பிற நாடுகளில் இல்லாத சிறப்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதனாலேதான் மற்ற எந்த தேசத்திலும் ‘டீச்சர்’ என்பதற்கும், நம் தேசத்தில், ‘குரு’, ‘ஆசார்யர்’ என்று சொல்வதற்கும் மதிப்பு மரியாதைகளிலே அஜகஜாந்தரமாக இருக்கிறது. ‘டீச்சர்’ என்பவன் ஈச்வரனே, அல்லது அவனுடைய பிரதிநிதி, அவனிடம் மாணவன் ஸர்வஸங்க பரித்யாகம் செய்துவிட வேண்டும் என்ற அபிப்ராயங்கள் மற்ற தேசத்துக்காரர்களுக்கு அடியோடு தெரியாது. ஏதோ ‘அவன் ரொம்பக் கெட்டிக்காரன். அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறான், தெரிந்துகொண்டதோடு அதைப் பிறருக்கும் அழகாகச் சொல்லிக்கொடுக்கத் திறமை பெற்றிருக்கிறான்’ என்பதோடு நிறுத்திக்கொண்டார்கள். டீச்சராக இருக்கப்பட்டவனும் தன்னை அப்படித்தான் நினைத்துக்கொண்டு அந்த மாதிரி தன்னை வளர்த்துக் கொள்வதோடு நின்றுவிட்டான்.

நம் தேசத்திலோ பொருளுக்காக வித்யோபதேசமில்லை என்பதிலிருந்து, ஆசார்யனாகப்பட்டவன் ரொம்பவும் தூய வாழ்வு வாழ்ந்து ஆத்மாநுபவியாகவே இருக்கவேண்டும்மென்ற அளவுக்கு அவனுடைய யோக்யதாம்சம் ரொம்பவும் உச்சத்துக்குப் போய்விட்டது. புத்திசாலித்தனம், நிறைய விஷயம் தெரிந்துகொண்டிருப்பது, அதை எடுத்துச்சொல்லிப் புரியவைக்கிற ஸாமர்த்யம் எல்லாம் மூளையின் கார்யங்கள். மற்ற தேசங்களைப் போல இந்த மூளைச் சிறப்போடு மட்டும் நம் தேச ஆசார்யன் நின்றுவிடவில்லை. அவன் வாழ்க்கையில் பரிசுத்தனாயிருக்கவேண்டும்; வேதம் சொல்லிக் கொடுக்கிறானே, அதன்படி வழுவாமல் கர்மாநுஷ்டானம் செய்பவனாயிருக்க வேண்டும் என்றும் வைத்தார்கள்.

மூன்று லக்ஷணம் உள்ளவர்தான் ‘ஆசார்யர்’ என்று வைத்தார்கள். ஒன்று, சாஸ்திர ஸித்தாந்தத்தை நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கவேண்டும் (“ஆசிநோதி ஹி சாஸ்திரார்த்தம்”); இரண்டு, தெரிந்ததை வாழ்க்கையில் நடத்திக்காட்டும் ஆசார ஸம்பந்தராக இருக்கவேண்டும் (“ஸ்வயம் ஆசரதே”); மூன்று, இப்படித் தனக்குத் தெரிந்து, அநுஷ்டிக்கும் சாஸ்திரத்தைப் பிறருக்கும் (கற்றுக்கொடுத்து) அவர்களையும் ஆசார வாழ்க்கையில் நிலைநாட்டவேண்டும் (“ஆசாரே ஸ்தாபயத்யபி”). தெரிந்துகொண்டு மட்டுமிருப்பவர் ‘வித்வான்’ – அவருக்கு ‘ஆசார்யர்’ என்ற ஏற்றம் கிடையாது. கற்றுக்கொடுக்காமல் தான் மட்டும் சாஸ்திரோத்தமாய், அதன் தத்தவத்தை உணர்ந்து வாழ்பவரை ‘அனுஷ்டாதா’ என்றும், இன்னம் உயர்ந்தால் ‘அநுபவி’ என்றும்தான் சொல்வார்களே தவிர ‘ஆசார்யர்’ என்று சிறப்பிக்க மாட்டார்கள். வாழ்க்கையில் நடத்திக் காட்டாமல், தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிகொடுப்பவரை ‘பிரசாரகர்’ என்பதற்கு மேல் சொல்வதற்கில்லை. மூன்றும் சேர்ந்தாலே ‘ஆசார்ய’ பட்டம்.

கசடறக் கற்றபின் அதற்குத் தக்கபடி ஒருத்தன் வாழ்க்கை நடத்தவேண்டும்–“நிற்க அதற்குத் தக“– என்று திருவள்ளுவர் சொன்னார். இப்படி, தான் கற்று கற்றவழி நிற்பதோடு பிறருக்கும் கற்பித்து கற்பிப்பதோடு விடாமல் அவர்களும் கற்றவழி நிற்க ‘ட்ரெயின்’ செய்கிறவன்தான் ஆசார்யன். அப்படி அநேகர் இருந்து வந்திருப்பதுதான் நமக்குப் பெருமையிலெல்லாம் பெரிய பெருமை.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று ரொம்பவும் பெரியவரான அந்த வள்ளுவரே சொல்லி விட்டார். அப்படிப்பட்ட பொருளைப் பொருட்டாக நினைக்காமல், ‘வித்யை வளரணும் என்பதற்காகவே பாடம் சொல்லிக் கொடு’ என்று இவனுக்கு விதி செய்து இவனை த்யாக சிந்தையில் நன்றாக ஊறப் போட்டார்கள். த்யாக சிந்தை வந்து லோகோபாகாரமாகவே நிஷ்காம்ய கர்மா ஒருத்தன் பண்ண ஆரம்பித்துவிட்டால் அப்புறம் அவனிடம் எல்லா ஆத்மா ஸம்பத்துகளும் ஒன்று பாக்கியில்லாமல் வந்துவிடும். “த்யாகத்தினாலேயே பலபேர் அம்ருதத்வத்தை அடைந்திருக்கிறார்கள்” என்று ச்ருதியே சொல்கிறது. 1

நிரம்பக் கர்மாநுஷ்டானங்களைப் பண்ணி அதனால் ஏற்படும் சித்த சுத்தியோடுகூட பொருள்பற்று இல்லாமல் நிஸ்ப்ருஹனாக ஒருத்தன் ஊரான் வீட்டுப் பசங்களைத் தன் பர்ணசாலையிலேயே வைத்துக்கொண்டு ஸதா ஸர்வதா வித்யாதானம் பண்ணி வந்ததனால்தான் அவன் உயர்ந்த ஆத்மா ஸம்பத்துக்களைப் பெற்றுத் தானாகவே நிரம்ப ரெஸ்பெக்ட் கம்மாண்ட் பண்ண முடிந்தது. விஷயம் நன்றாகத் தெரிந்த புத்திமான் என்பதற்காக மாத்திரம் ஒருத்தனை ‘தெய்வமாய் நினை, அவனிடமே ஸர்வ ஸங்க பரித்யாகம் பண்ணு’ என்றால் யார் கேட்பார்கள்? அவனிடம் தூய்மையான வாழ்க்கை, த்யாக புத்தி, ஊரான் வீட்டுக் குழந்தைகளைத் தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளாக நினைத்துப் பராமரிக்கிற அருளியல்பு முதலானதுகளும் நம் தேசத்தில் இருந்ததால்தான் சிஷ்யர்கள் அவனை ஈச்வரனாக நினைத்து சரணாகதி செய்ய முடிந்தது. இப்படி வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது.


1 தைத்ரீயோபநிஷத்- நாராயணவல்லீ-தஹரவித்யை

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'ஏற்பது இகழ்ச்சி'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  உலகியல் படிப்பிலும் உத்தம ஆசார்யர்கள்
Next