ரொம்பவும் ஞானியாக, பக்திமானாக ஆகிறபோது மானாவமானம், த்வேஷ – ரோஷங்கள் இருக்காது, இருக்கப்படாது. ஆனாலும் கவிகளை அப்படிப்பட்ட மஹான்கள் கோஷ்டியிலே வைப்பதற்கில்லை. ஸாதாரண ஜனங்களை விடக் கவிகள் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். அழகு – அதிகாரம் – ஸொத்து முதலியவற்றால் பெரியவர்களாயிருப்பவர்களை விடவுங்கூடத் கற்றறிந்த கவிவாணர்கள் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்தான். என்றாலும் லோகம், லோக வாழ்க்கை வேண்டாமென்று பாரமார்த்திகமாகப் போய் விட்ட பக்தர்களோடு, ஞானிகளோடு அவர்களைச் சொல்வதற்கில்லை.
மஹா பக்திமான்களிலும் பரம ஞானிகளிலுங்கூட உத்தமமான கவிகளாக ரொம்பப் பேர் இருந்திருக்கிறார்கள். வேத ரிஷிகளிலிருந்து ஆரம்பித்து வால்மீகி, வ்யாஸர், அப்புறம் நம் ஆசார்யாள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், வேதாந்த தேசிகர், இன்னும் ஞானதேவர், துளஸிதாஸ், புரந்தரதாஸர், போதனா என்று நம் தேசத்தில் ஆத்மிகமாக மிகவும் உயர்வைப் பெற்றவர்களே மஹாகவிகளாகவும் இருந்திருக்கிறார்கள். “நான் – ரிஷி; காவ்யம் குர்வதே”, அதாவது, ரிஷியாக இருப்பவனைத் தவிர இன்னொருத்தனால் காவ்யம் பண்ணமுடியாது என்றே வசனம் இருக்கிறது. வேதத்தில் ‘கவி’ என்றாலே ‘ரிஷி’ என்றுதான் அர்த்தம். கவிக்கு லக்ஷணம் சொல்லும்போது “க்ராந்த தர்சி” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஸகல ஸத்யத்தையும் தெரிந்துகொள்கிற திறமை வாய்ந்தவனே கவி என்று அர்த்தம். அதற்கேற்ப நம் தேசத்து மஹான்களெல்லாம் கவிகளாக இருந்திருக்கிறார்கள்.
நான் இங்கே அவர்களைச் சொல்லவரவில்லை. அந்த ஆதி வேத இதிஹாஸ காலத்துக்கப்புறம் காவ்யம் இலக்கியம் படைப்பதே வாழ்க்கையாகக் கொண்டிருந்தவர்களைத்தான் சொல்ல வந்தேன். கவி, இலக்கிய ஸ்ருஷ்டி கர்த்தா என்பதாகவே முக்யமாக நினைக்கப்படுபவர்களைப் பற்றிச் சொல்லவந்தேன்.
அக்காலங்களில் ராஜாதான் கலைகளை ரொம்பவும் ஆதரித்து, கலைகளை ஸம்மானிக்கிற patron -ஆக இருந்தான். அதனால் ராஜ ஸதஸில் இடம் பெறவேண்டும், ராஜாவிடமிருந்து ‘அக்ஷர லக்ஷம்’ என்கிற மாதிரியாக யதேஷ்டமான ஸம்பாவனை பெறவேண்டும் என்கிற ஆசையில் ராஜாவை ரொம்பவும் ஸ்துதி பாடிய கவிகளும் வித்வான்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் அப்படியில்லாமல், ஸ்வய மரியதைக்குக் குறைவாக இருக்கிறது என்னும்போது, ‘ராஜாவும் கெட்டான், ராஜ ஸதஸும் கெட்டது’ என்று உதறிவிட்டுப் போன கவிகளும் இருந்திருக்கிறார்கள். ஸம்ஸ்க்ருத கவிகளில் ப்ரதம ஸ்தானம் வஹிக்கும் காளிதாஸன், தமிழ்க் கவிஞர்களில் முதலிடம் பெற்ற கம்பர் ஆகிய இரண்டு பேர் விஷயத்திலுமே இப்படி நடந்திருக்கிறது.