காளிதாஸனும் அம்பிகையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

காளிதாஸன், பவபூதி, தண்டி இந்த மூன்று பேரில் யார் உசத்தி, அவர்களை எப்படி rank பண்ணுவது என்று வாதப் பரீக்ஷைகள் மூலம் முடிவுகட்ட முடியவில்லை. அதனால் போஜன் எல்லாரையும் அம்பாள் ஸந்நிதானத்துக்கு அழைத்துக்கொண்டு போனான்.

அம்பாள் அசரீரியாக முடிவு சொசன்னாள்.

“கவிர் – தண்டி கவிர் – தண்டி
பவபூதிஸ்து பண்டித: |”

“தண்டியைக் கவி என்று சொல்லவேண்டும். ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக நிச்சயப்படுத்தி அப்படிச் சொல்லலாம். பவபூதியோ என்றால் பண்டிதர் என்க வேண்டும்” – என்று அர்த்தம் கொடுக்கும்படியாகச் சொன்னாள்.

பாண்டித்யம் அதிகமென்றால் அநேக விஷயங்களைப் பற்றிய அறிவு, பாஷையின் இலக்கணத்தில் நல்ல ஞானம் இருப்பது என்று அர்த்தம். ஆனால் இலக்கணம் வேறே, இலக்கியம் வேறே! கவிக்கு ரொம்பவும் விஷயம் தெரிந்து , பாஷா சாஸ்த்ர ஞானம் நிறைய இருக்கணுமென்ற அவச்யமில்லை. ஹ்ருதயத்தாலே எதிலோ, ஒன்றிலே, சின்ன விஷயமானாலும் அதிலே, அப்படியே ஊறி ரஸத்தை அநுபவித்து, அதைப் பெரிய grammar இல்லாவிட்டாலும் மதுரமான லலிதமான வாக்கிலே மற்றவர் ஹ்ருதயத்திலும் புகும் விதத்தில் நயமாக நகாஸ் செய்து சொல்கிறவன்தான் கவி. பாண்டித்யம், கவித்வம் இரண்டும் ஸமமாகச் சேர்ந்திருந்தால் விசேஷம். ஆனாலும் அவை பொதுவாகக் ‘கவி’ என்கப்பட்வர்களில் வெவ்வேறு ‘ப்ரபோர்ஷனி’ல் (விகிதத்தில்) தான் சேர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். சிலதைத்தான் poetic என்னும்படியாகவும், சிலதை Scholarly என்னும்படியாகவும் இருக்கிறது.

இதிலேதான் தண்டியிடம் பாண்டியத்தைவிடக் கவிதாரஸம் அதிகம் என்றும், பவபூதியிடம் கவிதா ரஸத்தை விட அறிவின் கனம் அதிகம் என்றும் பொருள் ஏற்படும்படியாக அம்பாள் ரத்னச் சுருக்கமாகத் தீர்ப்புக் கொடுத்தாள். காளிதாஸனைப் பற்றி இதில் எதுவும் இல்லை.

‘அப்படியானால், தன்னை அவள் கவிஞன் என்றும் வைக்காமல், அறிஞன் என்றும் வைக்காமல் அடியோடு கழித்துக் கட்டிவிட்டாளா?’ என்று அவனுக்குப் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

அப்போதுதான், கவித்வ சக்தியான சிந்தனைக்கும் வாக்குக்குமே எவள்தான் மூலமோ, எவளால்தான் காளிதாஸன் ஆளானதோ அவளையே தூக்கி எறிந்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டான். நம்மைத் தூக்கிவாரிப் போடுகிறமாதிரி வார்த்தை சொல்லிவிட்டான்.

“அப்படின்னா நான் யார்டீ….?” என்று திட்டி ஒரு வார்த்தை போட்டுவிட்டான். “கோ (அ) ஹம்….” என்று ஸம்ஸ்க்ருதத்திலே கோபமாகக் கேட்டுவிட்டான்.

அவன் அவஸரப்பட்டுவிட்டான்! தண்டியையும், பவபூதியையும் பற்றிச் சொன்னதோடு அம்பாளுடைய ‘ஜட்ஜ்மெண்ட்’ முடிந்துவிடவில்லை. அதைத் தொடர்ந்து காளிதாஸனைப் பற்றியும் அவள் சொல்வதற்குத்தான் இருந்தாள். ஆனால் ஒருத்தர் கவிஞர், இன்னொருத்தர் அறிஞர் என்று அவள் சொன்னவிட்டு, இனிமேலே சொல்ல எதுவுமில்லை என்று காளிதாஸன் அவஸரப்பட்டுவிட்டான். பரதேவதையை துச்சமாக வார்த்தை சொல்லிவிட்டான்.

அதற்காக அவள் கோபம் கொள்ளவேயில்லை.

