குட்டி சாஸ்த்ரிகள் அங்கே எத்தனையோ இடையூறுகளுக்கு ஈடு கொடுத்து, அப்புறம் பாஜிராவ் ஸ்ரீமந்தன் என்ற பேஷ்வாவின் ராஜாங்க ஸதஸில் வித்வானானார்.
மஹாராஷ்ட்ராவில் முக்ய மந்த்ரிகாளக இருந்த பேஷ்வா என்பவர்களே ராஜாவைப் போன்ற ஆட்சியதிகாரம் பெற்றிருந்தார்கள். “ஸ்ரீமந்த” என்பது அவர்களுடைய “டைட்டில்.”
பண்டிதர்களான கவிஞர்கள் முறை தவறி நடக்கிற அரசனை விட்டுவிடுவது போலவே, வித்வானாகவும் ரஸிகனாகவும் உள்ள அரசனோடு ஒட்டிக்கொண்டு உறவு வைத்துக்கொள்வார்கள். குட்டிக் கவி ஷாஹஜியைப் போற்றி ஆசுகவி செய்ததாகப் பார்த்தோமல்லவா?
இம்மாதிரி குட்டி சாஸ்த்ரியாரும் நல்ல விஷய ஞான முள்ளவரான ஸ்ரீமந்தனைப் போற்றி, அவரிடம் நெருக்கமான அன்பு பாராட்டினார்.
அவர் காட்டிய தீரத்தைப் போலவே இந்த அன்பு விச்வாஸத்தையும் ச்லாகித்துக் சொல்லும்படியாக ஒன்று செய்தார்.
வெள்ளைக்காரர்கள் இங்கே சண்டை செய்தும், வேறே க்ருத்ரிமங்கள் செய்தும் நாடு பிடித்துக்கொண்டிருந்த காலம் அது. மஹாராஷ்டிரத்தின் சின்னச் சின்ன ராஜாக்களையும் ஸ்ரீமந்தன் ஒன்று திரட்டித் துணை சேர்த்துக்கொண்டு வெள்ளைக்காரப் படையெடுப்பை இரண்டுமுறை எதிர்த்தார். கடைசியில் 1818-ல் அவர் தோற்றுப்போகும்படி ஆயிற்று. அதோடு பேஷ்வா வம்சமே முடிந்து வெள்ளைக் காரர் ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டது.
தோற்றுப்போய் பேஷ்வா பதவியும் போனவுடன் ஜயித்தவர்கள் “ஸ்ரீமந்த” டைட்டிலையும் பிடுங்கிக்கொண்டு, தோற்றுப் போன எல்லா ஸ்வதேச ராஜாக்களுக்கும் “உப்புக்குச் சப்பாணி” என்று கொடுத்திருந்த “மஹாராஜ்” என்ற பெயரை பாஜிராவுக்கும் கொடுத்தார்கள். ரொம்பவும் பெரிய மனஸு பண்ணியது போல அவருக்கு ஒரு பென்ஷனைக் கொடுத்து, வடக்கே பஹுதூரத்துக்கு அந்தண்டை, கான்பூர் பக்கத்தில் உள்ள பிதுர் (Bithur) என்ற ஊருக்கு அனுப்பினார்கள, ஜெயிலில் வைப்பதையே திரிசமனாக பெரிய பங்களாவில் வைக்கிறது போலக் காட்டிவிட முடிவு பண்ணினார்கள். ஜனஸமூஹத்தை விரோதித்துக்கொண்டால் கஷ்டம் என்பதற்காகவேதான் இப்படி, தோற்றுப் போனவர்களைக் கொல்லாமல், பென்ஷன் தருவது, ஊரை மட்டும் விட்டுக் கொண்டுபோய் பங்களாவில் வைப்பது என்றெல்லாம் கண்துடைப்பதை வெள்ளைக்காரர்கள் நிறையப் பண்ணியிருக்கிறார்கள்.
