நீலகண்டரும் மஹாதேவரும்* : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நீலகண்ட தீக்ஷிதர் பல விதத்தில் பெரியவர். குடிப்பெருமையை எடுத்துக்கொண்டால் பரமேச்ரவனின் அம்ச பூதரான அப்பைய தீக்ஷிதரின் தம்பிக்குப் பேரர். படிப்பு, அநுஷ்டானம் எல்லவாற்றிலும் சிறந்தவர். மஹாவித்வான். நல்ல பக்தர். பதவியிலும் பெரியவர். மஹால். தஹால் என்று மதுரையிலே சொல்கிற மஹாலையும், மீநாக்ஷி கோயில் புது மண்டபத்தையும் கட்டிய திருமலை நாயகருக்கு மந்த்ரியாக, அவருக்கு வலது கை மாதிரி விளங்கியவர். குணஸம்பத்தும் நிரம்பப் பெற்றவர். இப்படிப்பட்டவரும் ஒரு ஸமயம் தன் ஸ்தானம், யோக்யதை, குலம் முதலியவற்றினாலே உயர்வு மனப்பான்மை அடைந்து விட்டதாக இருக்கிறது.

தீக்ஷிதரின் காலத்தில் – அதாவது 16-ம் நூற்றாண்டின் பின்பாதி, 17-ம் நூற்றாண்டின் முன் பாதியில் – தஞ்சாவூர் ஜில்லா பழமார்நேரி க்ராமத்தில் மஹாதேவ சாஸ்த்ரி என்ற மஹா பண்டிதர் இருந்தார். பாண்டித்யம் குறைவில்லாமலிருந்தும் தீட்சீதரைப் போல இவருக்கு எல்லா ஜனங்களிடையேயும் ப்ரக்யாதி இல்லை. பண்டிதருலகுக்கு இவருடைய பெருமை தெரியும்.

பழமார்நேரிக்குப் பக்கத்தில் ஐராவதேச்வரர் கோயில் இருக்கிறது. அங்கே அலங்காரேச்வரி என்று அம்பாள் இருக்கிறாள். அந்த அம்பாளைத்தான் மஹாதேவ சாஸ்த்ரி நல்ல பக்தியோடு வழிபட்டுக் கொண்டிருந்தார். ப்ரார்த்தனை அப்யாஸத்தில் அவர் நன்றாக ஊறிப் போய் நாளாவட்டத்தில் அவருக்கு அலங்காரேச்வரியின் உத்தரவுகள் கிடைக்க ஆரம்பித்தன.

புத்ர ஸந்ததி இல்லை என்ற குறை அவருக்கு இருந்தது. இதற்காக ப்ரார்த்தித்த போது மதுரைக்குப் போய் அங்கே பராசக்தியின் பரிபூர்ண சைதன்ய விலாஸத்தோடு விளங்கும் மீநாக்ஷியம்மனை ஆராதனை செய்யும்படி அவருக்கு உத்தரவாயிற்று.

அப்படியே மதுரைக்குப் போனார். மீநாம்பிகையைப் பார்த்ததும் அவளிடம் ஆழ ஈடுபட்டு ஆராதித்துவர ஆரம்பித்துவிட்டார். தீட்சீதர் ஏற்கெனவே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். இப்போது அவர் மதுரை வந்திருப்பது தெரிந்தது. அவரை ஸந்திப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனாலும்…

மஹா பெரியவர்களானாலும் பதவி, ஸ்தானம் என்பவை எவரையும் எப்போதேனுமாவது கொஞ்சம் “அசக்கி” விடும். ஆனதால் தீட்சீதருக்கு, மந்த்ரி பதவியிலிருந்த தாம் தம்முடைய அந்தஸ்துக்குக் குறைவில்லாமலே சாஸ்த்ரிகளைப் பார்க்கணுமென்ற எண்ணம் ஏற்பட்டது. மஹாதேவ சாஸ்த்ரிகளே பேட்டிக்குக் கேட்டு அனுப்புவாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சாஸ்திரிகளுக்கா, மீநாக்ஷியை தர்சனம் பண்ணினதிலிருந்து அவளுடைய ஆராதனையைத் தவிர எந்தச் சிந்தனையுமில்லை. ‘அவாளைப் பார்பபோமா, இவளைப் பார்ப்போமா?’ என்ற ஆசை கொஞ்சமுமில்லை.

எல்லாம் அறிந்த அம்பாளே – அவள் ஸகல வித்யா ஸ்வரூபிணியானதால் – இந்த இரண்டு மஹாவித்வத்-குழந்தைகளும் ஸந்திப்பதற்கு ஸங்கல்பம் பண்ணினாள். இதனால், வித்வத்தோடு விநயமும் இருந்தாலே ஒருவருக்கு அழகு என்று தீக்ஷிதரும், அவர் மூலமாக லோகமும் தெரிந்துகொள்ளப் பண்ணணுமென்று நினைத்து, ஸம்பவங்களை உருவாக்கினாள்.