நம் குழந்தையை நாம் ஏதோ அலக்ஷியப்படுத்திவிடுகிறோம், ரொம்பவும் கார்யமாயிருந்ததில், அது சொல்ல வந்ததைக் காதில் போட்டுக் கொள்ளாமலிருந்து விடுகிறோம். அதனாலே அது கோபித்துக்கொண்டுபோய் உம்மென்று உட்கார்ந்து விடுகிறது. அந்தக் குழந்தைக்காக அடுப்பிலே பக்ஷணம் பண்ணிக்கொண்டிருந்ததால்தான் நாம் அது சொல்ல வந்ததை கவனிக்காதது. பக்ஷணம் பண்ணியானதும் எடுத்துக்கொண்டுபோய், “உர்உர்” என்று உட்கார்ந்திருக்கிற குழந்தைக்கு கொடுக்கிறோம். “வேண்டாம், போ!” என்று வாரி நாம் மூஞ்சியிலேயே அடிக்கிறது. அதனிடம் நமக்குக் கோபமா வருகிறது?” ராஜாப் பயலே! உனக்கு இத்தனை ரோஷமா? உன்னைக் கவனிக்காத இந்த அசட்டு அம்மாவை நன்னா அடி!” என்று குனிந்துகாட்டத்தானே தோன்றுகிறது?

அம்பாளுக்கும் அவனுடைய குழந்தையான காளிதாஸன் சீறியதில் கோபமே வரவில்லை; பெருமைதான் பட்டாள்!

“நான் யாருடீ?…..” என்று அவன் கேட்டதற்கு பதிலாக,

த்வமேவாஹம், த்வமேவாஹம்,
த்வமேவாஹம் ந ஸம்சய:

என்றாள்.

“நீ நானேதான், நீ நானேதான், நீ நானேதான். இதில் ஸந்தேஹமில்லை” என்று ஒரு தரத்துக்கு மூன்று தரமாக ஸந்தேஹத்துக்கிடமில்லாமல் சொல்லிவிட்டாள்.

“நீ நானேதான்”, அல்லது, “நீயேதான் நான்” என்று சொல்லவேண்டும். (த்வம் ஏவ – நீயேதான், அஹம் – நான்)

குறுக்கே சீறிக்கொண்டு இவன் கேட்டிருக்காவிட்டால் அவளாக என்ன சொல்லியிருப்பாளோ? ‘ஒரு கவி நிஜமான கவி, இன்னொரு கவி அறிஞர்’ என்று சொன்ன அப்புறம், இவன் (காளிதாஸன்) இரண்டும் பூர்ணமாகச் சேர்ந்த பண்டித கவி’ என்கிற மாதிரி ஏதாவது ‘ட்ரிப்யூட்’ (பாராட்டு) கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டிருப்பாளோ என்னவோ? அவன் கோபத்தில் இடைமறித்ததாலேயே அவனைத் “தானே” என்று உச்சிக் கோடிக்கு உசத்திச் சொல்லிவிட்டாள்!

பண்டிதர்களுடைய அறிவெல்லாம் அடங்கிய ஞானம் அவள்தான். ஜ்ஞாநதா, ஜ்ஞாநவிக்ரஹா (ஞானமளிப்பவள், ஞானவடிவினள்) என்று ஸஹஸ்ர நாமத்தில் சொல்லியிருக்கிறது. கவிதா ரஸத்துக்கும் அவள்தான் மூலம். தைத்திரீயத்தில் பரமாத்ம தத்வமாகச் சொன்ன ரஸம் அவள்தான். ரஸஜ்ஞா, ரஸசேவதி : அதாவது, ரஸமறிந்த ரஸிகை, ரஸம் நிரம்பிய களஞ்சியம் – என்று ஸஹஸ்ரநாமம் சொல்கிறது. இப்படி இரண்டும் சேர்ந்திருப்பதில் தனக்கு ஸமம், தானே கூட, யாரென்றால் காளிதாஸன்தான் என்றாளாம்!

‘தான் இப்படிப் பாராட்டிச் சொன்னதில், ஏதோ ஒரு ஸமயம் தற்பெருமை என்றில்லாமல் எப்போது பார்த்தாலும் மண்டைக்கனம் பிடித்தவனாகச் காளிதாஸன் ஆகிவிட்டால் என்ன ப்ணணுவது? அப்படி ஆகிவிடக் கூடாது ‘ என்பதால் இன்னொரு ஸந்தர்ப்பதிலே அம்பாள் அவனை ஒரு இறக்கு இறக்கவும் செய்தாள்.

