‘மதீயே வதந ஸரோஜே’ – ‘என்னுடைய வாயான தாமரையில்’ என்று ஏன் சொன்னார்? ‘என் வாய்’ என்றாலே போதும். வதநம் என்றாலே போதும். வாய்த்தாமரை, வதந ஸரோஜம் என்று அதற்கு ஏன் ஒரு அடைமொழி கொடுத்தார்? பகவானைப் பற்றி நயன கமலம், முகத்தாமரை, பாதபத்மம் என்று சொன்னால் ஸரியாகப்படுகிறது. இந்த ஸ்தோத்ரத்திலே இப்படி பகவானுடைய பாத கமலத்தையும் (ஸ்ரீபதி பதாரவிந்தே) முக கமலத்தையும் (ஸுந்தரவதநாரவிந்தே) முன் ச்லோகங்களில் சொன்னது ஸரி. ஆனால் பக்தனான தன்னைச் சொல்லிக்கொள்ளும்போது ஏன் ‘வதந ஸரோஜே’ என்று தாமரையோடு வாயை ஒப்பிட்டுக்கொள்ளவேண்டும்?
பலச்ருதியைக்கூட விண்டு சொல்லாத அளவுக்கு விநய ஸம்பத் படைத்த ஆசார்யாள். ‘அவிநயத்தைப் போக்கு’ என்றே இந்த ஸ்துதியை ஆரம்பிக்கிற ஆசார்யாள், இங்கே இப்படித் தம்முடைய வாயை ‘வதந ஸரோஜே’ என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பித்துச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு.
இந்த ஸ்தோத்ரத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது ‘ஷட்பதீ’ என்றால் ‘ஆறுகால் உடைய வண்டு’ என்று அர்த்தம் சொல்லி, இதில் ஆறு ச்லோகம் இருப்பதாலும், வண்டு ஸம்பந்தம் இருப்பதாலும்தான் ஆசார்யாள் ச்லேஷையாக ‘ஷட்பதீ ஸ்தோத்ரம்’ என்று பெயர் வைத்தார் என்று சொன்னேன் அல்லவா? வண்டு என்பது எப்படிப் பொருந்தும் என்கிற புதிர் இங்கேதான் அவிழ்கிறது.
‘ஆறு ச்லோகம் – அதோடு (ஏழாவது ச்லோகத்தின்) ஆறு வார்த்தைகள் – ஸதா என் வாக்கில் இருக்கட்டும்’ என்று ஆசார்யாள் சொல்லவந்தார். அப்படிச் சொல்கிற போது ‘ஷட்பதீ’ என்றால் வண்டுக்கும் பேர் அல்லவா என்று தோன்றி விட்டது. வண்டு என்கிற அர்த்தத்தில் ‘ஷட்பதீ’ என்கிற வார்தையை ஆசார்யாள் ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்திலும், ‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் உபயோகித்திருக்கிறார்
திருச்செந்தூர் முருகன் மீது ‘புஜங்கம்’ பாடி ப்ரார்த்திக்கும்போது, ‘ஹே ஸ்கந்தா! பத்மத்தில் வண்டு மொய்த்துக் களிக்கிறது போல் பவ வினையால் க்லேசமுற்றுக் கொதிக்கும் என் மன வண்டானது உன் பாதபத்மத்தில் ஸதா ரமித்துக் கொண்டிருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அங்கே,
மந: ஷட்பதோ மே பவ க்லேச தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே
என்கிறார்.
வண்டுக்கு ப்ருங்கம், ப்ரமரம், மதுபகம் என்றெல்லாமும் பெயர் இருக்க, அதை மனஸுக்கு ஒப்பிடும்போது ஷட்பதப் பெயரை ஏன் குறிப்பிட்டார் என்பது ‘ஸெளந்தர்ய லஹரி’யில் வெளியாகிறது. அதில் (ஸெளந்தர்ய லஹரியில்) ‘பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற ஐந்து கரணங்களோடும் மனஸ் என்ற ஆறாவது கரணத்தோடும் சேர்ந்தால் ஆறுகால் கொண்ட வண்டு போலிருக்கிற என் ஜீவனானது உன் பாதபத்மத்தில் புதைந்து கிடக்கட்டும்’ என்று அம்பாளிடம் ப்ரார்த்திக்கிறார்.
நிமஜ்ஜன் மஜ்ஜீவ: காரண சரண: ஷட்சரணதாம் |
பதம், சரணம் இரண்டும் காலைக் குறிக்கும். ‘ஷட்சரண’ என்றால் ஷட்பதமான வண்டு என்றுதான் அர்த்தம்.
மனஸை ஐந்து இந்த்ரியங்களோடு ஆறாவதாகச் சொன்னாலும் மற்ற ஐந்தையும்கூட ஆட்டிப் படைப்பது அதுதான், அதனால் மனஸையே அதுவும், அதன் ஐந்து அங்கங்களான பஞ்சேந்தரியங்களும் கொண்ட ஆறுகால் வஸ்துவாகச் சொல்வதுண்டு. அதனால்தான் ‘மன: ஷட்பதோ’ என்றார்.
