கம்பர் – காளிதாஸன் ஒப்பீடு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அன்றுவரையில் ப்ராண ஸ்நேஹிதமாயிருந்த போஜன் ப்ரஷ்டம் பண்ணின பிறகுகூட, உலகத்தின் கண்ணில் அவன் தப்பைக் காட்டிக் கொடுக்கிற மாதிரி தான் வேறே எந்த ராஜாவிடமும் போவதில்லை என்று காளிதாஸன் பெரிய மனஸோடு இருந்திருக்க, கம்பர் இந்த மாதிரி ஸவால் விட்டிருக்கலாமோ என்றால்: அவரவர் இருந்த ஸந்தர்ப்பத்தில் காளிதாஸன் அப்படிப் பண்ணியதும், கம்பர் இப்படிப் பண்ணியதுந்தான் ஸரி. காளிதாஸனுக்கு போஜனிடம் அபிப்ரயாய பேதம் உண்டானது எதை வைத்து? அவன் சரம கவி கேட்டதை வைத்துத்தான். அவன் ஏன் அப்படிக் கேட்டான்? காளிதாஸனுடைய வாக்விசேஷத்தில் மிகுந்த பற்று வைத்திருந்தததால்தான் தான் போனபின் காளிதாஸன் செய்யும் சரம கவி உள்ளத்தை அப்படியே உருக்குவதாக இருக்கும் என்ற உசந்த எண்ணத்தினால் தான், அப்படிப்பட்ட கவிதையைத் தான் உயிரோடிருக்கும்போதே கேட்டுவிட வேண்டுமென்று வற்புறுத்தினான். ஆக, அபிப்ராய பேதம் ஏற்பட்டாலும் அதற்கு அடிக்காரணம் போஜன் காளிதாஸனின் கவிதையில் வைத்திருந்த மோஹந்தான். அப்படி தன்னுடைய கவிதை கேட்பதற்காகவே உலகத்தில் யாரும் பயப்படுகிற அச்சான்ய எண்ணம் இல்லாமல் போஜன் அவனுடைய மரணத்தைப் பற்றியே பாடிக் கேட்க வேண்டுமென்றபோது, அப்படிப்பட்ட மஹா ரஸிகனை விட்டபின் இன்னொருத்தன் ஆதரவைப் பெறக் காளிதாஸன் மாதிரியான ஒரு பெரியவருக்கு எப்படி மனஸ் வரும்? அதனால்தான் போஜனுக்கு இல்லாத தன் கவிதையை யாருக்கும் வேண்டாம் என்று பைத்தியக்கார ஸந்நியாஸி வேஷம் போட்டுக்கொண்டான். அந்த நிலையில் கம்பர் இருந்தாலும் அப்படித்தான் பண்ணியிருப்பார்.

வாஸ்தவத்தில் கம்பர் இருந்த நிலை என்ன? இவர் ப்ரிய ஸ்வாதீனத்தின் பேரிலே சொன்னதை சோழராஜா நல்ல ‘ஸ்பிரிட்’டில்தானே எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்? அல்லது அதை ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாக விட்டிருக்கத்தானே வேண்டும்? அல்லது, இன்னம் ஒரு படி கீழே போனால்கூட, “என்ன இருந்தாலும் நான் ராஜா. ஆனதால் ப்ரஜைகளின் கண்ணில் என் ஸ்தானத்தின் கெடுபிடியைக் கட்டிக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதனால் நீ ரொம்ப ஸ்வாதீனம் எடுத்துக்கொண்டால், லோகத்திலே அது பரவி ராஜ மரியாதை கெட்டுப்போகும்படி ஆகலாம்” என்று லேசாக ‘வார்ன்’ செய்தாவது விட்டிருக்கலாம். இப்படியெல்லாமில்லாமல், “ஹா, ஹூ! யார் யாருக்கு அடங்கினவா, பார்த்துடலாம்!…. ராஜாக்ஞை” என்று அவன் எகிறினால் அவருக்கும் கோபம் வந்து ஸவால்விடத் தானே தோன்றும்? அந்த நிலையில் காளிதாஸன் இருந்தாலும் அப்படித்தான் பண்ணியிருப்பான்.

கம்பருடைய பெரிய மனஸும் பிற்பாடு கதையில் தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நட்பு பகையாவதன் நுட்பம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சோழ ஸபையில் 'அடைப்பைக்கார'ச் சேரன்
Next