“உபாத்யாயர்” பெற்ற உயர்வு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ரொம்பவும் பொருத்தமாக, வேத ஸம்பந்தத்தில் உண்டான உபாத்யாயர் (வாத்யார்) என்ற பெயரையே பிற்கால டீச்சர்களுக்கு வைத்துவிட்டார்கள். இந்த டீச்சர்கள் சம்பளத்துக்குச் சொல்லிக் கொடுக்கிறவர்கள்தானே?

ஜீவனோபாயத்துக்காக போதிக்காமல், “போதிப்பதுதான் நம் ஜீவதர்மம்” என்று இருந்த நிஜமான ஆசார்யர்கள் குறைந்து குறைந்து, உபாத்யாயர்கள் வளர வளர, உபாத்யாயர் (வாத்யார்) என்ற பெயர் இன்ஃபீரியாரிடியைக் குறிப்பதாக இல்லாமல் மதிப்புள்ளதாகவே ஆகி விட்டது. ‘ஒரிஜினல் மீனிங்’ போய், வித்யை போதிக்கும் எவரும் உபாத்யாயர் என்றாகிவிட்டது. ஆசார்யராக இருப்பவரைக்கூட உபாத்யாயர் என்று குறிப்பிடுவதாக ஆகிவிட்டது. இதனால்தான் வேத போதனையே பரம்பரையாகச் செய்துவந்த பல வடக்கத்திக்காரர்கள் ‘இன்ஃபீரியாரிடி எதுவுமில்லாமல் தங்கள் பேரோடேயே ‘உபாத்யாயா’ என்று சேர்த்துப் போட்டுக்கொள்கிறார்கள்.

வங்காளத்தில் முகர்ஜி, சட்டர்ஜி, பானர்ஜி என்று பலர் இருக்கிறார்களல்லவா? இதையே இன்னும் விரித்து சுத்தமாக முகோபாத்யாயா, சதுரோபாத்யாயா, வந்த்யோபாத்யாயா என்று போட்டுக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். ‘முக உபாத்யாயா’ என்பதில் ‘முகம்’ என்றாலே வேதம். முகம் என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் வாயையும் குறிக்குமென்று தெரிந்திருக்கலாம். வாய் என்பது வார்த்தையைக் குறிப்பது. வார்த்தையென்றாலே வேத வாக்குத்தான் என்று கருதி வேதத்துக்கும் ‘முகம்’ என்று பெயர் வைத்திருக்கிறது. வேதத்தைக் கற்பிக்கும் உபாத்யாயரே முக உபாத்யாயாவான முகர்ஜி. சதுரோபாத்யாயா என்பதில் வரும் ‘சதுர்’ – சட்டர்ஜியில் ‘சட்டர்’ என்றாகியிருக்கும். ‘சதுர்’ – சதுர்வேதங்களைக் குறிப்பதுதான். ராமக்ருஷ்ண பரமஹம்ஸா ஒரு சட்டோபாத்யாயா குடும்பத்தில் பிறந்தவர்தான். அவருடைய பத்னி, “ஹோலிமதர்” என்கிறார்களே, அந்த அம்மாளுடைய பிறந்தகத்தினர் முகோபாத்யாயர்கள். வந்த்ய உபாத்யாயா என்றால் வணக்கத்துக்குரிய வாத்யாரென்று அர்த்தம். ‘வந்த்ய’ என்பது ‘பந்த்ய’ என்று பெங்காலி வழக்கப்படி ஆகி, அதுவும் மாறி மாறி, கடைசியில் ‘ஜி’ போட்டுக் கொண்டு பானர்ஜி ஆகியிருக்கிறது.

ஆக உபாத்யாயர் என்பது ‘ரெஸ்பக்டபிள்’ (மதிப்புக்குரிய) வார்த்தையாகி விட்டது. பிற்காலத்தில் பிரிட்டிஷ் ராஜ்யத்தில்கூட மஹாபண்டிதர்களுக்கு ‘மஹாமஹோபாத்யாய’ என்று பெரிய கௌரவமாகப் பட்டம் கொடுத்தார்களல்லவா? இந்தப் பட்டம் வாங்கினவர்களில் பலபேர் மிக உயர்ந்த ஆசார்ய லட்சணத்தோடு, வருமானத்தைப் பற்றிய எண்ணமே இல்லாமல், தங்கள் கைக்காசையும் ஸொத்தையுமே செலவழித்துங்கூட குருகுலம் நடத்தியவர்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அன்னை தந்தை ஆசான்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஈச்வர ஆராதனையாக
Next