வெள்ளைக்காரர்கள் அவரைச் சிறைப் பிடித்துவிட்டார்கள், கான்பூர் பக்கத்தில் எங்கேயோ ஜெயில் மாதிரி கொண்டு போய் அடைத்து வைக்கப்போகிறார்கள் என்ற செய்தி குட்டி சாஸ்த்ரிகளுக்குத் தெரிந்தது.
உடனே ஓடினார். கைதியாயிருந்த பாஜிராவோடு வெள்ளைக்கார அதிகாரிகள் புறப்படும் ஸமயம். “நீ நன்றாயிருந்த காலத்தில் உன்னோடு வாழ்ந்தேன். இப்போ உன் கஷ்டகாலத்தில் உன்னைவிட்டுப் பிரியமாட்டேன், நானும் கான்பூர் வருவேன்” என்றார்.
பாஜிராவ் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அவர் கேட்கவில்லை.
குட்டிசாஸ்த்ரியாரும் அவர்களோடேயே போனார். வழியெல்லாம் பிச்சை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே அத்தனாம் தூரம் போனார்.
கங்கைக்கரையில் பாஜிராவைக் காவல் வைத்திருந்த இடத்திலேயே தாமும் தங்கிவிட்டார். அத்தனை அன்பு, விச்வாஸம், நன்றி!
அப்புறம் ஒரு வருஷத்துக்குப்பிறகு காசிக்கு வந்தார்.
அந்த ஸமயம் சரபோஜியும் ஸரஸ்வதி மஹாலுக்காக நிறைய அபூர்வச் சுவடிகள் சேகரிப்பதற்காக காசிக்கு வந்திருந்தார். குட்டி சாஸ்திரியாரைப் பார்த்ததும், ஏதோ வேளைக் கோளாற்றினால் ஆதியிலே தாம் அவரிடம் சொன்னதற்கு ரொம்ப வருத்தம் தெரிவித்து அவரை தஞ்சாவூருக்குத் திரும்பி வருமாறு கேட்டுக் கொண்டார். பாஜிராவும் தம்மோடு பினைத்துக்கொண்டு சாஸ்த்ரிகள் கஷ்டப்படுவதைப் பொறுக்காமல் அவரை ஊருக்குத் திரும்பும்படி வற்புறுத்தினார். முடிவில் சாஸ்த்ரியார் ஒப்புக்கொண்டார். ஊருக்குத் திரும்புவதற்கு முந்தி அப்போது காசியிலே வாஸம் செய்துகொண்டிருந்த அஹோபில பண்டிதர் என்ற மஹா பண்டிதரிடம் வேதாந்த சாஸ்த்ர அப்யாஸம் பண்ணினார்.
பிறகு, ஸொந்த ஊருக்கே புறப்பட்டார். பழைய ஸ்நேஹிதர்களைப் பார்க்க எண்ணி மஹாராஷ்ட்ரா வழியாக வந்தார். அப்புறம் தமிழ் நாட்டுக்கு வருவதற்காக கர்நாடகத்தை ‘டச்’ பண்ணினபோது, அப்போது மைஸூர் மஹாராஜாவாயிருந்த ஒரு க்ருஷ்ண ராஜ உடையார் தம்முடைய ஆஸ்தானத்தை சாஸ்த்ரிகள் அலங்கரிக்க வேண்டுமென்று ரொம்பவும் கேட்டுக் கொண்டார். ப்ரியத்தினாலேயே நிர்பந்தப்படுத்தி அவரை அங்கேயே நிறுத்திக்கொண்டுவிட்டார்.
அதிலிருந்து சாஸ்த்ரிகளுக்கு மைஸூர் ராஜா யதேஷ்டமாக ஸம்பாவனைகள் செய்துவந்தார்.
அப்படியிருந்தும் அவரிடமும்கூட சாஸ்த்ரிகள் தம்முடைய ‘இன்டிபென்டென்ட்’ மனப்பான்மையை ஒரு ஸமயம் நிலைநாட்டிக் காட்டினார்.