‘ராஜாக்கள் நல்ல ரஸிகர்களாகவும் வள்ளல்களாகவும் இருக்கும்போது அவர்களை உத்ஸாஹப்படுத்தி, அதன் மூலம் அவர்கள் கவிகளை மேலும் ஆதரிக்கப்பண்ணி, இதனால் கவிகள் பெறுகிற உத்ஸாஹத்தில் மேலும் நல்ல நல்ல காவ்யங்கள் உண்டாக உதவவேண்டும்’ – என்ற எண்ணத்தில் இப்படிப்பட்ட ராஜாக்களின் மேல் கவிகள் ஸ்தோத்ரமாகக் கவிதைகள் பாடுவதுண்டு. Exaggeration ஆகத்தானிருக்கும். இலக்கியச் சுவைக்காக அதையும் “அதிசயோக்தி”, “மிகைபடக்கூறல்”, “உயர்வு நவிற்சி” என்று சொல்லி அங்கீகரித்திருக்கிறது. “சாடு” (Chaatu) கவிதை என்று இவற்றுக்குப் பேர்.
ராஜாவை உத்ஸாஹப்படுத்த ரொம்பவும் சிறந்த வழி அவனைப் புகழ்வதைவிட அவனுடைய பத்தினியைப் போற்றுவதுதான் என்பதால் ராணிகளையும் உசத்தி வைத்துப் பாடுவதும் உண்டு.
ஒன்று நினைவுக்கு வருகிறது.
அப்பய்ய தீக்ஷதிரின் தாத்தாவுக்கு ஆச்சான் தீக்ஷிதர் என்று பெயர். ஆசார்ய தீக்ஷிதர் என்ற பெயர்தான் அப்படி மாறி இருந்தது. அவருக்கே ‘வக்ஷஸ்தலாசார்யார்’ என்றும் பெயர் சொல்வார்கள். இப்படிப் பேர் வந்ததற்குக் காரணமே அவர் க்ருஷ்ணதேவராயரின் ராணியைப் புகழ்ந்து கவிபண்ணியதுதான்.
க்ருஷ்ண தேவராயர் காஞ்சீபுரத்திலே வரதராஜப் பெருமாளை தர்சிப்பதற்காக வந்திருந்தார். அவருடைய ஸதஸைச் சேர்ந்த பண்டிதோத்தமரான ஆச்சான் தீக்ஷிதரும் கூட வந்தார்.
பட்டர் வரதராஜாவுக்கு கர்ப்பூராரத்தி நன்றாகத் தூக்கிக் காட்டி கீழே இறக்கிக் கொண்டே வரும்போது முக மண்டலத்தில் பல தினுஸாக நிழலாடியதிலோ என்னவோ, ராயருக்குப் பெருமாள் கண்ணைப் கொஞ்சம் தாழ்த்திக் குனிந்து பார்த்துக் கொள்கிற மாதிரி தோன்றிற்று. அதை ஆச்சான் தீக்ஷிதரிடம் சொல்லி “தீக்ஷிதர்வாள்! இதற்கு ஏதாவது காரணம் – ஐதிஹ்யம் (ஐதீஹம்) – தங்களுக்குத் தெரிகிறதா?” என்று கேட்டார்.
ராயர் கேட்டவுடனேயே தீக்ஷிதர் பளிச்சென்று ஒரு ச்லோகமாக பதில் சொல்லிவிட்டார். “அதுவா? ஸ்வர்ண காந்தியாக ஜ்வலித்துக்கொண்டு உன் பக்கத்திலே நிற்கிற ராணியைப் பார்த்ததும் பெருமாளுக்கு ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி என்று தோன்றிவிட்டது. ‘அப்படியானால் தன்னுடைய வக்ஷஸ்தலத்திலே (திருமார்பிலே) அவள் இல்லாமல் இறங்கிப் போய்விட்டாளா என்ன?’ என்று ஸம்சயம் ஏற்பட்டுத்தான் கண்ணைத் தாழ்த்தி மார்பைப் பார்த்துக்கொள்கிறார்” என்று அர்த்தம் கொடுக்கும் ச்லோகமாக பதில் சொல்லிவிட்டார்!
காஞ்சித் காஞ்சந கௌராங்கிம் வீக்ஷ்ய ஸாக்ஷாதிவ ச்ரியம் |
வரத: ஸம்சயாபந்நோ வக்ஷஸ்தலம் அவேக்ஷதே ||
“வக்ஷஸ்தலத்தைப் பார்த்துக் கொள்கிறார்” என்று முடித்ததாலேயே ராயர் அவருக்கு “வக்ஷஸ்தல” என்ற பட்டம் தந்தார். “ஆசார்ய” என்ற அவருடைய பேரோடு சேர்ந்து, அதுமுதல் அவர் “வக்ஷஸ்தலாசார்யா”ராகி விட்டார்.