ஒருநாள் வீதியிலே தீக்ஷிதர் மந்த்ரி ஜபர்தஸ்துக்குரிய மரியாதைகளோடு பல்லக்கில் போய்க்கொண்டிருந்தார்.

மஹாதேவ சாஸ்த்ரிகள் பாட்டுக்கு அதே ஸமயத்தில் அம்பாளை தர்சனம் பண்ணிவிட்டு, அவளுடைய சரணார விந்தத்தை த்யானம் செய்தபடி அந்த வழியாகத் தம்முடைய ஜாகைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். பல்லக்கை அவர் கவனிக்கவில்லை.

வீதியிலே அத்தனைபேரும் மந்த்ரியை மரியாதை பண்ணணிக்கொண்டிருக்கும்போது, அசட்டுப் பிச்சு மாதிரி இப்படி ஒரு ப்ராமணன் அலட்சியமாக குறுக்கே போவதைப் பார்த்தார் தீக்ஷிதர். ‘அசட்டுப் பிச்சு மாதிரி இருந்துகொண்டு இத்தனை அஹங்காரம் வேறேயா?’ என்று தப்பாக நினைத்துவிட்டார்.

அதனால் அதட்டலாக, தம்முடைய பரிவார ஜனங்களைப் பார்த்து, “தொங்கல் காதோடு குறுக்கே வரும் இந்தப் பேர்வழி யார்? இவருக்கு ‘அர்த்த சந்த்ர’ உபசாரம் பண்ணி அனுப்பி வையுங்கள்” என்றார்.

மஹா பாண்டித்யமும், ரஸஞானமுமுள்ளவரானதால் கோபத்தில் உத்தரவு போடும் போதுகூடச் சமத்கார பாஷையில் “அர்த்த சந்த்ர உபசாரம்” என்று சொன்னார். “கல்தா” கொடுப்பதுதான் அர்த்த சந்த்ர உபசாரம் என்பது! கல்தா கொடுக்கிறபோது கையை அர்த்த சந்த்ரனைப் போல அரைவட்டமாக வைத்துக் கொண்டுதானே ஒருத்தர் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது? அதனால் இப்படிப் பெயர்!

ஆயாந்த – மத்வந் – யதி – தீர்க – கர்ணம் புதம் மஹாதேவ ஸுநாமதேயம் |

விலோக்ய மந்த்ரீ மகி ஸார்வ பௌம: ஸ்ரீநீலகண்ட: சிபிகாதிரூட: ||

நிஷ்காஸயைநம் த்வதி – தீர்க – கர்ணம் க்ருத்வார்த – சந்த்ரம் த்ருதமித்யுவாச |

சாஸ்த்ரீ ததாகர்ண்ய ஜரித் – யுவாச தம் தீக்ஷிதம் ஞாந லாவட்ய மூடம் ||

அத்வநி – வழியில்; அதி தீர்க கர்ணம் – தீர்க்கமான தொங்கல் காதுடன்; ஆயாந்தம் – வருகிற; புதம் – அறிவாளியான; மஹாதேவ ஸுநாமதேயம் – மஹாதேவ சாஸ்திரி என்ற நல்ல பெயருள்ளவரை;மகி ஸார்வபௌம:- தீக்ஷிதேந்த்ரரும்; மந்த்ரீ – மந்த்ரியும்; சிபிகாதிரூட – சிவிகையில் வீற்றிருந்தவருமான; ஸ்ரீநீலகண்ட, ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர், விலோக்ய – பார்த்து; அதி தீர்க கர்ணம் – தொங்கல் காதுக்காரரான; ஏதம் – இவரை; த்ருதம் – உடனே; க்ருத்வா அர்த சந்த்ரம் – ‘அர்த்த சந்த்ர மரியாதை’ செய்து; நிஷ்காஸய – விரட்டுங்கள்; இத்யுவாச – என்று சொன்னார்.

ச்லோகத்தில் முதல் மூன்று வரியில் வரும் இந்தக் கதையைத்தான் இதுவரை சொன்னேன்.

நாலாம் வரியில் என்ன சொல்லியிருக்கிறதென்றால், இப்படி தீக்ஷிதர் சொன்னதைக் கேட்டதும் சாஸ்த்ரிகளும் உடனே பளிச்சென்று பதில் கொடுத்தார். “மகி ஸார்வ பௌமர்”, “மந்த்ரி” என்று பெயர் பெற்றிருந்த தீக்ஷிதர் லவலேச ஞானத்தினாலே ஊதிப்போயிருந்த கற்றறி மூடர்தான் என்று மஹாதேவ சாஸ்த்ரி சுடச்சுட பதில் சொன்னதாக அந்த வரியில் இருக்கிறது.