இப்போது பவபூதிக்கும் காளிதாஸனுக்கும் மட்டும்தான் போட்டி. இந்த ஸமயம் தராசிலே இரண்டு பேர் கவிதையையும் எதிரெதிர்த் தட்டுக்களில் வைத்து அம்பாள் ஆலயத்தில் எடைபோட்டுப் பார்க்கத் தீர்மானமாயிற்று. ஏதோ ஒரு விஷயமாக போஜன் இரண்டு பேரையும் கவி பண்ணச் சொன்னதில்தான் எது உசத்தி என்று அவனாலும் ஸதஸாலும் சீர்தூக்கிச் சொல்லத் தெரியாமல் அம்பாள் சித்தத்துக்கு விட்டது. போஜனே ஒரே அளவான ஓலை நறுக்குகளில் இரண்டு பேர் கவிதையும் எழுதி எதிரெதிர்த் தட்டுகக்ளில் வைத்தான்.

அம்பாள் தர்ம ந்யாயமாகக் கவிதைகளின் தரத்தில் சித்தத்தைச் செலுத்தியதில் பவபூதியின் தட்டு மேலாகவும், காளிதாஸனுடைய தட்டு கீழாகவும் போக ஆரம்பித்தது. அதாவது காளிதாஸனுக்கே வெறறி சேர இருந்தது.

உடனே அம்பாள், கவிதைகளை மட்டும் ந்யாயமாகச் சீர்தூக்கிக் காட்டிவிட்டால், கவிகளை அந்யாயமாகச் சீர் கெட்டுப்போகப் பண்ணுவதாகிவிடுமென்று நினைத்தாள், ‘இப்போதும் காளிதாஸனே ஜயித்தால் அப்புறம் ரொம்பவும் மண்டைக்கனம் ஏறி வீணாய்விடுவான். அதேபோல, ரொம்பவும் ‘சரக்கு’ உள்ள பவபூதியும் ஏற்கெனவே கொஞ்சம் மறைமுக இறக்கலாக ‘பண்டித’ப் பேர் வாங்கினது போதொதென்று, இப்போது நேராகக் காளிதாஸனுக்குத் தோற்றுப் போனால் மனஸ் உடைந்து சீர்குலையும்படி ஆகும். இரண்டு குழந்தைகளையுமே இப்படி ஆக விடப்படாது’ என்று நினைத்தாள். க்ஷணகாலம்தான். அல்லது அதைவிடவுங் குறைவு. அம்பாளானதால் அதற்குள் இப்படி நினைத்து, தராசுத் தட்டுகள் ஏறி இறங்குவதை மாற்றுவதற்கும் அந்த க்ஷணத்துக்குள்ளேயே ஒரு வழியை நிச்சயம் செய்துகொண்டாள்.

அழகுக்கு அழகு செய்பவளான பரதேவதை ஸர்வாலங்கார பூஷிதையாக இருப்பவள். அவள் தலையில் கேசத்தில் பின்னலின் உச்சியில் புஷ்பம் வைத்துக் கொண்டிருப்பது மட்டுமில்லை, காதின் மேலேயும் ஒரு புஷ்பத்தைச் சொருகிக் கொண்டிருப்பாள். (லலிதா) ஸஹஸ்ரநாம வர்ணனையில் இப்படி இருக்கிறது. கேசத்தில் சம்பகம், அசோகம், புன்னாகம், ஸெளகந்திகம் ஆகிய புஷ்பங்களைச் சூட்டிக் கொண்டிருப்பவள் என்று முதலில் வருகிறது. சம்பகாசோக – புந்நாக – ஸெளகந்திக – லஸத் – கசா. அப்புறம் ரொம்பவும் மனஸைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் செவிப்பூவாகக் கதம்ப புஷ்பக் கொத்தை வைத்துக் கொண்டிருக்கிறவள் என்று வருகிறது: கதம்ப – மஞ்ஜரீ – க்லுப்த – கர்ணபூர – மநோஹரா.

நம் கதை நடந்தபோது இம் மாதிரி கல்ஹாரம் என்ற குவளை மலரை அம்பாள் காதின்மேல் அணிந்துகொண்டிருந்தாள்.

பவபூதியின் தட்டு மேலே கிளம்பியபோது, அந்தக் காதுப் பூவை ஸரிசெய்து கொள்கிறதுபோல் விரலாலே மெதுவாக அழுத்திக்கொண்டாள். அப்படிப் பண்ணுவதிலேயே ஸாமர்த்யமாக அந்தப் புஷ்பத்திலிருந்த தேன் சொட்டைச் சுண்டிவிட்டு அது போய் நேரே பவபூதியுடைய ஏட்டின் மேலே விழும்படிச் செய்துவிட்டாள்!

