இதற்கு அடுத்ததாக வரும் ஏழாவது ச்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின் சிறப்பை, பலனைச் சொல்கிற பலச்ருதி மாதிரியானது.
‘ஷட்பதீ’ என்றால் ஆறு செய்யுள்கள் என்று அர்த்தம் பண்ணினால், அது
தாமோதர குணமந்திர
ஸுந்தர வதநாரவிந்த கோவிந்த |
பவஜலதி மதந மந்தர
பரமம் தரம் அபநய த்வம் மே ||
என்கிற ச்லோகத்தோடு முடிந்துவிடுகிறது.
ஜயதேவர் பாடிய ‘கீத கோவிந்த’த்திலுள்ள பாட்டுக்களை ‘அஷ்டபதி’ என்பது எதனால்? அந்தப் பாட்டு ஒவ்வொன்றிலும் எட்டு அடிகள் இருப்பதனால்தானே? இவ்வாறு பதம் என்பது வார்த்தையை மட்டுமின்றி ஒரு முழுச் செய்யுளை, ச்லோகத்தைக் குறிப்பிடுவதாகும் என்று முன்னேயே சொன்னேன். ‘அஷ்டபதி’ என்பது எட்டு ச்லோகமென்பதுபோல், ‘ஷட்பதீ’யும் ஆறாம் ச்லோகத்தோடு பூர்த்தியாகிவிட்டது என்று அர்த்தம்.
நூற்சிறப்பு அல்லது பயனை ‘பலச்ருதி’ என்று சொல்கிற மரபுப்படியே, ஏழாவதாக ஒரு ச்லோகம் வருகிறது.
கீதையில் பகவான் சொன்ன மாதிரியே ஆசார்யாளும் ஆதிவார்த்தையை அந்தத்தில் வைத்திருக்கிறார் என்று சொன்னேனல்லவா? ஆசார்யாள் கீதையின் ‘மாடலை’ புத்தி பூர்வமாக நினைத்தே (கீதையை இந்த ஸ்தோத்ர அமைப்புக்கு முன்னோடி என்ற புத்திபூர்வமாக எண்ணியே) இப்படிச் பதப்ரயோகம் பண்ணியிருப்பார் போலிருக்கிறது என்று ஏழாம் ச்லோகத்தைப் பார்த்தால் தோன்றுகிறது. ஏனென்றால் இதிலே கீதையின் கடைசி ச்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சரணாகதியைத்தான் ஆசார்யாளும் சொல்கிறார்.
நாராயண, கருணாமய,
சரணம் கரவாணி தாவகௌ சரணௌ |
இதி ஷட்பதீ மதீயே
வதந ஸரோஜே ஸதா வஸது ||
என்பது ஷட்பதீக்கு பலச்ருதி மாதிரி உள்ள ஏழாவது ச்லோகம்.
‘பலச்ருதி மாதிரி’ என்று ஏன் சொல்கிறேன் என்றால், இதிலே ஆசார்யாள் அசல் பலச்ருதியாக, ‘இந்த ஸ்துதிக்கு இன்னின்ன பலன்’ என்று உடைத்துச் சொல்லாமல், மறைமுகமாக நாம் ஊஹித்துப் புரிந்து கொள்ளும் விதத்திலேயே பலனைச் சொல்லியிருப்பதால்தான்! ரொம்பவும் விநய சீலரான நம் ஆசார்யாள் ‘சிவாநந்த லஹரி’, ‘ஸௌந்தர்ய லஹரி’ முதலியவ்றறின் முடிவில்கூட, ‘இந்த ஸ்தோத்ரத்தைச் சொன்னால் இப்படியாகப்பட்ட பலன்கள் வரும்’ என்று பலச்ருதி சொல்லவில்லை. ஸூசனையாகவே தெரிவித்திருக்கிறார்.
‘நாராயண – நாராயணனே! கருணாமய – கருணை மயமானவேன! தாவகௌ சரணௌ – உன்னுடைய இரண்டு பாதங்களை; சரணம் கரவாணி – சரணமாக, அடைக்கலமாகக் கொள்கிறேன். இதி – இப்படிப்பட்ட; ஷட்பதீ – ஷட்பதீயானது; மதீயே – என்னுடைய; வதந ஸரோஜே – வாய் என்கிற தாமரையில்; ஸதா- எப்பொழுதும்; வஸது – வஸிக்கட்டும்.’
ஷட்பதீ ஸ்தோத்ரம் தம்முடைய வாக்கில் ஸதா இருக்கட்டும் என்று ஆசார்யாள் சொல்வதற்கு அர்த்தம், சற்று முன்னால் நான் சொன்னறாப்போல அதை நாம் திரும்பத் திரும்ப ஜபித்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதே.
‘தாவகௌ சரணௌ’ என்கிறபோது Charanau என்று சொல்லவேண்டும். ‘சரணம் கரவாணி’ என்னும்போது சங்கரன், சங்கு, சட்டை என்பதில் சொல்கிற ‘ச’வாக saranam என்று சொல்லவேண்டும். Charanam என்றால் கால், Saranam என்றால் அடைக்கலாம், புகலிடம்.
த்வைத, விசிஷ்டாத்வைத, அத்வைத வித்யாஸங்களை நினைக்காமல் பக்தி பரவசத்தில் எப்படியெப்படி பாவம் வருகிறதோ அப்படியெல்லாம் ஆசார்யாள் இந்த ஸ்தோத்ரத்தைப் பண்ணிக்கொண்டு போயிருக்கிறார் என்று நடுநடுவே தெரிந்தது அல்லவா? ஸ்வச்சமான அத்வைதம் என்று பார்த்தால் அதிலே சேராத ஸகுண ப்ரஹ்ம வர்ணனை, ஸமுத்ரத்துக்கு அலை அடக்கமானதே என்பது போல ஈச்வரனுக்கு ஜீவன் அடங்கினவன் என்கிற தத்வம் ஆகியவற்றை இந்த ஸ்தோத்திரத்தில் ஆசார்யாள் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். முடிக்கிறபோதும் அத்வைதத்துக்கு முக்யமான ஞான மார்க்கத்தைச் சொல்லாமல், பக்திக்கு ப்ரதானமாக இருக்கிற சரணாகதியைத்தான் சொல்லியிருக்கிறார்.
சரணம் கரவாணி தாவகௌ சரணௌ