தத – அதை (தீக்ஷிதர் சொன்னதை) , ஆகர்ணய் – கேட்டு, சாஸ்த்ரீ – மஹாதேவ சாஸ்த்ரிகள், ஜ்ஞாநலவாட்ய மூடம் – லவலேச ஞானத்தாலே வீங்கிப் போன அறியாதாராகிய, தம் தீக்ஷிதம் – அந்த தீக்ஷிதரிடம், ஜரித்யுவாச – ஜடிதியில் பதில் சொன்னார்.

என்ன பதில்?

‘தெருவோடு, தான்பாட்டுக்கு தேவி சிந்தனையோடு போகிற ஒரு அப்பாவி -யைக் கழுத்தைப் பிடித்துத்தள்ளு என்கிறவர் எப்படிப்பட்டவராயிருப்பார்? படாடோபத்தைப் பார்த்தால் பெரிய பதவிக்காரரென்று தெரிகிறது. ‘அர்த்தசந்த்ர உபசாரம்’ என்கிறதிலிருந்து படிப்பும் இருப்பது தெரிகிறது. ஆனால் அது வெறும் படிப்பாயில்லாமல் நிஜமான கல்வி யிருந்தால் இத்தனை டம்பமும் இறுமாப்பும் இருக்குமா? இந்தப் பாண்டிய தேசத்தில் தற்போது நிஜமான ஸத்வித்வான்கள் இல்லாத குறையினாலேதான் இந்த அரைகுறை ஆஸாமி பெரிசாக சோபித்துக்கொண்டு ‘தாட்பூட்’ பண்ணமுடிகிறது’ என்று மஹாதேவ சாஸ்த்ரி நினைத்தார். தம்முடைய இந்தக் கருத்தைக் கவிநயத்தோடு சொல்லாமல் சொல்லி, தீக்ஷிதரைத் தலை குனியவைத்துப் பாடம் பெறும்படிச் செய்யவேண்டும் என்று நினைத்தார். பளீரென்று ச்லோக ரூபத்திலே பதில் கொடுத்தார்.

“ஸூர்யன் அஸ்தமித்தாச்சு. இன்னும் சந்த்ரனும் உதிக்கவில்லை. நட்சத்திரங்கள் சிலதுதான் ஏதோ கொஞ்சம் முணுக் முணுக்கென்று தெரிகிற ஸமயம். இப்படி ஒரே இருட்டாக இருக்கிறபோது மின்மினிப் பூச்சி படாடோபமாக ஜ்வலித்துக் காட்டுவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லையே!” – இவ்வளவுதான் சாஸ்த்ரிகள் சொன்னார்.

ஸூர்ய ப்ரநஷ்டே சசிநிஹ்யத்ருஷ்டே தாராஸு மந்த – த்யுதிஷு ப்ரகாசம் |

மஹாந்தகாரே (அ) திவிராஜிதே ஹி கத்யோதகோப் – யல்ப – ருசிர் – ந சித்ரம் ||

ஸூர்ய ப்ரநஷ்டே – ஸூர்யன் மறைந்து, சசிநி ஹி அத்ருஷ்டே – சந்த்ரன் பார்வைக்கு வராமல், தாராஸு – நட்சத்திரங்கள், மந்த த்யுதிஷு ப்ரகாசம் – ஒளிமங்கி இருக்கிற, மஹாந்தகாரே – நல்ல கும்மிருட்டின்போது, கத்யோதக, அபி – மின்மினிப் பூச்சிகூட (‘க’ என்றால் ஆகாசம், ‘த்யோதகம்’ என்றால் ஒளியுள்ளது. வானத்தில் ஒளியைப் பரப்பிக் கொண்டு போவதால் மின்மினிப் பூச்சிக்கு இப்படிப் பெயர்) , அல்ப ருசி – தன்னுடைய ஸ்வல்ப ப்ரகாசத்தாலேயே, விராஜதே – பெரிசாக ஜொலிப்புக் காட்டுகிறது, (இதிலே) ந சித்ரம் – ஆச்சர்யமில்லை.

இப்படி அவர் ஜாடையாகச் சொன்னதே தீக்ஷிதருக்குப் போதுமானதாக இருந்தது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்களல்லவா? அநேக விதத்திலே மேன்மை பெற்றிருந்த தீக்ஷிதர் உடனே அம்பாளை த்யானித்துப் பார்த்ததில் அவருக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. தாம் எந்த மஹா பண்டிதரைப் பார்க்க ஆசைப்பட்டோமோ, அவரையேதான் ‘தொங்கல் காதர்’ என்று எடுத்தெறிந்து பேசி விட்டோம், அவர் உபாஸிக்கிற அலங்காரேச்வரிதான் அவரை இங்கே தம்முடைய இஷ்டமூர்த்தியாக உள்ள மீநாக்ஷியிடம் அனுப்பியருக்கிறாள் -என்று தெரிந்து விட்டது.

