கம்பரும் அவ்வையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கம்பருக்கும் இப்படிக் கொஞ்சம் ‘தான்’ ஜாஸ்தியான போது, தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில் ஸரஸ்வதி அவதாரம் எனத்தக்க அவ்வை அவருடைய ‘தானை’ இறக்கினதாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தண்டுக்கு நன்னாலு இலையாக முளைக்கிற ஆரைக்கீரையைக் கம்பர் பார்த்தாராம். அதன் பேரைச் சொல்லமல் புதிர் போட்டு அவ்வைக் கண்டு பிடிக்கிறாளா என்று பார்க்க நினைத்தாராம். ‘ஒரு காலில் நாலிலைப் பந்தலடீ‘ என்று அவளை ‘அடீ’ போட்டுச் சொல்லி விட்டாராம். தனக்கு அவர் டெஸ்ட் வைத்ததே தப்பு, அதிலும் ‘அடீ’ போட்டது மஹா தப்பு என்று அந்தப் பாட்டிக்கு கோபமான கோபம் வந்து, ‘எட்டேகா லட்சணமே!‘ என்று ஆரம்பித்து கம்பருக்கு ஒரே ‘அர்ச்சனை’யாய்ப் பண்ணி ‘ஆரை அடா சொன்னாய் அது?’ என்று முடித்தாளாம். ‘அடீ என்று ஆரை அடா சொன்னாய்?’ என்று பதிலுக்கு ‘டா’ போட்டுப் பழி வாங்கினது மட்டுமல்லாமல், ஆரைக் கீரையையும் தான் புரிந்து கொண்டதை ‘ஆரை, அதாவது, யாரை அடா’ என்று கேட்டதன் மூலம் தெரிவித்து விட்டாளாம்! இப்படிக் கதை.

‘எட்டே கால் லட்சணம்’ என்ன, எப்படி? தெரியுமோல்லியோ?1

அப்புறம் அந்தக் கம்பர் எத்தனை அடக்கமாக ஆனார் என்பதற்கு அவருடைய ராமாயணத்தைப் பார்த்தால் போதும். ராமர் உள்பட அவர் அவதரித்த ரகு வம்சத்தின் கதையைத் தான் பாட முயல்வது பெரிய ஸமுத்ரத்திலே குட்டிப் படகை இறக்குகிறது போல என்று காளிதாஸன் சொன்னானென்றால், கம்பரோ ராம சரித்ரத்தை தாம் பாட நினைப்பது க்ஷீரஸாகரத்தை ஒரு பூனை நக்கி நக்கிக் குடித்தே தீர்த்துவிட நினைப்பதுபோலத்தான் என்று சொல்லியருக்கிறார்.2 அவ்வளவு அடக்கம் வந்தவிட்டது!

ஸரி, அந்த அவ்வையாருக்கும் ‘தான்’ முற்றிவிடப்படாதே! அதை இறக்கின கதையும் கேட்டிருப்பீர்கள்.

ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிதான் அப்படி இறக்கியவர். அவள் போகிற வழியில் மாட்டுக்காரப் பையனாக வந்து ஒரு நாவல் மரத்தின் மேலே உட்கார்ந்து கொண்டிருந்தார் முருகன். ‘பாட்டீ! சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா? எதைப் பறிச்சுப் போடட்டும்?’ என்று கேட்டார்.

மஹாமேதையான அவ்வைக்கே பழம் எப்படிச் சுடுமென்று புரியவில்லை. இருந்தாலும் சூடாக இருக்கிற பழத்தைக் கேட்பானேன் என்று சுடாத பழம் கேட்டாள்.

ஸுப்ரஹ்மண்யர் நன்றாகக் கனிந்த பழமாய்ப் பார்த்துப் பறித்துப் போட்டார்.

உள்ளே கொஞ்சம் ‘கொள கொள’ ஆகியிருந்ததால் அது பூமியிலே நன்றாய்ப் பதிந்து மண் ஒட்டிக்கொண்டது.

அவ்வை மண்போக அதை ஊதினாள்.

ஸ்வாமி கலகலவென்று சிரித்து, “பாட்டீ! பழம் சுட்டதால்தானே ஊதறே?” என்று கேட்டார்.

அவ்வைக்கு ஆச்சயரிமாகவும் வெட்கமாகவும் ஆகி விட்டது. ‘ஆனானப்பட்ட கம்பர் மாதிரியானவர்களை ஒரு கை பார்த்த நாம் ஒரு மாட்டுக்காரப் பையனிடமல்லவா தோற்றுப் போய்விட்டோம்? நல்ல வஜ்ரம் பாய்ந்த கருங்காலி மரத்தைக்கூட ஒரே போடாகப் போட்ட கோடாலி, ஒரு வாழை மரத்தை வெட்டமுடியாமல் ஆனமாதிரி அல்லவா இருக்கிறது!

‘கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி

இருங்கதலித் தண்டுக்கு நாணும்’

என்று நினைத்து அதிலிருந்தே பாடம் பெற்று, இனிமேலே அடங்கயிருக்கவேண்டுமென்று தீர்மானித்தாள். கனியாத தன்னைக் கனிவித்துக் கொள்ளவே இது பாடமென்று எடுத்துக்கொண்டாள்.

உடனேயே ஸுப்ரஹ்மண்யர் நிஜமான ரூபத்தை எடுத்துக்கொண்டு அவளுக்கு நிரம்ப அநுக்ரஹம் செய்து, எதெது கொடியது, எதெது இனியது, எதெது பெரியது, எதெது அரியது, என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அவளைப் பாடவைத்துக் கேட்டுப் பாராட்டினார்.


1 ‘அ’ என்பது எட்டுக்கும், ‘வ’ என்பது காலுக்கும் இலக்கமாகும், எனவே ‘எட்டேகால்’ என்பது ‘அவ’. “அவலக்ஷணமே!” என்பதையே அவ்வை ‘எட்டேகா லக்ஷணமே!” எனக் குறிப்பிட்டாள்.

2 கம்பராமாயணம் : பாயிரம், நான்காம் பாடல்

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is காளிதாஸனும் அம்பிகையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வில்லிப்புத்தூராரும் அருணகிரிநாதரும்
Next