கவிதா “ரஸம்” என்று தேனை நினைத்துத்தான் சொல்கிறோம். மதுர ஸ்வரூபிணியான அம்பாளுடைய செவிப்பூவின் தேன்சொட்டு விழுந்த கனத்தில், பவபூதியுடைய கவிதையில் குறைந்த ரஸம் ‘மேக் – அப்’ ஆகிவிட்டது. சட்டென்று அவனுடைய கவிதை (தட்டு) கீழே இறங்கி, காளிதாஸன் கவிதை உயரே போயிற்று. கவிஞர்களை எடுத்துக்கொண்டாலோ இதற்கு நேர்மாறாக பவபூதிக்கு உயர்வு கிடைத்தது, காளிதாஸனை ஒரு இறக்கு இறக்கினதாக ஆயிற்று!

ஆனால் உடனேயே காளிதாஸனுக்கு அம்பாள் செய்த ‘ட்ரிக்’ புரிந்துவிட்டது. எப்படிப் புரிந்தது என்றால் அவளே, “நானேதான் நீ!” என்று சொல்லியிருந்தாளோ, இல்லையோ? அவள் வாக்கு பொய்க்குமா? அவளாகவே இருந்து அவளுடைய கார்யத்தைப் புரிந்துகொண்டுவிட்டாள்!

உடனே இதை ஆசுகவிதையாகப் பாடியும் விட்டான்.

ஆனால் முன்னே அவஸரப்பட்டுத் திட்டினானே, அப்படி திட்டியா பாடினான்? இல்லை. உண்மையில் ஸுபீரியராக இருந்த அவனுடைய கவிதையை அவள் மட்டப்படுத்தினதற்காக அவன் திட்டியிருந்தால்கூடத் தப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது திட்டாமல், கொஞ்சங்கூடக் கோபப்படாமல், “அஹோ மே ஸெளபாக்யம்“, “ஆஹா என்னுடைய பரம பாக்யத்தை என்ன சொல்ல!” என்றே ஆரம்பித்து, அம்பாளுடைய காதணியான கல்ஹாரத்தின் தேனால் அவள் பவபூதியின் கவிதைக்கு கனம் கொடுத்ததைப் பாடினான்!1

நல்லறிவு உதித்ததாலேயே (அதுவும் அவள் க்ருபைதான்) மனஸ் மாறி இப்படிப் பாடினான். “நீயும் நானும் ஒன்று” என்றவள் இப்போது பட்சபாதமாகப் பண்ணினாளென்றால் ஏன்? அவளைத் தவிரத் தான் வேறில்லை என்று இல்லாமல் தனக்கு அஹங்காரம் தலை தூக்குகிறதே, அந்த கனத்தை இறக்கத்தான் பவபூதியின் பாடலுக்கு கனம் தந்தாள் என்று புரிந்துகொண்டான். அதனாலேயே இதைத் தன் பாக்யமாய் நினைத்துப் பாடினான்.

“அப்படியா விஷயம்?” என்று உடனே பவபூதி காளிதாஸனுக்கு நமஸ்காரம் செய்ய, காளிதாஸன் போஜனிடம் சொல்லி பவபூதிக்கு நூறு மத்தகஜங்களை ஸம்பாவனை செய்யச் செய்தானாம்!

போட்டியும் பொறாமையுமாய் இருந்த இரண்டு மஹா கவிகள் இப்படி ஒற்றுமையானதைத் தெரிந்து கொள்ள நம் மனஸுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருக்கிறது.

அப்புறம் காளிதாஸனுக்கு நல்ல அடக்கமுண்டாயிற்று. அவையடக்கமாக அவன் செய்துள்ள ச்லோகங்களைப் பார்த்தால் தெரியும். உதாரணமாக, “ரகுவம்ச”த்தின் ஆரம்பத்தில் இப்படி ஒரு காவ்ய முயற்சியில் தான் இறங்கியிருப்பது ஏதோ ஒரு சின்னப் படகைக் கொண்டு கடக்க முடியாத ஸமுத்ரத்தைக் கடக்கப் புறப்படுவது போலத்தான். ரகுவம்ச திலகனின் கதையை எழுதிய வால்மீகி போன்ற உயர்ந்த கவிகளே ஸாதிக்கக்கூடிய இந்தக் கார்யத்தில் தான் முயற்சி பண்ணுவது நல்ல நெட்டையானவனே பறிக்கக்கூடிய பழத்துக்கு ஒரு குள்ளன் கை நீட்டிப் பார்ப்பது போலத்தான் என்று விநயமாகச் சொல்கிறான்.2


1 அஹோ மே ஸெளபாக்கியம் மல ச பவபூதேச்ச பணிதம்
தடாயாம் ஆரோப்ய ப்ரதிபலதி தஸ்யாம் லகிமநி |
கிராம் தேவீ ஸத்ய: ச்ருதி-கலித-கல்ஹார-கலிகா
மாதூலீ-மாதுர்யம் க்ஷிபதி பரிபூர்த்யை பகவதீ ||

2 முதல் ஸர்கம் – ச்லோகம் 2,3

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தெய்வத் தீர்ப்பு கோருவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கம்பரும் அவ்வையும்
Next