குரு-ஆசார்ய ஒற்றுமை-வேற்றுமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

குரு யார், ஆசார்யர் யார், உபாத்யாயர் யார் என்றெல்லாம் தர்ம சாஸ்திரங்களில் definition (இலக்கணம்) கொடுத்திருக்கிறது.

உபநயனத்தில் ப்ரஹ்மோபதேசத்தில் (காயத்ரியை உபதேசிப்பதில்) ஆரம்பித்து முடிவான வேதாந்த தர்சனம் வரையில் எவர் கற்பிக்கிறாரோ அவரே குரு என்றும், ப்ரஹ்மோபதேசமில்லாமல் சாஸ்த்ரங்களை மட்டும் எல்லாவற்றிலுமோ, அல்லது சிலவற்றையோ போதிப்பவர் ஆசார்யர் என்றும் ஒரு பாகுபாடு உண்டு. த்ருஷ்டாந்தமாக, க்ருஷ்ணருக்கு உபநயனம் பண்ணியவர் கர்காசார்யர், வித்யாப்யாஸம் கொடுத்தவர் ஸாந்தீபனி என்ற வேறொருவர்.

பொதுவாக ‘குரு’ என்ற பதம் ஸம்ப்ரதாயக் கட்டில் அதிகம் வராமல் அருளினால் எவருக்கும் எதையும் சொல்லிக் கொடுப்பவரைக் குறிப்பதாகவும், ‘ஆசார்ய’ பதம் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் கட்டுத்திட்டமுள்ளதான போதனையை வித்வத்தினால் கொடுப்பவரைக் குறிப்பதாகவும் நினைக்கும் வழக்கமிருக்கிறது. இதற்குப் பொருந்துவதாக, தர்மசாஸ்த்ரங்களிலேயே ஒன்றில், எந்த பாஷையில் வேண்டுமானாலும் உபதேசம் தருபவர் குரு என்றும், வேத அத்யாபனம் மட்டும் பண்ணிவைப்பவர் ஆசார்யர் என்றும் சொல்லியிருப்பதாக ஞாபகம்.

குரு என்பவர் தத்தாத்ரேயரைப் போல, எந்தக் கட்டுப்பாடான ஸம்ப்ரதாயத்திலும் வராமல் அருள் சக்தியாலேயே ஆத்மாபிவ்ருத்தி அளிப்பவரென்றும், ஆசார்யர் என்பவர் கட்டுப்பாடான ஒரு ஸம்ப்ரதாயப்படி வரையறுக்கப்பட்ட ஸித்தாந்தத்தை விஸ்தாரமாக, நம் பகவத்பாதாளைப்போல போதிப்பவரென்றும் பொதுவாய் சொல்கிறோம்*. இதனால்தான் தத்தகுரு என்கிறோமே தவிர தத்தாசார்யர் என்பதில்லை. அறிவு வழியில் ஸிஸ்டமாடிக்காக உபதேசித்த பகவத்பாதாள் போன்றவர்களுக்கு அருள் சக்தியும் இருந்தபோது சங்கராசார்யர், சங்கர குரு என்று இருவிதமாகவும் சொல்வதாக ஏற்பட்டது. ஆனால் மேலே காட்டினாற்போல், சாஸ்த்ரங்களைப் பார்த்தால் definition-கள் வேறு விதமாய் இருக்கின்றன. தர்ம ப்ரமாணங்களில் எல்லோரும் குறிப்பிட்டுச் சொல்லும் மநு ஸ்ம்ருதியில் மேலே குருவுக்குச் சொன்ன இலக்கணத்தையேதான் ஆசார்யனுக்கும் சொல்லியிருக்கிறது. அதாவது, அவன் சிஷ்யனுக்குப் பூணூல் போட்டு காயத்ரி உபதேசிப்பதில் ஆரம்பித்து வேத சாஸ்த்ரங்கள் முடிய ஸகலமும் பாக்கியில்லாமல் கற்பிக்கணும் என்று சொல்லியிருக்கிறது.