பெரியவர்களாகப்பட்டவர்கள் தாங்கள் செய்த தப்பை மனஸ் விட்டு ஒப்புக்கொள்வதிலும் பெரியவர்களாக இருப்பார்கள். உடனே தீக்ஷிதர் பல்லக்கிலிருந்து குதித்து நேரே மஹாதேவ சாஸ்த்ரியிடம் போய், அவருக்கு சாஸ்த்ரோக்தமாக ரொம்பவும் மரியாதைகள் பண்ணி “அலங்காரி அனுப்பிவைத்துத்தானே மீநாக்ஷியை தர்சிக்க வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இவர் இப்படிக் கேட்டதிலேயே சாஸ்த்ரிகளுக்கும் இவருடைய பெருமை தெரிந்தது.

அம்பாளுடைய வித்வித் – குழந்தைகள் இரண்டும் அவள் ஆசைப்படியே ஒற்றுமையாய்ச் சேர்ந்துவிட்டன!

நிசம்ய தத் – துஷ்ட -மநா மகி ச தஸ்மை ஸபர்யாம் விதிவத் சகார |

பவாந் அலங்கார்யபி – சோதித ஸந் மீநாம்பிகாம் ஸேவிதும் ஆஜகாம ||

மகீச – தீக்ஷிதரும், தத் – அதை (சாஸ்த்ரி சுடச்சுடச் சொன்ன பதிலை) , நிசம்ய -கேட்டு, து (tu) ஷ்ட மநா:- ஸந்தோஷமுற்ற மனத்தவராக…

நமக்காயிருந்தால், ‘மந்த்ரியாயும் வித்வானாயுமுள்ள நம்மை நடுவீதியிலே எவனோ ஒருத்தன் வெறும் மின்மினிப் பகட்டுக்காரன் என்று சொல்வதா?’ என்று பற்றிக் காண்டு வரும். உத்தம குணமுள்ள தீக்ஷிதரின் மனஸோ, இப்படி அவர் தமக்குப் பாடம் புகட்டியதில் ஸந்தோஷமே அடைந்தது. பவபூதியின் ஓலையில் அம்பாள் தேனைச் சுண்டிவிட்டு தன்னைத் தோற்கப் பண்ணினதையே காளிதாஸன் “மே ஸெளபாக்யம்” என்ற பாடினாற்போலத்தான்!

(தீக்ஷிதர் சாஸ்த்ரிகளின் சூடான பதிலைக் கேட்டு ஸந்தோஷம் அடைந்தவராக) தஸ்மை – அவருக்கு, ஸபர்யாம் – மரியாதைகளை, விதிவத் – விதிப்படி, சகார – செய்தார். பவாந் – தாங்கள், அலங்காரி அபிசோதித:ஸந் – அலங்காரியால் தூண்டப்பட்டவராகி, மீநாம்பிகாம் – மீநாம்பிகையை, ஸேவிதும் – ஸேவிப்பதற்கு, ஆஜகாம – வந்திருக்கிறீர்கள். இல்லையா? (என்று கேட்டார்) .

தாம் ராஜாவின் வலது கையாக, அல்லது ராஜாவும்கூட தம்முடைய வார்த்தைப்படி நடக்கிறவனாக, எந்தப் பட்டணத்தில் பெரிய கௌரவம் பெற்றிருந்தாரோ, அங்கேயே நட்ட நடுவீதியில் சற்றுமுன்தான் தம்மால் வெகு அலக்ஷியமாகப் பரிஹாஸம் செய்யப்பட்ட ஒரு ஊர்பேர் தெரியாதவரிடம், அவர் தம்மை பதிலுக்கு ஒரே போடு போட்டபோது, அடக்கத்தோடு போய் ஸத்காரம் செய்து தீக்ஷிதர் குசலம் விசாரித்திருக்கிறார்!

இப்படியாக, பெரிய அறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் அஹங்காரம் ஏறுவதுகூட முடிவிலே அவர்களை மேலும் உசத்தி, நமக்கும் பாடம் புகட்டுவதாகவே அமைகிறது.


* இப்பகுதியில் “குருகுலம்; கடிகாஸ்தானம்” என்ற உரையில் “அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு” என்ற பிரிவில் குறிப்பிடப்பட்டதன் விரிவு.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வில்லிப்புத்தூராரும் அருணகிரிநாதரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  விகாரமும் ஏற்றம் பெறுகிறது
Next