ஈச்வர ஆராதனையாக : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன. ஜனங்கள் அவற்றில் எதையோ ஒன்றை மேற்கொண்டு ஊழியம் செய்வது ஊதியத்துக்காகத்தான். இதில் தப்பாகவோ, கௌரவக் குறைச்சலாகவோ எதுவும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. ஆனாலும் காசுக்காக ஈச்வர பூஜை பண்ணுவதையும், கல்வி போதிப்பதையும் மாத்திரம் பழைய காலத்தில் ரொம்பவும் நிக்ருஷ்டமாக (தாழ்வானதாக) நினைத்திருக்கிறார்கள். ஆத்ம நிறைவையே தரக்கூடியவற்றைக் கேவலம் வயிற்றை நிரப்பிக் கொள்வதோடு ஸம்பந்தப்படுத்துவது தகாது என்ற எண்ணமே காரணம். இதிலிருந்து வித்யோபாஸனையை ஈச்வர ஆராதனைக்கு ஸமமாக நினைத்திருக்கிறார்களென்று தெரிகிறது.

அவரவரும் தமது ஜாதிக்கான தொழிலைச் செய்து ஸம்பாதிக்க வேண்டுமென்பது சாஸ்த்ரம். பிராம்மணனின் தொழிலென்ன என்றால், பழந்தமிழ் நூல்களைப் பார்த்து விட்டால் தெரியும்: அவர்களுக்கு ‘அறுதொழிலோர்’ என்று பெயர். அந்தணர்கள் ஆறு தொழில்கள் செய்யவேண்டும். அவர்களை ‘ஷட்கர்ம நிரதர்’ என்பார்கள். என்னென்ன? ஒன்று, அத்யயனம் – அவன் வேதங்களைக் கற்க வேண்டும். இதில் ஸம்பாதனத்துக்கு இடமில்லை. இரண்டு, அத்யாபனம் – பிறருக்கு இவன் கற்பிக்க வேண்டும். வேதங்களை மட்டுமில்லை; எல்லாத் தொழில்களையும் இவன் தெரிந்து கொண்டு அததற்கு ஏற்பட்ட ஜாதியாருககுக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இப்படிச் சொன்னதால் ஒவ்வொரு ப்ராம்மணணும் அத்தனை தொழிலையும் கற்றறிந்திருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அது ஸாத்யமில்லை. இவனால் லோக ஷேமத்துக்காக நடக்கவேண்டிய வேத போதனைக்கும் கர்மாநுஷ்டானத்துக்கும் குந்தகமெனில், அவை போக மிச்சமுள்ள நேரத்தில் இவன் வேறு ஒன்றிரண்டு தொழில்களைப் பற்றியும் அறிந்துகொண்டு அத்தொழிலுக்குரியவர்களுக்குச் சொல்லித்தர வேண்டுமென்றே அர்த்தம். இப்படித்தான் ஆயுர்வேதம், அர்த்த சாஸ்த்ரம், நாட்டிய சாஸ்த்ரம், தநுர்வேதம் போன்றவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு சில ப்ராம்மணர்கள் ‘ஸ்பெஷலைஸ்’ பண்ணி அவற்றை உரிய வகுப்பாருக்கு போதித்ததாகப் புராண இதிஹாஸங்களிலிருந்து தெரியவருகிறது.

மற்ற வகுப்பினருக்கான தொழில்களை ப்ராம்மணன் அவர்களுக்கு போதிக்க மட்டுந்தான் வேண்டும்; அந்தத் தொழில் எத்தனை ஸம்பாத்யத்தைத் தருவதாயிருந்தாலும், ஜீவனோபாயமாகத் தானே அதைச் செய்து தொழில் நடத்திவிடக்கூடாது. கற்றுக்கொள்பவர்கள் இஷ்டப்பட்டுத் தரும் தக்ஷிணையிலேயே இவன் த்ருப்தனாயிருக்கவேண்டும். அதாவது மற்றத் தொழிலார்கள் தத்தம் தொழிலைச் செய்து நன்றாய் ஸம்பாதிக்க உதவுபவனாக மட்டும் இருந்துகொண்டு, அந்தத் தொழிலைத் தான் “மூட்டை கட்ட” ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளாமலிருக்கவேண்டும். இது மாத்திரமில்லை – இவனுக்கே குலத்தொழிலாக உள்ள இந்த ‘டீச்சிங்’கையுங்கூட இவன் ஸம்பாத்ய நோக்கமில்லாமல், வித்யையைப் ப்ரசாரம் செய்யவேண்டுமென்பதே நோக்கமாகக் கொண்டுதான் ஈச்வர ப்ரீதியாகச் செய்யவேண்டுமென்று விதித்திருக்கிறது.

இதையெல்லாம் கவனிக்காத குறைதான், ப்ராம்மணன் தன்னலமாக சாஸ்த்ரங்களை எழுதி வைத்துக்கொண்டிருப்பதாகக் குறை சொல்வது. திறந்த மனஸோடு பார்த்தால் ப்ராம்மணன் ஸொந்த நலனுக்காகத் தனக்கு privilege (சலுகை) எதுவும் வைத்துக்கொள்ளவில்லை; அது மட்டுமில்லாமல் தனக்கே அநேக disadvantage (ப்ரதிகூலங்களையும்) வைத்துக்கொண்டு ஆத்மாபிவ்ருத்திக்காகவும் லோக க்ஷேமார்த்தமாகவும் தன்னை உலக வாழ்க்கையில் ரொம்பவும் வாடப்போட்டு வருத்திக்கொண்டானென்று தெரியும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'உபாத்யாயர்' பெற்ற உயர்வு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'ஏற்பது இகழ்ச்சி'
Next