அதற்குக் கம்பர் “அப்பா குலோத்துங்கா! சேரன் என்னுடைய அழைப்புக்காகத்தான் இங்கே வந்தானேயொழிய, உன்னுடைய அழைப்பு அவனுக்கு இல்லை. என்னுடைய மானத்தைக் காப்பாற்றுவதற்காக அவன் அழையா வீட்டுக்கு வந்தபோது, அவனுடைய மானத்தை நான் காப்பாற்ற வேண்டுமல்லவா? அவன் சேரன் என்று தெரிந்தால் நீ அவனை எந்த தினுஸில் வரவேற்றிருப்பாயோ. எனக்காக வந்தவன் என் காரியத்தை முடித்துத் தந்துவிட்டுப் போக விடவேண்டுமென்றுதான், உனக்கு அவனை அறிமுகம் பண்ணாமலே விட்டேன்” என்றார்.
மறுபடியும் கம்பரின் பண்பு தெரிகிறதல்லவா?
“அப்படியா? அது ஸரி. ஆனால் அவன் கொடுத்த வெற்றிலைச் சுருள்களை ஏன் வாயில் போட்டுக்கொள்ளாமல் விரலிலேயே இடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று குலோத்துங்கன் கேட்டான்.
அதற்குக் கம்பர் சொன்ன பதிலில்தான் அவருடைய உயர்ந்த குணத்தின் உச்சியைப் பார்க்கிறோம்.
“ஒரு ராஜாவாக இருக்கப்பட்டவன் இன்னொருத்தனுக்கு ‘அடைப்பை தூக்குகிறேன்’ என்றால் அது அவனுடைய விநயத்தைக் காட்டுகிறது. அப்போது, அவனுடைய பணியைப் பெருகிறவன் மட்டும் ஒரேயடியாக விரைத்துக் கொள்வதா? இவனும் விநயத்தைத்தானே காட்ட வேண்டும்? என்னவோ வேளை பொல்லாப்பு, ஆதியில் நீ ஒன்று சொல்ல, நான் ஒன்று சொல்ல இப்படிச் சபதம் பண்ணி, அப்புறம் என் ஸ்வய மரியாதைக்காக அதை நிறைவேற்றும்படி ஆயிற்று. அதற்காக, மூவேந்தர்களில் ஒருத்தனாக இருக்கப்பட்டவனை அடைப்பைக்காரனாக வரவழைக்க வேண்யடிதாயிற்றறு. நீ அவனை அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காகவும், நான் நிஜமாகவே அவனுக்கு யஜமானனைப் போல நடக்கவேண்டும் என்பதற்காகவும் அலக்ஷ்யமாகவே அவனிடமிருந்து தாம்பூலம் வாங்கிக்கொள்ள வேண்டியதாகவும் ஆயிற்று. இதெல்லாம் போதாது என்று அதை நான் வாயிலேயே போட்டுக்கொண்டு சாப்பிட்டிருந்தேனானால் அவனிடம் நன்றாகவே ஊழிய லாபம் பெற்று, நிஜ யஜமானனாகவே என்னை நிலைநாட்டிக் கொண்டதாக ஆகியிருக்கும்.
“நான் பண்ணின சபதம் என்ன? சேர ராஜாவை அடைப்பைக்காரனாக்கிக் கொண்டு வருகிறேன் என்பதுதான். அடைப்பை தாங்குவதும், தாம்பூலம் எடுத்துக் கொடுப்பதுந்தான் அவன் கார்யம். அதற்கு மேலே, அந்தத் தாம்பூலத்தை வாங்கிக் கொண்டவன் அதைச் சாப்பிடும்படிப் பண்ணுவது அவன் கார்யமல்ல. அதனால் சேர ராஜாவை அடைப்பைக்கார வேலை முழுசாகப் பண்ண வைத்து என் சபதத்தை நிறைவேற்றிக் கொண்டாலும் அதை நான் தின்று எனக்கு யஜமானத்வத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை” என்றார்.
தன்மானம் ஸ்வய மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் இப்படி சேரனுடைய மான, மரியாதைகளையும் கம்பர் காப்பாற்றிக் கொடுத்தார்.
ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலானவர்கள் அரசவைக் கவிஞர்களாக இருந்திருக்க, கம்பர் மட்டும் சடையப்ப வள்ளல் என்ற ஒரு ப்ரபுவையே தம் ஆதரவாளராகக் கொண்டிருந்தததிலிருந்து அவர் ரொம்பவும் ஸ்வதந்த்ர உணர்ச்சியுள்ளவராகயிருந்திருப்பாரென்று ஊஹிக்கலாம்.