மன்னரும் குழந்தையும்: பரஸ்பரப் பாராட்டு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஷாஹஜி மீநாக்ஷியம்மனை தர்சிப்பதற்காக மதுரைக்குப் போயிருந்தார். கூடவே வித்வான்களின் பரிவாரத்தையும் அவர் அழைத்துக் கொண்டு போனதால் குட்டிக் கவியின் அப்பா, குட்டிக் கவி, ஆகிய இரண்டு பேருக்கும் ஜகன்மாதா மீநாம்பிகையின் தர்சன ப்ராப்தி கிட்டிற்று.

அம்பாளைப் பார்த்த மாத்ரத்தில் ஷாஹஜியின் வாயிலிருந்து ஆசுகவியாக ச்லோகம் வந்தது. வார்த்தை ஜாலமுள்ள ச்லோகமாக அது இருந்தது!

புரிமதுரம் கிரிமதுரம் கரிமதுரந்தர – நிதம்ப – பாராட்யம் |

ஸ்தூல குசம் நீல கசம் பாலக சந்த்ராங்கிதம் பஜே தேஜ: ||

என்பதே ச்லோகம்.

முதலில் ‘மதுரம்’, ‘மதுரம்’ என்று இரண்டு முறை வந்ததற்குப் பொருந்த, ‘கரிம – துரந்தர’ என்பதையே “கரிமதுரந்தர” என்று ப்ராஸம் போட்டுச் சொன்னேன்.

அம்பாள் வாஸம் செய்யும் ஊரின் பெயரே இனிமை – மதுரம் – மதுராபுரி. “புரி மதுரம்”.

அம்பாளுடைய வாக்கு-அல்லது அவளுடைய பேர் என்றும் வைத்துக் கொள்ளலாம் – அதுவும் இனிமை. “கிரி மதுரம்.”

அப்புறம் அவளுடைய மதுரமான ரூபத்தை வர்ணித்து “நீலகசம்” என்று அவளுடைய கரிய கூந்தலையும், அதிலே அவள் தரித்திருக்கிற பிறை மதியையும் சொல்லி (“பாலக சந்த்ராங்கிதம்” என்று சொல்லி) , இப்பேர்ப்பட்ட ஒரு தேஜஸாக்கும் அம்பாள் என்று முடித்திருக்கிறது.

இந்த ஆனந்தமான கவிதா ரஸ ப்ரவாஹத்தைக் காதாரப் பருகிற்று பக்கத்திலிருந்த குழந்தைக் கவி. உடனே அதுவும் ஆசுகவியாகி ராஜாவையே பாராட்டிப் பாடிவிட்டது. ராஜா பண்ணியதற்கு மேலே வார்த்தை ஜாலம் பண்ணிப் பாடிவிட்டது.

கவிலோகே நவிலோகே புவி லோகேசஸ்ய ஸாஹஜே ரூபமாம் |

ஹ்ருதிதரஸா (அ)விதிதரஸா – ததிதரஸாஹித்ய – வா – ந-மே – லகதி ||

முதல் பாதிக்கு அர்த்தம், “உலகத்தை ஆளுபவனான ஷாஹஜிக்கு (‘ஸாஹஜி’ என்று ச்லோகத்தில் இருக்கிறது) உவமிக்கும்படியாக பூமியில் கவிலோகம் முழுதிலும் நான் எவரையும் பார்க்கவில்லை” என்பது. இதில் ‘கவிலோகே’ வுக்கு அப்புறம் ‘நவிலோகே’ என்று இருப்பது ‘ந விலோகே’ என்று பிரியும். “லோகேசனாயுள்ள ஸாஹஜிக்கு உபமானமாகிறவரை பூலோகத்திலே ‘கவி லோகே கவியுலகில், ‘ந விலோகே’: பார்க்கவில்லை.” ‘பூலோகத்திலே லோகேசனாயுள்ள’ என்கிற இடத்தில் ‘புவி – லோகேசஸ்ஏ‘ என்று வருவதற்குள்ளும் ஒரு ‘வியோகே’ இருக்கிறது.

இரண்டாம் பாதியில் முதல் வார்த்தை ‘ஹ்ருதி – தரஸா’ என்று பிரியும். அடுத்தது ‘ (அ) விதி – தரஸா’ இல்லை. அதை ‘ (அ) விதித – ரஸா’ என்று பிரிக்க வேண்டும். ‘தத் – இதர – ஸாஹித்ய‘ என்பதிலேயும் ஒரு ‘தரஸா’ வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது!

முதல் பாதியில் மூன்று ‘விலோகே’. இரண்டாம் பாதியில் மூன்று ‘தரஸா’.

இரண்டாவது வரியில் குழந்தைக் கவி, “இப்படிப்பட்ட ராஜாவுடைய கவிதா வாக்கைத் தவிர வேறெந்த ஸாஹித்ய வாக்குகளிலும் இப்பேர்ப்பட்ட ரஸத்தைக் காணமுடியாததால் அவை எதுவும் இதுபோலச் சடேரென்று என் ஹ்ருதயத்தில் ஒட்டிக்கொள்ளவில்லை” என்கிறது.

ராஜாவுக்கு ஸர்ட்டிஃபிகேட்’ கொடுக்கும்போதே தனக்கும் ஸர்ட்டிஃபிகேட் கொடுத்துக் கொண்டிருக்கிறது – தனக்குக் கவிதாரஸ ஞானம் நன்றாக உண்டு என்று மற்ற எல்லாருடைய கவிதையிலும் காண முடியாத ரஸத்தைத் தன்னால் ஷாஹஜியின் கவிதையிலேயே காணமுடிகிறது என்கிறது. ஷாஹஜியின் வாக்கே அதன் ஹ்ருதயத்தில் சடேரென்று ஒட்டிக்கொள்கிறதைக் குறிப்பால் சொல்கிறது. ‘தரஸா’ என்றால் ‘சடேரென்று’, ‘லகதி’ ஒட்டிக்கொள்கிறது.

ராஜாவை உதாஸீனமாகப் பேசுவதற்கு தைர்யம் வேண்டுமென்றால், ஒரு குழந்தையாகப்பட்டது அவனுக்கு ஸர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கு அதைவிட தைர்யம் வேண்டும். அம்பாள் ஸந்நிதானத்திலே அரசன் தன்னை மறந்து கவிதை பண்ணினபோது, மற்ற பெரிய வித்வான்கள்கூட அதைக் கேட்டுக்கொண்டு அடக்கமாகத்தான் இருந்தார்கள். அந்த ஸந்தர்ப்பத்தில் குழந்தை இப்படி ‘டாண்’ என்று அவனுக்கு ஸபாஷ் போட்டு ச்லோகம் பண்ணிற்று என்றால் இதுவும் ஒரு கவிக்கு அரசனுக்கும் மேலான ஸ்தானம் உள்ளதைத்தான் காட்டுகிறது.

இந்த ஸமயத்தில்தான் ராஜா குட்டிகவி என்று வஞ்ச்யேச்வரனுக்கு பட்டம் கொடுத்தார் என்று சொல்வதுண்டு.

ராஜா நல்ல கவிதை பண்ணினபோது ஸபாஷ் போட்ட அதே குட்டிகவி, ராஜா தப்புப் பண்ணினபோது அவனை வாங்கு வாங்கு என்று வாங்குவதற்கும் சளைக்கவில்லை. ஆனால் தப்புப் பண்ணின அந்த ராஜா ஷாஹஜி இல்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அரசனைப் போற்றும் கவிதை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ப்ரதாப ஸிம்ஹனும் குட்டிகவியும்
Next