‘ஷட்பதீ’ ஆரம்ப ச்லோகத்தில் ‘அவிநயம் அபநய‘ என்று தொடங்கினார். ஆறாவது ச்லோகத்தை முடிக்கிறபோதும் ‘தரம் அபநய த்வம் மே’ என்பதாக அதே ‘அபநய’ என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார். ஆதி வார்த்தையே அந்தத்தில் வருவதால் Circle complete ஆகிவிடுகிறது (வட்டம் பூர்த்தியாகிவிடுகிறது) . இது ஸ்தோத்திரத்தின் பூர்ணத்வத்துக்கு அடையாளம்.
‘அபநய’ என்பதற்கு அப்புறம் ‘த்வம்’, ‘மே’ என்ற இரண்டு வார்த்தைகள் வந்தாலும், மேலே காட்டினமாதிரி ‘எனக்கு மஹாபயத்தை நீ போக்குவாயாக’ என்பதற்கு நேர்வாக்யம், ‘மே பரமம் தரம் த்வம் அபநய’ என்று ‘அபநய’வைக் கடைசி வார்த்தையாக வைத்து முடிப்பதாகத்தானிருக்கும். வசன நடையில் அப்படித்தான் இருக்கும். கவிதையானதால் அதன் லக்ஷணங்கள் பொருந்துவதற்காக இப்படி ‘அபநய’வை கொஞ்சம் முன்பே கொண்டு வந்து ‘மே’ என்று முடிக்கும்படி ஆயிற்று.
பகவத் கீதையில் இப்படியேதான் இருக்கிறது. அதிலே பகவானின் உபதேசம் இரண்டாம் அத்யாயத்தில் ‘அசோச்யாந் அந்வசோசஸ்த்வம்’ என்கிற (11-வது) ச்லோகத்தில் ஆரம்பிக்கிறது. கடைசியில் பதினெட்டாவது அத்யாயத்தில் 66-வது ச்லோகத்தில்,
ஸர்வ தர்மாந் பரித்யஜய மாம் ஏகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச : ||
என்று உபதேத்தை முடிக்கிறார்.
இந்த இரண்டிற்கும் முந்தியும் பிந்தியும் இருக்கிற ச்லோகங்கள் preface (முன்னுரை), Epilogue (பின்னுரை) தான்.
‘சுச’ – ‘சோச்ய’ என்கிற வார்த்தைகள் ‘வருத்தப்படுவதை’க் குறிக்கும். முதலில், ‘அசோச்யாந் அந்வ சோசஸ்த்வம்’ என்றதற்கு ‘வருத்தப்பட வேண்டாதவர் விஷயத்தில் நீ வீணுக்கு வருத்தப்படுகிறாய்’ என்று அர்த்தம். ‘ஐயோ, இந்தக் கௌரவ ஸேனையை எப்படிக் கொல்வேன்?’ என்று வருத்தப்பட்ட அர்ஜுனனிடம், ‘தர்மத்தை உத்தேசித்து இந்த யுத்தம் நடந்தாக வேண்டியிருக்கிறது. பூபாரம் தீருவதற்காக, இவர்கள் எல்லாரும் ஸம்ஹாரம் ஆக வேண்டும் என்று ஏற்கெனவே ஈச்வர ஸங்கல்பமாகிவிட்டது. ஆகையால் நீ வருத்தப்பட வேண்டாதவர்களுக்காக அநாவச்யமாக வருத்தப்படுகிறாய்!’ என்று சொல்ல வந்த பகவான், ‘அசோச்யாந் அந்வசோசஸ்த்வம்’ என்று ஆரம்பிக்கிறார். கடைசியில் முடிக்கிறபோது, ‘எல்லாத் தர்மங்களையும் விட்டுவிட்டு (அதாவது, எல்லா தர்மங்களுக்கும் மேலாக) என்னிடம் சரணாகதி பண்ணி, நான் விட்டவழி என்று இருந்துவிடு. நான் உன்னை ஸகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். இது நிச்சயம். ஆதலால் கொஞ்சங்கூட வருத்தப்படாதே’ என்று அர்ஜுனனுக்குத் தன் வாக்குறுதியைக் கொடுக்கிறபோது ‘மா சுச:’ என்கிறார். ‘மா சுசு:’ என்றால் ‘வருத்தப்படாதே’ என்று அர்த்தம். ஆரம்பத்தில் வந்த ‘அசோச’, முடிந்த முடிவில் வருட்ம ‘மா சுச’ இரண்டும் ஒன்றேதான். ‘சுச்’ என்கிற root (தாது) இரண்டிற்கும் பொது.
