல்லவா நாமாக ஆகியிருப்பது? அவன் நினைவோடு அவனுடைய அலை நாம் என்ற உறுதியோடு இருந்தால் இந்த ஸம்ஸார ஸமுத்ரம் நம்மை என்ன பண்ணமுடியும்?’ என்று மூன்றாம் ச்லோகம் எண்ண வைக்கிறது. அத்வைதப் பார்வையில் பார்த்தபோது அதில் த்வைதத்தின் நைச்யம் (எளிமை, தாழ்மை) இருப்பதாகச் சொன்னேன். த்வைதமான ஸம்ஸாரத்தின் கோணத்தில் பார்க்கும்போது ‘ஸமுத்ரத்துக்கு வேறாக இல்லாத அலை மாதிரி பரமாத்மாவுக்கு ‘நாம்’ என்கிற கருத்தே அத்வைதத்தின் கம்பீரத்தை நமக்கு அழுமூஞ்சி ஸம்ஸாரத்திலும் ஊட்டுவதாகத் தெரிகிறது. நாலாம் ச்லோகத்திலும் ஸம்ஸாரத்தைப்பற்றி வருகிறது. ‘பகவத் தர்சனம் கிட்டிவிட்ட பின் ஸம்ஸாரத்தின் அழிவு எப்படி ஏற்படாமலிருக்கும்? – ந பவதி கிம் பவதிரஸ்கார:’ என்று அது கேட்கிறது. அடுத்த ச்லோகத்தில், ஸம்ஸார தாபத்தில் பீதியுற்ற தம்மை பகவான் பரிபாலிக்க வேண்டிக்கொண்டார். ‘பவதாப பீதோஹம்’ என்று அதில் வருகிறது, கடைசியான ஆறாவதில் ஸம்ஸார ஸமுத்ரத்திலிருந்து அம்ருதமான ஆத்ம தத்வத்தைக் கடைந்து கொடுக்கும் மத்தாக பகவானை வர்ணிக்கிறார். ஆக ஸமய அநுஷ்டானங்கள், ஆத்மிகமான ஸாதனைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஒரே லக்ஷ்யமான ஸம்ஸார கஷ்ட நிவ்ருத்தியை பக்தியில் ஆரம்பித்துப் பெற முயல்வதே ‘ஷட்பதீ’யின் ஸாரதத்வம் என்று தெரிகிறது.

பரமம் தரம் அபநய த்வம் மே என்று இந்த ச்லோகம் முடிகிறது.

‘தரம்’ என்றால் பயம் என்று அர்த்தம். மே – எனக்கு (அதாவது என்னுடைய;) பரமம் – மிகுந்த; தரம் – பயத்தை; த்வம் – நீ; அபநய – போக்குவாயாக!

உருப்படுவோமோ மாட்டோமோ, கதிமோக்ஷம் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயம், மரண பயம், மறுபடியும் ஜன்மா வந்துவிடுமோ என்கிற பயம், நம் பாபங்களை நினைத்து நரக பயம் – இப்படிப் பல தினுஸாகப் படுகிற பெரிய ஸம்ஸார பயத்தைப் போக்க பகவானிடம் ப்ரார்த்தனை செய்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சில உதாரணர புருஷர் போதும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆதி வார்த்தை அந்தத்திலும்
Next