உபநீய து ய: சிஷ்யம் வேதம் அத்யாபயேத் த்விஜ: |

ஸகல்பம் ஸரஹஸ்யம் ச தம் ஆசார்ய ப்ரசக்ஷதே ||

‘குரு’ என்பதற்கு ரொம்பவும் தெய்வத்தன்மை கொடுத்து இன்னொரு அர்த்தம் சொல்வதுண்டு. பரப்ரஹ்மம் என்பது குணமும் ரூபமும் இல்லாத வஸ்து. அப்படிப்பட்ட ஒன்றை எப்படி நாம் குண-ரூபங்களையே அறியக்கூடிய மனஸில் கொண்டு வருவது? இப்படிக் கொண்டு வருவதற்காகத்தான், ‘பரப்ரஹ்மே கருணையோடு குணத்தையும் ரூபத்தையும் தரித்துக் கொண்டு மநுஷ்யர் மாதிரி வருகிறது. அவரைத்தான் குணத்தைக் குறிப்பிடும் ‘கு’, ரூபத்தைக் குறிப்பிடும் ‘ரு’ ஆகிய இரண்டையும் சேர்ந்து ‘குரு’ என்று சொல்வது’ என்பதாக அர்த்தம் சொல்வதுண்டு.

ரொம்பவும் பூர்வத்திலே ஒவ்வொரு தகப்பனார்காரருமேதான் தன் பிள்ளைக்கு ப்ரஹ்மோபதேசம் செய்து வைத்துத் தனக்குத் தெரிந்த வித்யையைக் கற்றுக்கொடுத்து வந்தார். அப்போதிருந்த வித்யைகள் ரொம்பவும் குறைச்சல். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வித்யை குலதனம் மாதிரிப் பாரம்பர்யமாகப் போயிற்று. அப்போது அப்பாவேதான் குரு. ராமாயணம் மாதிரியான ரொம்பப் பழைய புஸ்தகங்களில் குரு என்று தகப்பனாரைத்தான் சொல்லியிருக்கும். பிற்காலத்திலும் காவ்யங்களில் அப்படிச் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

அப்புறம் வித்யைகள் அதிகமாகி, ‘ஏனிப்படி ஒவ்வொரு வித்யை ஒவ்வொரு குடும்பத்தோடு போகவேண்டும், கலந்து பரிவர்த்தனை பண்ணிக்கொள்வோமே!’ என்ற அபிப்ராயம் வளர்ந்தபின், இதர வித்யைகளைக் கற்றுக்கொள்வதற்காக அப்பாவை விட்டுப் பிள்ளை வேறே பெரியவர்களிடம் போகும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு வித்யை மாத்ரமின்றி அநேக வித்யைகளிலும் படுவான (தேர்ச்சி பெற்ற) பலர் உண்டானார்கள். அப்போது ஒரு வித்யை அல்லது ஒரு சில வித்யை மட்டும் தெரிந்த தகப்பனாரிடம் படிப்பதைவிட, முதலிலிருந்தே இப்படி அநேக வித்யைகளும் தெரிந்தவர்களிடம் பையனைப் படிக்க விடுவது நல்லது என்று தெரிந்தது. அப்படிப்பட்டவர்களிடமே பையன் ப்ரஹ்மோபதேசம் பெற்று அப்புறம் அவர்களுடைய ஆச்ரமத்துக்கே போய் குருகுல முறையில் படிப்பதாக ஏற்பட்டது.


* பகுதி மூன்றில் “குரு, ஆசார்யர்” என்ற உரையில் பெரும்பாலும் இக்கருத்தே அலசப்பட்டுள்ளது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is போதனை ஜீவனோபாயமாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வீட்டில் இல்லாத குருகுலச் சிறப்பம்சம்
Next