பிறகு தகப்பனாரே மஹா வித்வானாக இருக்கும்போது கூட இன்னொரு வித்வானிடம் பையனை சிக்ஷைக்கு விடுவதுதான் அவனைச் செல்லம் கொடுத்துக் கெடுக்காமல், நல்ல ஒழுக்கங்களோடு வளரும்படியாகக் கண்டிப்புச் செய்கிறது என்று தெரிந்ததால், யாரானாலும் குரு என்று வித்யாப்யாஸத்துக்கே ஒருத்தரை வரித்து அவரிடம் போய் குருகுலவாஸம் செய்து கல்வி கற்பது, அப்போது பிக்ஷை எடுத்து எளிமையையும் விநயத்தையும் கைக்கொள்வது என்ற வழக்கம் ஏற்பட்டது. இந்த வழக்கம் வந்தபோதுதான் அடியிலிருந்து நுனிவரை சொல்லிக் கொடுக்கும் குருவே பையனுக்கு ப்ரஹ்மோபதேசமும் பண்ணி வைப்பது என்று வந்தது.
வீட்டிலே படிக்கும்போது ஸ்வாதீனம், உறவுப் பாசம் ஆகியன கல்வி கற்பது, ஒழுக்கத்துடன் உருவாவது ஆகிய இரண்டுக்கும் ஊறு உண்டாக்கக்கூடும். ஆகவே குருகுல வாஸம்தான் வித்யையின் வளர்ச்சி, வித்யார்த்தியின் வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் ரொம்ப உகந்தது என்று புரிந்துகொண்டு அதையே நடைமுறையாக்கினார்கள்.
ஆனாலும் மஹான்களான பிதாமார்கள் குருகுலம் நடத்தியபோது அவர்களுடைய புத்ரர்களும் அதில் படித்ததாகவும் த்ருஷ்டாந்தங்கள் அங்கங்கே பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஒரு பிதா தாமும் கற்றுக் கொடுத்து, மற்ற குருமார்களிடம் புத்ரன் கற்று வருவதற்காக அனுப்பிவைப்பதையும் உபநிஷத்துக்களில் பார்க்கிறோம். தங்கள் ஸந்ததியின் அறிவு வ்ருத்தியாவதிலும், ஆத்மா சுத்தமாவதிலும் அவர்களுக்கு எத்தனை அக்கறையிருந்திருக்கிறது என்பதை நினைத்தால் ஆச்சர்யமாயிருக்கிறது.
இப்போது பெரும்பாலான தகப்பனார்களுக்கு இந்த இரண்டைப் பற்றியும் கவலையே இல்லை. எப்படியோ ஓரப்படி பிள்ளை பர்ஸ் நிறையக் கத்தை கொண்டுவந்துவிட்டால் போதுமென்ற எண்ணந்தானிருக்கிறது. எந்த தேசத்துக்குப் போய் எப்படிக் குட்டிச்சுவரானாலும் பரவாயில்லை, எந்தப் படிப்புப் படித்தாலும், எந்தத் தொழில் செய்தாலும் பரவாயில்லை என்று அனுப்பிவிடுகிறார்கள். அல்லது அவர்கள் அனுப்பவேண்டும் என்றில்லாமல் பிள்ளையே கத்தரித்துக் கொண்டு போய்விடுகிறான்; பர்ஸில் சேரும் கத்தையிலும் ஒரு நோட்டுகூட அப்பனிடம் காட்டாமல் அவனே வைத்துக் கொள்கிறான்.
ஆதியிலோ மகன் சான்றோன் என்று புகழ்பெற்றுக் கேட்கவேண்டும் என்று, சின்னக் குழந்தையை த்யாகமாக ப்ரஹ்மோபதேசத்தின்போதே குருவிடம் அர்ப்பணம் செய்தார்கள்.
பிற்காலத்தில் எப்படியோ மறுபடியும் தகப்பனாரே ப்ரஹ்மோபதேசம் செய்வதாய் வந்து, தற்போது பழைய வித்யாப்யாஸம் அடியோடு போய்விட்டாலும், பூணூல் போடுவது என்று ஏதோ ஒரு ஸாங்கியம் “பேருக்கு” நடக்கிற போது அப்பாவே ப்ரஹ்மோபதேசம் செய்வதாக நடைமுறையில் இருக்கிறது.
