ஆறு ச்லோகமும் ஆறு வார்த்தையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘இதி ஷட்பதீ மதீயே வதந ஸரோஜே ஸதா வஸது’ என்பதற்கு, ‘இந்த ஆறு ச்லோகங்கள் கொண்ட ஷட்பதீ ஸ்தோத்ரம் என் வாய் என்கிற தாமரையில் எப்போதும் இருக்கட்டும்’ என்று அர்த்தம் பண்ணிக்கொண்டால் ‘ஷட்பதீ’ என்பது ‘ஆறு ச்லோகம், என்ற பொருள் கொடுக்கும். ‘பதம்’ என்றால் ‘ச்லோகம்’ என்று பொருள் கொள்ளாமல் ‘வார்த்தை’ என்றே அர்த்தம் செய்து கொண்டாலும் பொருத்தமாக அமைகிறபடி இங்கே ஆசார்யாள் ஒரு வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார். ‘இந்த ஆறு வார்த்தைகள் என் வாய்த் தாமரையில் எப்போதும் இருக்கட்டும்” என்றும் ஒரு பொருள் கொள்ள இடமிருக்கிறது. அதுவும் பொருத்தமானதே! எப்படி? எந்த ஆறு வார்த்தைகள்?

ச்லோகத்தின் முதல் பாதியில் வருகிற ஆறு வார்த்தைகள்தான்! ‘நாராயண’, ‘கருணாமய’, ‘சரணம்’, ‘கரவாணி’, ‘தாவகௌ’, ‘சரணௌ’ என்ற ஆறு வார்த்தைகள்தானே முதல் பாதியில் இருக்கின்றன? ‘கருணாமயமான நாராயணா! உன் இணையடியில் சரண் புகுகிறேன்’ என்ற இந்த ஆறு வார்த்தைகள் ஸதா ஸர்வ காலமும் தம் வாய்த் தாமரையில் இருக்கவேண்டும் என்று சொல்வதாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

ஷட்பதீயின் முதல் ஆறு ச்லோகங்களையோ அல்லது ஏழாவது ச்லோகத்தின் முதல் பாதியான ஆறு வார்த்தைகளையோ எப்போது பார்த்தாலும் சொல்லிக்கொண்டேயிருந்தால் பகவத் அநுக்ரஹம் கிடைத்துவிடும். ‘விநயமின்மை போகவேண்டும்; மனஸின் ஓட்டம் நிற்கவேண்டும்; ஜீவதயை வ்ருத்தியாக வேண்டும்; ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடத்தப்பட வேண்டும்; ஸம்ஸார ஸாகரத்தைக் கடைகிற மத்தாக பகவானே வந்து அம்ருதத்தை – அமரத்தன்மையை – அநுக்ரஹிக்க வேண்டும்’ என்றெல்லாம் இந்த ஸ்தோத்ரத்தில் ஆசார்யாள் பல ப்ரார்த்தனைகளைச் சொன்னாரல்லவா? அந்த ப்ரார்த்தனையெல்லாம் இந்த அறு ச்லோகங்களையும், அவற்றுக்குப் பிறகு வரும் ஆறு வார்த்தைகளையும், ஸதா சொல்லிக்கொண்டிருப்பதாலேயே நிறைவேறிவிடும் என்று சொல்லாமல் சொல்கிற பலச்ருதியாக ஏழாவது ச்லோகம் இருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பலச்ருதி போன்ற சரணாகதி விண்ணப்பம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'வண்டு'ப் புதிர் அவிழ்கிறது
Next