அரசருக்கும் மேலே! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை;

கற்றோர்க்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்பு1

-இப்படி அவ்வைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். அப்படிச் சொல்ல அவளுக்கு ரொம்ப உரிமை உண்டு.  அவளுக்குச் சென்ற இடமெல்லாம் ஒரே சிறப்பாக, போகிற இடங்களெல்லாம் ஒரே புகழாகத்தான் இருந்தது. மன்னர்களுக்கு மேலே அவள்தான் கொடிகட்டிப் பறந்தாள். சேர, சோழ, பாண்டிய, மன்னர்கள் மூன்று பேருமே அவள் ஒன்று சொல்லிவிட்டால் அதை ரொம்பவும் மரியாதையோடு கேட்டுக் கொண்டார்கள்.

கவிகளை ரொம்பவும் ஆதரித்த பாரி வள்ளல் காலமாகி, அவனுடைய இரண்டு பெண்கள் அநாதைகயாக நின்றபோது அவ்வைதான் மிகவும் நன்றியறிதலோடு அவர்களுக்கு வரன் தேடிக் கல்யாணம் பண்ணிவைத்தாள். அந்தக் கல்யாணத்துக்கு அவள் அழைப்போலை (இன்விடேஷன்) அனுப்பினாள் என்பதற்காக மூவேந்தர்களுமே வந்துவிட்டார்கள். பரஸ்பரம் குஸ்தி போட்டுக் கொள்பவர்களனாலும் அவ்வையின் அழைப்பைத் தட்டப்படாது என்றே வந்து அப்படி மூன்று பேரும் ஒன்று சேர்ந்ததைப் பார்த்தவுடன் அவள் ரொம்பவும் ஸந்தோஷமடைந்தாள். “இரு பிறப்பாளர்களான ப்ராமணர்கள் வளர்க்கிற கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி என்ற த்ரேதாக்னி (முத்தீ) மாதிரியல்லவா நீங்கள் மூவரும் ஒரே இடத்தில் சேர்ந்து ஜ்வலிக்கிறீர்கள்” என்று பாடினாளாம். புறநானுற்றிலே அந்தப் பாட்டு இருக்கிறது2.

பொம்மனாட்டி, அதிலும் கிழவி, கூழுக்குப் பாடுவது என்று அத்தனை எளிமையாக இருந்தவள் அவ்வை. ஆனாலும் ராஜாக்களும் அவள் சொல்வதை பயபக்தியோட கேட்டுக்கொண்டார்களென்றால் அதற்குக் காரணம் அவள் கற்றவளாயிருந்ததுதான்.

கவிகள், பாவாணர்கள் என்பவர்கள் ரொம்பவும் கற்றறிந்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் ராஜாவுக்கு மேலே, சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெற்றிருந்தார்கள்.

இப்படித் தங்களுக்கு இருக்கிற சிறப்பை அவர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள். அதனாலேயே ஒரு ராஜாவுக்குக் கூடத் தாங்கள் ஸலாம் போட வேண்டியதில்லை என்பதாக ரொம்பவும் மானம், ரோஷம், தைர்யம் உள்ளவர்களாக இருந்தார்கள். இப்படி அவர்கள் இருந்ததற்கு அந்தக் கிழப்பாட்டி,

மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை;

கற்றோர்க்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்பு

என்று தைர்யமாகப் பாடி ப்ரசாரம் பண்ணியதே பெரிய சான்று!


1 மூதுரை (வாக்குண்டாம்) 26

2ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர்
முத்தீ புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் (புறம் 367)

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'வண்டு'ப் புதிர் அவிழ்கிறது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மஹான் -கவி வித்யாஸம்
Next