வயஸில் சிறியவனாயிருந்தாலும் தனக்குக் கற்பிப்பவனைப் பெரியவனாக மதிக்க வேண்டும் என்ற கருத்திலிருந்தே ஆசிரியரை (பெரியவர் என்று பொருள்படும்) ‘குரு’ என்று சொல்வதாக ஏற்பட்டது என்று தர்ம சாஸ்த்ரங்களிலிருந்து தெரிகிறது. இதிலிருந்து தன்னைவிட வயஸில் சிறியவரிடமும் போதனை பெறலாமென்பது தெரிகிறது. அறிவையும், ஆத்மாபிவ்ருத்திக்கானதையும் பெறுவதில் வயஸில் பெரியவர் சின்னவர் பார்க்கப்படாது என்ற உசந்த கொள்கை வெளிப்படுகிறது.
இதற்கு மநு ஒரு கதையே சொல்லியிருக்கிறார்.
அங்கிரஸ் மஹர்ஷியின் புத்ரன் அவருடைய (அங்கிரஸுடைய) ஸஹோதரர்களுக்கே வித்யோபதேசம் செய்தார். அப்போது அவர்களை அவர், “பிள்ளைகளே!” என்று கூப்பிட்டாராம். உடனே அவர்களுக்குக் கோபம் வந்து விட்டதாம். தேவர்களிடம் போய் ‘கம்ப்ளெய்ண்ட்’ கொடுத்தார்களாம்.
தேவர்கள், “நீங்கள் கம்ப்ளெய்ன்ட் பண்ணுவது ஸரியில்லை. உங்களுக்கு ஒரு வித்யை தெரியவில்லை. அதை உங்களுக்குப் பிள்ளை முறையாகிறவனிடம் சொல்லிக் கொள்கிறீர்கள் என்றால், அப்போது நீங்கள்தான் பாலர், அவர் வ்ருத்தார். வயஸு நிறைய ஆச்சு, தலை நரைத்துப்போச்சு என்பதால் வ்ருத்தராகிவிட முடியாது. நன்றாக வேதத்தை அப்யாஸம் பண்ணியிருப்பவனே நமக்கு ‘வ்ருத்தன்’ ” என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம்.
எலும்போடு சதை ஒட்டிப்போன மஹா கிழங்களான யோகி ச்ரேஷ்டர்கள் நித்ய யுவாவான ஆதிகுரு தக்ஷிணாமுர்த்தியிடம் மௌனப் பாடம் கேட்கிறார்கள். “ஆலமரத்தின் அடியிலே ஆச்சர்யத்தைப் பாருங்கள்! சிஷ்யர்கள் கிழவர்கள், குருவோ யுவா. அந்த வாலிப ப்ரொபஃஸர் எப்படி லெக்சர் கொடுக்கிறாரென்றால், மௌன பாஷையிலாக்கும்! அப்படியிருந்தும் அந்த சிஷ்யர்களுடைய ஸந்தேஹங்களெல்லாம் பொடியாகித் தீர்ந்து போய்விடுகின்றன” என்று ச்லோகமே இருக்கிறது.
சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா: குருர்யுவா |
குரோஸ்து மௌநம் வ்யாக்யாநம் சிஷ்யாஸ்து சிந்ந ஸம்சயா: ||
ஒருவரைப் பெரியவராக நினைப்பதில் ஐந்து விதம் இருக்கிறது. தனத்தை வைத்துப் பெரியவராகச் சிலரை மதிக்கிறோம். பெரிய ப்ரபு என்றால் உடனே ஒரு மரியாதை தோன்றிவிடுகிறதல்லவா? இது ஒன்று. வயஸில் சின்னவர்களாயிருந்தாலும் மதனி, மாமா முறை, சித்தப்பா முறை ஆகிறவர்களென்று பந்துத்வத்தில் உள்ள ஸ்தானத்தினால் சிலரைப் பெரியவர்களாக மதிப்பது இரண்டு. ரொம்ப வயஸானவரென்றால் யாராயிருந்தாலும் பெரியவர் என்று மரியாதை பண்ணுவது மூன்று. நாலாவதாக, மஹா யஜ்ஞங்களைச் செய்தவர், பெரிய அநுஷ்டாதா என்றால் வயஸைப் பார்க்காமலே பெருமைப் படுத்துவது. ஐந்தாவதாக வித்யையிலே சிறந்த மஹா வித்வான் என்பதால் மரியாதை செய்வது. இதை தர்ம சாஸ்த்ரத்தில் சொல்லி இப்படி ஒன்று, இரண்டு, மூன்று போட்டதில் முதலில் வருவதைவிட அடுத்து வருவதே உசந்தது என்று கூறியிருக்கிறது – அதாவது ஐந்தாவதாக, வித்யையை வைத்து ஒருத்தரைப் பெரியவராகக் கருதி கௌரவிப்பதுதான் எல்லாவற்றிலும் உத்தமமானது என்று சொல்லியிருக்கிறது.