கீதையில் போலவே ஷட்பதீயிலும் முதல் ச்லோக ஆரம்பத்தில் வந்த ‘அபநய’ ஆறாம் ச்லோக முடிவிலும் வருகிறது. ‘விநயமின்மையைப் போக்கு’ என்று ஆரம்பித்தவர் ‘பயத்தைப் போக்கு’ என்று முடிக்கிறார். போக வேண்டியதைப் போக்கிக் கொள்ளவேண்டியது, வரவேண்டியதை வரவழைத்துக் கொள்வைதவிட முக்யம். முதலில் இதைச் செய்துகொண்டால்தான் அப்புறம் அதைச் செய்து கொள்ளமுடியும். செய்துகொள்வது, போக்கிக்கொள்வது என்றாலும் அது நம்மாலாகிற கார்யமா? இல்லை. அவனுடைய அருள்தான் அப்படிப் போக்க வைக்கவேண்டும். அதனால்தான் ஆரம்பம் முடிவு இரண்டிலும், போகவேண்டிய இரண்டை – திமிரையும் பயத்தையும் – போக்கு, ‘அபநய’, என்று வேண்டிக் கொள்கிறார். பயம் என்பது திமிருக்கு நேரெதிர். பூஞ்சை மனஸைக் காட்டுவது. உத்தமமானவருக்குத் திமிரும் இருக்காது, பூஞ்சையான பயங்காளித்தனமும் இருக்காது. நமக்கு இரண்டும் இருக்கிறது. சிலவற்றைக் குறித்துத் திமிர், சிலவற்றைக் குறித்து பயம் என்று இருக்கிறது. இது இரண்டையும் போக்கிக்கொள்ள பகவானை ப்ரார்த்திக்கச் சொல்லிக் கொடுக்கிறார் ஆசார்யாள்.
ஒரு ச்லோகத்தின் முடிவு வார்த்தை அடுத்ததன் ஆரம்பமாக இருப்பதைத்தான் அந்தாதி என்பது. ‘உத்த்ருத நக’வில் ஒரே ச்லோகத்துக்குள்ளேயே ஆசார்யாள் அந்தாதி விளையாட்டுப் பண்ணியதைப் பார்த்தோம். இப்போது ஆறு ச்லோகம் கொண்ட முழுச் ஸ்தோத்ரத்துக்குமாகச் சேர்த்து முதல் வார்த்தையான ‘அபநய’ என்பதையே கடைசியிலும் போட்டு ஒரு விநோதமான அந்தாதி பண்ணியிருப்பதைப் பார்க்கிறோம். முதல் வார்த்தை, கடைசி வார்த்தை என்பதற்குப் பதில் முதல் வினைச்சொல், கடைசி வினைச்சொல் என்று வைத்துக்கொள்வதுதான் இன்னும் ஸரியாயிருக்கும். முதல் வார்த்தை ‘அவநிய’ என்பதே. அதையடுத்து முதல் வினைச்சொல்லாக ‘அபநய’ வருகிறது கடைசி வார்த்தைகள் ‘அபநய த்வம் மே’. ‘அபநய’வுக்கு அப்புறம் ‘த்வம் மே’ இருக்கிறது. ஆனால் வினைச்சொல்லில் எது கடைசி என்று பார்த்தால் ‘அபநய’தான்!
Verb என்பதைத் தமிழில் வினைச்சொல் என்றும், ஸம்ஸ்க்ருதத்தில் க்ரியா பதம் என்றும் சொல்கிறோம். இதிலிருந்து, அது ஒரு வேலையைக் கொடுப்பது என்று தெரிகிறது. இப்படி, நம்மை விடாமல் ஒரு வேலை வாங்குவதற்கே ஸூக்ஷ்மமாக இப்படி ஷட்பதீ ஸ்தோத்ரம் முழுதையும் வினைச் சொல்லால் ஒரு அந்தாதியாக ஆசார்யாள் பண்ணியிருக்கிறார் போலிருக்கிறது! ஆரம்ப verb-ஐ முடிவிலே போட்டதால், “மறுபடியும் ‘அவிநயம் அபநய’ என்று அந்தாதிக்ரமத்திலே ஆரம்பி. அதாவது, திரும்பத் திரும்ப இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் பண்ணு” என்று வேலை கொடுக்கிற மாதிரி இருக்கிறது!