மன்னனைப் பொருட்படுத்தாத மஹான்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மஹான்கள் ராஜ ஸதஸ் வேண்டாம் என்று ஒதுக்கினால் அதில் ரொம்ப ஆச்சரியப்படும்படியாக எதுவுமில்லை. ‘ராஜாவே கூப்பிடுகிறான். அதனாலே எத்தனையோ பேரும் புகழும் பெறலாம்’ என்னும்போது, அந்த வச்யத்துக்கு ஆட்படாமல் அவர்கள் இருந்ததற்கு நாம் மதிப்புக் கொடுக்கவேண்டும்தான். இப்படி, த்யாகையர்வாள், சரபோஜி ராஜா கூப்பிட்டபோது, “ராஜாவுடைய நிதி ஸெளக்யம் தருமா? ராமனுடைய ஸந்நிதி ஸெளக்யம் தருமா?” என்று பாடினதை எல்லாரும் கொண்டாடிச் சொல்கிறோம், இப்படியே இன்னும் அநேக மஹான்களும் ஈச்வரனைத் தவிர ராஜா, கீஜா யாரைப் பற்றியும் பாடுவதில்லை என்ற தங்கள் அபிப்ராயத்தை வெளியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

“வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்”

என்று நம்மாழ்வார் சொல்லியிருக்கிறார்.1

புலவர்களையெல்லாம் பார்த்து ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள். “அவனையும் இவனையும் எதற்காகப் பாடுகிறீர்கள்? சிவனையே பாடுங்கள்” என்று அறிவுறுத்தி ஒரு முழுப் பதிகமே பாடியிருக்கிறார்.2 “கொடுக்கிலாதானை” ஏன் பாரிவள்ளல் என்று புகழவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

சைவத்தை அப்பர் ஸ்வாமிகள் பரப்புகிறாரே என்று கோபங்கொண்டு, அப்போது ஜைன மதத்திலிருந்த மஹேந்த்ரவர்மப் பல்லவன் அவரைத் தண்டிப்பதற்காக ஆளனுப்பியபோது அவர் “நாமார்க்கும் குடியல்லோம்” பாடியதைவிட மஹான்களான கவிகளின் தீரத்துக்கு த்ரஷ்டாந்தம் இல்லை.

பக்தி, ஞானங்கள் போலவே பாண்டித்யத்திலும் சிறந்து விளங்கிய வேறே பல மஹான்களும் ராஜாவின் ஆஸ்தான வித்வானாயிருப்பதை த்ருண மாத்ரமாக உதறியிருக்கிறார்கள். ஆஸ்தான வித்வானாக மட்டுமில்லாமல் திருமலை நாயகருக்கு முக்ய மந்த்ரியாகவே இருந்தார் நீலகண்ட தீக்ஷிதர். அவர் ஒரு ஸமயம் நாயகரின் தகாத ஸந்தேஹத்துக்கு ஆளானபடியால், அப்புறம் அவர் (நாயகர்) தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு கொண்டுங்கூட, “போதும் ராஜஸேவகம்” என்று மந்த்ரி பதவியை ராஜிநாமா பண்ணிவிட்டுத் தாம் பாட்டுக்கு ஒதுக்குப்புறமான ஒரு க்ராமத்துக்குப் போய்ப் பரம வைதிகமாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்துவிட்டார். இனிமேல், தம்முடைய வம்சத்திலேயே எவரும் ராஜ ஸேவகத்துக்குப் போகப்படாது, என்றும் அவர் சொல்லிவிட்டதாகச் சொல்வார்கள். முடிவிலே ஸந்நியாஸமே வாங்கிக் கொண்டார்.3

வேதாந்த தேசிகரைப் பற்றிக்கூட இப்படிச் சொல்கிறார்கள். விஜய நகர ஸாம்ராஜ்யம் ஸ்தாபிதமானதற்குக் காரணமாயிருந்தவர் வித்யாரண்ய ஸ்வாமிகள், அவர் பேரிலேயே அவருடைய சிஷ்யர்களான ஹரிஹர – புக்க ஸஹோதரர்கள் “வித்ய நகரம்” என்று ஏற்படுத்திய ஸாம்ராஜ்யந்தான் “விஜய நகரம்” என்று திரிந்துவிட்டது. அவர் பரம அத்வைதி. (ஸ்ரீ சங்கர மடத்துப்) பீடத்திலேயே இருந்த அத்வைத ஆசார்யர். அஸாதராணமான பாண்டித்யம் பெற்றவர். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றபடி அவர் தேசிகரிடம் மதிப்புக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் தேசிகர் அத்வைதத்தைக் காரஸாரமாகக் கண்டித்த வைஷ்ணவ ஆசார்யபுருஷர். யாரானாலும் அவர்களுடைய புலமையைப் போற்றி கௌரவிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் வித்யாரண்யர். அவர் விஜயநகர ராஜ்யத்துக்கு ராஜகுருவாக இருந்ததால், அந்த ஆஸ்தானத்துக்கு வந்து அலங்கரிக்கும்படியாக தேசிகருக்கு அழைப்பு அனுப்பினார். ஆனால் தேசிகர் தமக்கெதற்கு ராஜ ஸதஸ் என்று அதை மறுதலித்துவிட்டார். அப்படி அவர் அனுப்பிய பதில்தான் ‘வைராக்ய பஞ்சகம்’ என்று ஐந்து ச்லோகங்கள் – என்று சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட பெரியவர்கள் – ‘மஹான்கள்’ என்ற கணக்கிலே சேர்க்கப்பட வேண்டியவர்கள் – பட்டம், பதவி, ராஜாவின் பஹுமானம் ஆகியவற்றை வேண்டாமென்று உதாஸீனம் செய்தது போற்றத்தக்கதுதான் என்றாலும் இதை நாம் விசேஷமாக ஆச்சர்யப்பட்டுக் கொண்டாடுவதற்கில்லை. கவிகள் என்றே லோக வாழ்க்கையை ரஸித்து நடத்திக் கொண்டிருந்தவர்களுங்கூட “ஆஸ்தான கவி” என்ற விருது வேண்டாம் என்று ஒதுக்கியதாக உள்ள எடுத்துக்காட்டுக்கள்தான் நாம் ஆச்சர்யப்பட்டுக் கொண்டாட வேண்டியவை.


1 மூன்றாம் பத்து – ஒன்பதாம் திருமொழி – ஒன்பதாம் பாடல்.

2 “தம்மையே புகழ்ந்திச்சை பேசினும்” என்று தொடங்கும் திருப்புகலூர் தேவாரம்.

3 மூன்றாம் பகுதியில் “ மீநாக்ஷி ” என்ற உரையில் விவரம் காணலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மஹான் -கவி வித்யாஸம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வைராக்கியமும் மான உணர்வும்
Next