ஆகையால் இங்கே, ‘ஆறு ச்லோக – ஆறு வார்த்தை – ஷட்பதீ என் வாயில் எப்போதும் இருக்கட்டும்’ என்று சொல்ல வந்தபோது அவருக்கு வண்டு நினைவு வந்து விட்டது. வண்டு ஸதா இருக்கிற இடமாகத் தம் வாய் இருக்கவேண்டுமென்றால் அந்த வாயானது தாமரைப் பூவாக இருந்தால்தானே முடியும்? வண்டு தாமரையைத் தானே ஸதா மொய்க்கும்? அதனால்தான் ‘வதந ஸரோஜே’ என்று போட்டுவிட்டார்!
ஸ்ரீபதியின் பதாரவிந்தத்தை, ஸுந்தர வதநாரவிந்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிற ஒரு பக்தனின் வாயும் அரவிந்தமாக ஆகிவிடுமாதலால், ‘என் வாய்த்தாமரை’ என்று போட்டதில் எந்த அநுசிதமும் இல்லை. அந்த வதன ஸரோஜத்தில் உள்ள வண்டு எது என்றால் அதுதான் ஷட்பதீ ஸ்தோத்ரம்.
‘வண்டு ஸ்தோத்ரம்’ என்ற நாமகரணம் இப்போது புரிந்துவிட்டதல்லவா? புதிர் அவிழ்ந்து விட்டதல்லவா?
வதந ஸரோஜத்தை – முக கமலத்தை – சொல்கிற போது ஆசார்யாளைப் பற்றி அவரது நேர் சிஷ்யரான பத்ம பாதாசார்யாளும், பிற்பாடு அப்பய்ய தீக்ஷிதரும் பண்ணின ச்லோகங்கள் மறுபடி நினைவு வருகின்றன. முன்பே சொன்னேன்*. ஆசார்யாளின் முகமாகிற மாநஸ ஸரஸிலே வாயாகிற தாமரையில் பாஷ்யம் என்கிற தேன் பொழிகிறது என்றும் அதை சிஷ்ய கணங்களான வண்டுக் கூட்டம் பருகுவதாகவும் சொன்னேன். அப்பய்ய தீக்ஷிதர் ச்லோகத்தில் விஷ்ணுவின் பாதகமலத்திலிருந்து கங்கை பெருகினது போல, ஆசார்யாளின் முக கமலத்திலிருந்து பாஷ்யம் பெருகிற்று என்கிறார். ‘பகவத்பாத ஸ்ரீமன் முகாம்புஜ’ என்கிறார். முகாம்புஜம் (முக அம்புஜம்) என்பதும் ‘ஷட்பதீ’ முடிவில் சொல்லும் ‘வதந ஸரோஜம்’ என்பதும் ஒன்றுதான். அந்த பகவத்பாதாளே இந்த ‘ஷட்பதி’யின் இரண்டாவது ச்லோகத்தில் ஸ்ரீபதியின் பாதாரவிந்தத்திலிருந்து தேவகங்கை பொழிகிறதைப்பற்றிச் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். ஜனன மரணமாகிய பவபய கேதங்களை பகவானின் பாதம் போக்குகிறது என்று இங்கே நம் பகவத் பாதாள் சொல்கிறாரென்றால், அப்பய்ய தீக்ஷிதரோ ஆசார்ய பாஷ்யத்தையே ‘ஜநந ஹரணி’ (பிறவியைப் போக்குவது) என்கிறார்!
ஸுப்ரஹ்மண்யர், அம்பாள் முதலியவர்களின் பாத கமலத்தில் தமது உள்ளம் வண்டாகப் படியவேண்டும் என்று ஆசார்யாள் சொல்கிறாரென்றால், பழங்காலத்துக் கம்போடியா தேசக் கல்வெட்டில், நம் ஆசார்யாளுடைய பாத கமலத்தில் ஸகல பண்டிதர்களுடைய தலைகளும் வண்டுக்கூட்டம் மாதிரி மொய்த்துக் கொண்டிருப்பதாக இருக்கிறதென்று முன்னே சொன்னேன். இப்படிப் பல தினுஸில் வண்டுப் பொருத்தமுள்ள ஆசார்யாள் ‘வண்டு ஸ்தோத்ரம்’ என்றே ஒன்று பண்ணியிருப்பது ந்யாயம் தானே? இன்னொரு பொருத்தம் சொல்கிறேன்:
நம் ஆசார்யாளுக்கு அவருடைய குருவான கோவிந்த பகவத்பாதர்களிடமிருந்த பக்தியைப்பற்றிச் சொன்னேல்லவா? இதற்கேற்றாற்போல், இங்கே மடத்திலே, ராஜாக்களுக்கு பராக் சொல்கிற மாதிரி நம் ஆசார்யாளுக்குச் சொல்லும்போது, ‘ஜயகோவிந்த பகவத்பாத பாதாப்ஜ ஷட்பத’ என்று ஆரம்பிக்கிறோம். கோவிந்த பகவத்பாதாளின் பாதாரவிந்தத்தில் நம் ஆசார்யாள் ஷட்பதமாக (வண்டாக) இருந்தார் என்று அர்த்தம். இப்படியாக, தாமரை – வண்டு இவற்றின் ஸம்பந்தம் ஆசார்யாளின் குருவான கோவிந்த பகவத்பாதாள், ஆசார்யாள், அவருடைய சிஷ்யரான பத்மபாதர் என்று தொடர்ந்து வருகிறது. பகவானின் முக கமலம், பாத கமலம் இவற்றோடு அந்த பகவானை ஸ்தோத்ரிக்கும் பகவத்பாதாளின் முக கமலம், பாதகமலம் இவற்றையும் ஸ்மரிக்கிற பாக்யம் நமக்கு ஏற்படுகிறது.