இப்படி, போஜனைக் காளிதாசன் அதீத கல்பனையாகப் புகழ்ந்திருப்பதில் வேடிக்கையாக ஒன்று:
பூலோகத்தில் கோகுலத்திலே குழந்தையாய் வளர்ந்த க்ருஷ்ண பராமாத்மா அவதாரத்தை முடித்த பிறகு ஆகாசத்திலே கோலோகம் என்பதில் வாஸம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று சொல்வார்கள்.
ஒருநாள் அவர் அந்த திவ்யலோகத்தைவிட்டு மறுபடியும் பூலோகத்துப் போய்க்கொண்டிருப்பதை நாரதர் பார்த்தாராம்.
“கோபாலா! உன்னுடைய லோகத்தை விட்டு எங்கே, எதற்காகப் போகிறாய்?” என்று கேட்டாராம்.
“தேவர்ஷே! (தேவரிஷியே) வேறே ஒன்றுமில்லை. இங்கே முக்யமான பசுவாயுள்ள ஸாக்ஷாத் காமதேனுவே கன்றுக்கு ஊட்டக்கூடப் பாலில்லாமல் மரத்துப் போய்விட்டது. யார் எது கேட்டாலும் கொடுக்கும் காமதேனுவுக்கு ஏன் இப்படி ஆச்சு என்றால், பூலோகத்திலே கவிவாணர்கள் கேட்காமலே வாரிவாரிக் கொடுக்கும் போஜனைப் பற்றி அதற்குத் தெரிந்தது. ‘நம்மையும் மிஞ்சி ஒருத்தனா?’ என்று ஏங்கி ஏங்கி இளைத்தே பால் மரத்துவிட்டது. அதனாலே அதன் கன்றுக்குப் புல் பிடுங்கிக்கொண்டு வரத்தான் அவனுடைய உலகத்துக்குப் போகிறேன்” என்று பகவான் பதில் சொன்னாராம்.
அதற்கு நாரதர், “அடாடா! நீ போகிற கார்யம் நடக்கிறதற்கு இல்லையே! ஏனென்றால், எங்கே பார்த்தாலும் போஜனிடம் வீரத்திலோ, ஈகையிலோ, அழகிலோ, படிப்பிலோ, எதிலேனும் தோற்றுப்போன ஏராளமான எதிரிகள் மண்ணைக் கவ்விக் கவ்வி அங்கே இப்போது புல் என்பதே முளைத்திருக்க வில்லையே” என்றாராம்1!
‘போற்றினும் போற்றுவர், தூற்றினும் தூற்றுவர்’ என்கிறபடி, ஸ்துதிக்க வேண்டிய ஸமயத்தில் இப்படிப் புகழ்ந்த அதே போஜனையேதான், அவன் வலுக்கட்டாயமாக கவி கேட்டபோது காளிதாஸன் விட்டுவிட்டுப் போயே போய்விட்டான்.
“மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?” என்று கேட்ட அதே கம்பர், குலோத்துங்கனைப் பாராட்ட வேண்டிய ஸந்தர்ப்பத்தில்,
‘தண்ணீரும் காவிரியே; தார்வேந்தன் சோழனே;
மண்ணாவ தும்சோழ மண்டல மே!‘
என்று கொண்டியாடியுந்தான் பாடியிருக்கிறார்.
கார்யத்தைப் பார்த்துத்தான் தூற்றுவதோ, போற்றுவதோ செய்திருக்கிறார்களேயொழிய, அல்பத்தனமாக இச்சகம் பாடியோ த்வேஷாரோபம் செய்தோ அல்ல.
போற்றுகிறபோது, தங்களை ஆதரித்தவர்கள் த்ரவ்யத்தில் எவ்வளவு ஒளதார்யம் (உதாரத்தன்மை) காட்டினார்களோ அதைவிடவும் ஒளதார்யமாக அவர்கள் மேல் புகழ்மொழியைப் பொழிந்திருக்கிறார்கள்.
ராம பட்டாபிஷேகத்தைச் சொல்லும்போது கம்பர், தம்மை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் முன்னோர் ஒருவருடைய கையிலிருந்துதான் வஸிஷ்டர் கிரீடத்தை வாங்கி ராமருக்குச் சூட்டினாரென்றே பாடியிருக்கிறார்!2
1 ஸ்வர்காத் கோபால குத்ர வ்ரஜலி ஸுரமுதே பூதலே காமதேநோ:
வத்ஸஸ்யாநேது: காமஸ்-த்ருணசயம்-அதுநா முக்த-துக்தம் ந தஸ்யா: |
ச்ருத்வா ஸ்ரீ போஜராஜ-ப்ரசுர-விதரணம் வ்ரீட-சுஷ்க-ஸ்தநீ ஸா
வ்யர்தோ ஹி ஸ்யாத்-ப்ரயாஸஸ்-ததபி தத்-அரிபிச்-சர்விதம் ஸர்வமுர்வ்யாம் ||
2 “………வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி”