“ஏற்பது இகழ்ச்சி” : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அறுதொழிலில் அத்யயனமும் அத்யாபனமும் போக பாக்கி நாலு யஜனம் (இவன்) ஸொந்தமாக யாகம் செய்வது, யாஜனம் (பிறத்தியாருக்கு யாகம் பண்ணி வைப்பது) , தானம் (தானம் கொடுப்பது) , ப்ரதிக்ரஹம் (தானம் வாங்கிக்கொள்வது). யஜனத்திலும் தானத்திலும் செலவுதானே தவிர ஸம்பாத்யமில்லை. பிறருக்கு யாகம் பண்ணிவைப்பதில் தக்ஷிணை கிடைக்கும்; ப்ரதிக்ரஹத்திலும் மான்யங்கள் பெறலாம். ஆனாலும், இங்கேயும் ஒரு முக்யமான விஷயம் கவனிக்க வேண்டும். பொதுவாக “ஏற்பது இகழ்ச்சி” என்று வைத்ததோடு, தானம் வாங்கும்போது கொடுக்கிறவனுடைய பாமும் வாங்குகிறவனுக்கு வந்து விடும் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறது! இன்ன தானம் இன்னானிடம் வாங்கினால் இன்ன ப்ரயாச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றும் பெரிய லிஸ்ட் கொடுத்து பயமுறுத்தியிருக்கிறது. வேறே யாரோ பயமுறுத்தவில்லை, ப்ராம்மணனேதான் தன்னைத்தானே பயமுறுத்திக்கொண்டு சாஸ்த்ரத்தில் எழுதி வைத்திருக்கிறான். பெரிய ச்ரௌதிகளாக இருப்பவர்கள் தாங்களே யாகம் செய்யும் யஜமானராக இருந்து யஜ்ஞ பலனைத் தான் பெற விரும்புவார்களேயன்றி, இன்னொருத்தருக்குப் பண்ணிவைத்து இந்தப் பலனை விட மிகக் குறைந்ததான தக்ஷிணை என்பதைப் பெற விரும்ப மாட்டார்கள். ‘யாஜனம்’ பிராம்மணனின் கடமையாச்சே என்பதற்காகவே பண்ணிவைத்து, அதில் கிடைக்கும் தக்ஷிணையை ஏதாவது புண்யத்துக்குச் செலவழித்துவிடுவார்கள்.

ஆக ஆறு தொழிலென்று சொன்னாலும் ஸம்பாத்யத்தைப் பார்த்தோமானால் அத்யயனம், யஜனம், தானம் என்ற மூன்றிலும் வரவுக்கு இடமேயில்லை. யாஜனத்திலும், ப்ரதிக்ரஹத்திலும் ஸம்பாதிப்பதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடு. பாக்கியுள்ள ஒன்றே ஒன்றான டீச்சிங் (அத்யாபனம்) நியாயமான வருமானம் நிறையக் கொடுக்கக் கூடியதென்றாலும் அதையும் வித்யாதானமாகத்தான் செய்து அதன் தெய்வாம்சத்தை ரக்ஷிக்கவேண்டுமேயன்றி அதை வருமானக் கண்ணோட்டத்தோடு மேற்கொள்ளக்கூடாது என்று வைத்துக் கொண்டுவிட்டார்கள்.

கேட்காமலே சிஷ்யனாகக் கொடுக்கிறபோது, அதை ஆசார்யர் ஏற்றுக்கொண்டாலும், இங்கேயுங்கூட உசந்த ஆசார்யர்கள், ‘கற்றுக் கொண்டாச்சு’ என்று சிஷ்யன் த்ருப்திப்பட்டு தக்ஷிணை கொடுப்பதை விஷயமாக நினைக்காமல், ‘கற்றுக் கொடுத்தாச்சு’ என்று தாங்களே த்ருப்தி அடைந்தால்தான் தக்ஷிணையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். “ப்ருஹதாரண்யக” (உபநிஷ)த்தில் (நாலாவது அத்யாயம், முதல் ப்ராஹ்மணத்தில்) வருகிறது: யாஜ்ஞவல்க்யர் ஒவ்வொரு உபதேசமாகப் பண்ணப் பண்ண, ஜனகர் ஒவ்வொரு தரமும் அவருக்கு ஸம்பாவனை பண்ண ஆரம்பிக்கிறார். ஆனால் யாஜ்ஞவல்க்யரோ, “பூர்ணமாக உபதேசம் பண்ணாமல் தக்ஷிணை வாங்கிக் கொள்ளக்கூடாது என்பது என் பிதாவின் அபிப்ராயம்” என்று சொல்லி, திரும்பத் திரும்ப தக்ஷிணையை ஏற்க மறுக்கிறார்!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஈச்வர ஆராதனையாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பிற நாடுகளில் இல்லாத சிறப்பு
Next