‘ஸதாஸர்வ காலமும் இந்த ஷட்பதீ என்று வாக்கில் இருக்கட்டும்’ என்று ஆசார்யாள் ப்ரார்த்தித்து, நம் எல்லோர் பொருட்டும் அவர் செய்த ப்ரார்த்தனையாகும். இந்த ‘வண்டு ஸ்தோத்ரம்’ மொய்க்கிற தாமரைகளாக நம் எல்லோருடைய வாயும் ஆகவேண்டும். அப்படியிருந்தால் பஞ்சேந்த்ரியமும் மனஸும் சேர்ந்து ஷட்பதமாக இருக்கிற நம்முடைய ஜீவனாகிற வண்டு எப்போதும் பகவானின் பாத கமலததில் படிந்துகிடக்கும். ஆரம்பத்தில், ‘தமய மந: சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்……தாரய ஸம்ஸார ஸாகரத:’ என்கிறபோது ஆசார்யாள், மனஸும் இந்த்ரியங்களும் அடங்கி ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடைத்தேற்றுவிக்கப்பட வேண்டும் என்றுதான் ப்ரார்த்தனை செய்தார். கடைசியில் பகவானின் பாதங்களில் மனஸ், இந்த்ரியங்கள் எல்லாவற்றையும் சரணாகதி பண்ணுவதைச் சொல்லி முடித்திருக்கிறார். அழகாலும், அருளாலும் நம்மை வசீகரித்து, தன்னிலே நம் உள்ளத்தை லயிக்கப் பண்ணி, ஸுலபமாக நம்மை பவஸாகரத்தலிருந்து கரைசேர்ப்பது பகவானின் பாத கமலம்தான். அதுதான் ‘பகவத்பாதர்’ என்றே சொல்லப்படுகிற நம் ஆசார்யாள். அவரே பகவானின் பாதகமலம் என்றால் அதிலும் அவரது முகம் ஒரு கமலமாக இருக்கிறது. அதிலே ஸதாவும் இருக்கிற வண்டு ஷட்பதீ ஸ்தோத்ரம். அது ஆசார்யாளுடைய வாக்குத் தேனையும், அதன் வழியாக பகவானின் அருள்தேனையும் நமக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கட்டும்!
அவிநய – மபநய விஷ்ணோ
தமய மந:சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் |
பூத – தயாம் விஸ்தாராய
தாரய ஸம்ஸார – ஸாகரத: || 1 ||
திவ்ய – துநீ மகரந்தே
பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே |
ஸ்ரீபதி பதாரவிந்தே
பவ – பய – கேத – ச்சிதே வந்தே || 2 ||
ஸத்யபி பேதாபகமே
நாத தவாஹம் ந மாமகீநஸ் – த்வம் |
ஸாமுத்ரோ ஹி தரங்க:
க்வசந ஸமுத்ரோ ந தாரங்க: || 3 ||
உத்த்ருத – நக நகபிதநுஜ
தநுஜகுலாமித்ர மித்ர – சசி – த்ருஷ்டே |
த்ருஷ்டே பவதி ப்ரபவதி
ந பவதி கிம் பவ – திரஸ்கார: || 4 ||
மத்ஸ்யாதிபி – ரவதாரை –
ரவதாரவதா – வதா ஸதா வஸுதாம் |
பரமேச்வர பரிபால்யோ
பவதா பவ – தாப – பீதோஹம் || 5 ||
தாமோதர குணமந்திர
ஸுந்தர – வதநாரவிந்த கோவிந்த |
பவ – ஜலதி – மதந மந்தர
பரமம் – தர – மபநய த்வம் மே || 6 ||
* * *
நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ
இதி ஷட்பதீ மதீயே வதந – ஸரோஜே ஸதா வஸது ||
ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தநம்!
கோவிந்தா, கோவிந்தா!
* இவ்வுரையில் ‘சங்கரரும், சிஷ்யர்களும், விநயமும்’ என்ற பிரிவு பார்க்க.