தாய் – தந்தையர் பெருமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வித்யாப்யாஸம் கொடுக்காவிட்டாலும்கூட பிதா என்கிறவன் ஆசார்யனுக்கு மேலே என்று மநுஸ்ம்ருதியில் உயர்ந்த ஸ்தானம் கொடுத்திருக்கிறது. (சம்பளத்துக்குச் சொல்லிக் கொடுக்கும்) பத்து உபாத்யாயர்களைக் காட்டிலும் ஆசார்யர் உயர்ந்தவர், நூறு ஆசார்யர்களைக் காட்டிலும் பிதா உயர்ந்தவர் என்று சொல்லியிருக்கிறது. இந்த இடத்திலேயே எல்லாரைவிடவும் உயர்ந்த சிறப்பிடத்தை அம்மாவுக்குக் கொடுத்து, “ஆயிரம் பிதாக்களைக் காட்டிலும் மாதா உயர்ந்தவள்” என்று சொல்லியிருக்கிறது.

யாஜ்ஞவல்க்யர் காலத்தில் பிதாவோ, அவனை விட்டால் அடுத்தபடியாகத் தமையனாரோதான் உபநயனம் செய்விப்பதாகவும், இவர்கள் இருவரும் இல்லாவிட்டால்தான் வெளி மநுஷ்யர் செய்வித்திருக்கிறாரென்றும் தெரிகிறது. ‘இல்லாவிட்டால்’ என்றால், ‘உயிரோடு இல்லாவிட்டால்’ மட்டுமில்லை; யோக்யதை இல்லாவிட்டாலும் இவர்கள் உபநயனம் செய்விக்கப்படாது என்று சொல்லியிருக்கிறது. என்ன யோக்யதை? அவன் தனக்கான வேத சாகையைப் பூர்ணமாய் அத்யயனம் செய்திருக்கவேண்டும்; அதோடு, மற்றவர்களுக்கு அதைச் (சொல்லி கொடுத்து) அத்யாபனமும் செய்பவனாயிருக்க வேண்டும்; ப்ராம்மணனுக்குத் தகாத எந்தத் தொழிலும் செய்பவனாக இருக்கப்படாது. (இந்த ‘ஸ்டான்டர்ட்’ படி தற்காலத்தில் எந்த அப்பன்காரனுக்காவது பிள்ளைக்குப் பூணூல் போட ‘க்வாலிஃபிகேஷன்’ இருக்குமா என்பது ஸந்தேஹந்தான்!)

சில ஸ்ம்ருதிகளில் ‘குரு’ என்பது ‘பெரியவர்கள்’ என்று இருக்கிற எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட பொதுப் பெயராகத் தெரிகிறது. அப்பா, அண்ணா, தாத்தாக்கள், அப்பா – அம்மாவுடன் பிறந்தவர்கள், மாமனார், தேசத்துக்கு ராஜா யாரோ அவர், ஸகல ஸத் ப்ராம்மணர்கள் – இவர்கள் மாத்ரமில்லாமல், அம்மா, பாட்டிகள், ஆசார்ய பத்னி, அத்தை, சித்தி, பெரியம்மா, மாமியார், அக்கா, ஸபத்னீ மாதா (மாற்றாந் தாய்) ஆகிய ஸ்திரீகளையும்கூட குருக்கள் என்றே அவற்றில் சொல்லியிருக்கிறது.

இப்படிப் பல குருமார்களைச் சொன்னாலும், ஜன்மாவைக் கொடுத்து பிள்ளையை வளர்த்து ஆளாக்கிவிடும் பிதாவையே குறிப்பாக “குரு” சப்தத்தால் சொல்கின்ற மநு, ஆசார்யனும் அறிவைத் தந்து பிதாவுக்கு ஸமதையான ஸ்தானம் பெறுவதால் குரு என்று கௌரவிக்கப்பட வேண்டியவனாகிறான் என்கிறார்.

(‘கௌரவம்’ என்ற வார்த்தைக்கே ‘குருவுக்கு உரியது’ என்றுதான் அர்த்தம்.)

தர்ம சாஸ்த்ரங்களையோ, அத்யாத்ம சாஸ்த்ரங்களையோதான் என்றில்லாமல் அறிவுக்கு எந்த ஒரு வித்யையைக் கொடுத்து உபகரிப்பவனையுமே குரு என்று சொல்ல வேண்டுமென்று சொல்லும் மநு, இப்படிச் செய்கிறவர்களுக்குள்ளே ஸத்வித்யையை ஸம்பூர்த்தியாகக் கற்றுக்கொடுக்கும் ஆசார்யன் பெருமையை என்ன சொல்வது என்று வியந்து கேட்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வீட்டில் இல்லாத குருகுலச் சிறப்பம்சம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வயதில் சிறிய குரு
Next