தெய்வத் தீர்ப்புக் கோருவது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கவிகளுக்குள்ளே ரொம்ப போட்டி முற்றி, வாதத்தினாலே அவர்களில் எவருடைய ஸுபீரியாரிடியையும் நிச்சயிக்க முடியாமல் போனால், அப்போது ராஜா தெய்வத்தின் தீர்ப்புக்குத்தான் விஷயத்தை விட்டு விடுவான். எல்லாக் கவிகளையும் வித்வான்களையும் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போவான். அங்கே பூ கட்டி வைத்து எடுத்துப் பார்ப்பார்கள். அல்லது போட்டிக் கவிகளின் கவிதைகளைக் கொண்ட சுவடிகளைத் தராசிலே நிறுத்திப் பார்ப்பார்கள். ஸாதாரணமாகப் பார்த்தால் அந்தச் சுவடிக் கட்டுகளில் எதில் ஜாஸ்தி கவிதைகள், அதாவது ஓலைகள் இருக்கிறதோ அதுதான் அதிக எடையாக இருக்கும். ஆனாலும் இப்படி தெய்வ ஸந்நிதானத்தில், தெய்வமே கதி என்று அவர்கள் அத்தனைப் பேரும் நம்பி, நாஸ்திக வாதமும் பரிஹாஸமுமில்லாமல் பூர்ணமாக நம்பி, நிறுத்துப் பார்த்தபோது, ஓலை ‘வெய்ட்டி’யில் ரொம்ப லேசாயிருந்தால்கூட, எது கவிதையிலே உசந்த தரமானதோ அதை வைத்த தட்டுதான் கீழே இறங்கும். துளியூண்டு திருக்குறளை சங்கப் பலகையில் வைத்ததும் பாக்கி அத்தனை சங்கப் புலவர்களும் பொற்றாமரைக் குளத்தில் விழுந்துவிட்டார்களல்லவா? அந்த மாதிரி! ஞானஸம்பந்தர் கதையிலே வருவதுபோல அனல்வாதம், புனல் வாதம் என்று நடத்தியும் திவ்ய சக்திகளின் முடிவுக்குப் போட்டியை விடுவதுண்டு*. அல்லது எல்லாருமாக ஸந்நிதிக்குப் போய் அப்படியே மௌனமாக ப்ரார்த்தித்து த்யானம் பண்ணுவார்கள்.

அர்ச்சகரின் மேல் ஆவசேம் ஏற்பட்டு ஈச்வர சித்தம் தெரியும். அல்லது அசரீரி கேட்கும்.


* முதற் பகுதியில் ‘முருகனின் தமிழ்நாட்டு அவதாரம்’ எனும் உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அதுவும் ஓர் அழகு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  காளிதாஸனும் அம்பிகையும்
Next