பூர்வ காலத்தில் தன்னுடைய தகப்பனாரையும் வீட்டையும் விட்டுவிட்டு குருகுலவாஸம் என்று இன்னொரு பெரியவரிடம் போய்ப் படிப்பது பையனை நல்லமுறையில் உருவாக்குவதற்கு ரொம்பவும் ப்ரயோஜனப்படுகிறதென்று தெரிந்த போது, ஸத்வித்வானாக இருக்கப்பட்ட பிதாமார்கள்கூடத் தங்களுடைய தந்தையுரிமை, வித்வத்தில் யோக்யதை இரண்டையும் த்யாகம் செய்து இன்னொரு வித்வத் ச்ரேஷ்டரைக் கொண்டு பிள்ளைக்கு ப்ரஹ்மோபதேசம் செய்வித்து அவரிடமே வித்யாப்யாஸத்துக்கு விட ஆரம்பித்தார்கள். இதனால்தான் ப்ரஹ்மோபதேசச் சடங்குக்கே ‘உபநயனம்’ என்ற பேர் ஏற்பட்டது. ‘உபநயனம்’ என்றால் ‘ஸமீபத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது’ என்று அர்த்தம். இந்தச் சடங்கானது ஒரு பையனை குருகுலம் நடத்தும் ஆசார்யரிடம் கொண்டு சேர்த்தது என்பதாலேயே இப்படிப் பெயர். அகத்தில் அப்பாவிடமே பாடம் சொல்லிக்கொள்வதற்குக் ‘கொண்டு போய்ச் சேர்ப்பது’ என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?
(முதலில் பையனை அவனுடைய பிதா ஆசார்யரின் ஸமீபத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். அப்புறம் ஆசார்யர் அவனை ஈச்வரனின் ஸமீபத்தில் கொண்டு சேர்க்கிறார். அது இரண்டாவது ‘உபநயனம்’ என்று சொல்லலாம். நேராக இப்படி பரதத்வ ஸமீபத்துக்கே கொண்டு சேர்ப்பது கடைசி ஆச்ரமத்தில் ஸந்நியாஸம் தரும் குரு. அந்த ‘உபநயன’த்தின்போது முதல் உபநயனத்தில் போட்ட பூணூல் போய்விடுகிறது!)
கர்ப்பாதானம் செய்து ஒரு ஜீவனை உண்டுபண்ணி, அது பிறந்த பின் ஜாதகர்மம், நாமகர்மம், சௌளம் (குடுமி வைப்பது) முதலான ஸம்ஸ்காரங்களைச் செய்யும் பிதாவே குரு; உபநயனம் செய்து அப்புறம் அத்யாபனம் செய்விக்கிறவன் ஆசார்யன் என்பதாக மநுஸ்ம்ருதி, யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி ஆகியவற்றில் சொல்லியிருக்கிறது. அதாவது இங்கே “குரு” என்பதோடு நின்று, “ஆசார்ய”ராகாத அப்பாவுக்கு உபதேசம், வித்யா போதனை என்பவற்றின் ஸம்பந்தமேயில்லை. அவர் இக்காலத்து “வெறும் அப்பா” போலவே இருக்கிறார்; இப்படிச் சொல்வதுகூட ஸரியில்லை இக்கால அப்பாக்கள் ஸம்ஸ்காரபூர்வமான கர்ப்பாதானத்திலிருந்து சௌளம் வரையிலான ஸம்ஸ்காரங்களையும் புத்ரருக்குப் பண்ணுவதாகக் காணோமே!
ஒரு குழந்தையைப் பூணூல் போட்டு ஆசார்யரோடு அனுப்பும்போது அதற்கு எங்கேயோ, யார் அகத்துக்கோ போகிறோமென்ற துக்கம் ஏற்படக்கூடுமல்லவா? இப்படிக் கூடாது என்றே ஆசார்யரை, “இவரும் உன் அப்பாதான்” என்று நினைக்கும்படியாக அவருக்கும் பிதாவுக்குள்ளதான குரு என்ற பெயரையே கொடுத்து, அவருடைய ஆச்ரமத்துக்கும் குரு குலம் என்று பெயர் சொல்வதாக ஏற்பட்டிருக்கலாமோ என்னவோ?