சோழ ஸபையில் “அடைப்பைக்கார”ச் சேரன் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நாடு திரும்பிய கம்பரைக் குலோத்துங்க சோழன் மிகவும் மரியாதை செய்து வரவேற்றான். பழையபடி கம்பர் அவனுடைய ஸதஸில் ஆஸ்தான கவியானார்.

ஆனால், கொஞ்ச காலத்துக்கப்புறம் அவர் தன்னிடம் விட்ட ஸவாலை நிறைவேற்றக் காணோமே என்கிற மாதிரி ‘ஹின்ட்’ பண்ணிச் சோழன் என்னவோ சொன்னான்.

கம்பர், தாம் சேரனிடம் சொன்ன ‘அத்யாவச்யம்’ வந்தவிட்டது என்று கருதினார். ஸ்வய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமென்று நினைத்தார்.

சேரனுக்கு ஓலை அனுப்பினார்.

சேர மஹாராஜாவும் உடனே புறப்பட்டு சோழ மஹாராஜாவின் ஸதஸுக்கு அடைப்பைக்காரக் கோலத்தில் வந்துவிட்டான்.

அப்போது சோழனும் கம்பரும் ஸம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். அடைப்பைக்கார வேஷத்தில் சேரனைப் பார்த்ததும் கம்பருக்கு மனஸ் கேட்கவில்லை. ஆனாலும், ‘சபதம் பண்ணியிருக்கிறோமே! சோழன் இன்னொரு தரமும் அதை நினைவுப்படுத்திக் குத்திக் காட்டும்படி விடப்படாது!’ என்று நினைத்தார்.

அதனால் வேஷ – அடைப்பைக்காரனை லக்ஷ்யம் பண்ணி வரவேற்கக்கூட இல்லை.

சோழனுக்கோ, அத்தனை பணிவுடன் காளாஞ்சியும் கையுமாக நிற்கிறவன் சேர மஹராஜன் என்று கொஞ்சங் கூட ஊஹிக்க முடியவில்லை. புதுசாகச் சேர தேசத்தில் கம்பர் வேலைக்குப் போட்டுக்கொண்ட எவனோ ஒருத்தன் என்றே நினைத்துவிட்டான்.

கம்பர் என்ன பண்ணினாரென்றால், சோழனோடு நடத்திக் கொண்டிருந்த ஸம்பாஷணைக்கு நடுவிலேயே அலக்ஷ்யமாகச் சேரன் பக்கம் கையை நீட்டினார். உடனே அவன் அடக்கவொடுக்கமாக வெற்றிலை மடித்து அவரிடம் நீட்ட, அதை அவனைத் திரும்பிக்கூடப் பார்ககாமல் வாங்கி, இரண்டு விரலுக்கு நடுவில் இடுக்கிக்கொண்டார். வாயில் போட்டுக் கொள்ளவில்லை.

இப்படி ஸம்பாஷணைக்கு நடுவிலேயே இரண்டு மூன்று தரம் தாம்பூலச் சுருளை வாங்கிக்கொண்டு, அவற்றை விரல்களிலேயே இடுக்கிக்கொண்டார்.

அப்புறம், “போகலாம்” என்று அவர் சேரனுக்கு ஜாடை செய்தார். உடனே அவன் புறப்பட்டுவிட்டான்.

வாசலுக்குப் போய் அவன் குதிரையைத் தட்டிவிட, அது காற்றாகப் பறந்து போய்விட்டது. அப்போதுதான், வந்தது சேரன் என்று சோழனுக்குப் பளிச்சென்று புரிந்தது.

அடையாளம் தெரிவிப்பதற்காக சேரனும் போகிற போக்கில் தன்னுடைய முத்திரை மோதிரம் ஒன்றைப் போட்டுவிட்டுப் போயிருந்தான்!

“கம்பரே! என்ன இப்படிப் பண்ணிவிட்டீர்கள்? வந்திருந்தது சேர ராஜா என்று சொல்லாமலே இருந்து விட்டீர்களே! அச்வ ஸாரத்யத்தில் ரொம்பவும் வல்லவனான அவனை இனிமேல் பிடிக்க முடியாதே!” என்றான் சோழன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கம்பர் - காளிதாஸன் ஒப்பீடு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கம்பரின் உயர் பண்பு
Next