உலகியல் படிப்பிலும் உத்தம ஆசார்யர்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வேதம் சொல்லிக்கொடுத்தவர்தானென்றில்லை, மற்ற ஸெக்யுலர் ஸப்ஜெக்ட்கள் (உலகியல் படிப்புகள்) சொல்லிக் கொடுத்தவர்கள்கூட இப்படிப்பட்ட உத்தமமான யோக்யதாம்சங்களைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆத்மாநுபவம், திவ்யாநுபவங்கள் வேண்டுமானால் அவர்களிடம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் மிகவும் உயர்ந்ததான மநுஷ்ய குணங்கள் அவர்களுக்கு இருந்திருக்கின்றன பொதுவாக இப்படியிருந்தால்தான் அவர்களிலேயே கோபிஷ்டராக, பக்ஷபாதமுள்வராகச் சில ஆசார்யர்கள் வந்தபோதுங்கூட இவர்களிடமும் சரணாகதி பண்ணிவிட்டு பக்தி விச்வாஸத்தோடு இவர்களுக்கு ஸேவகம் செய்யும் சிஷ்யர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் சண்டை போடச் சொல்லிக் கொடுக்கும் தநுர்வேத ஆசார்யராகவே இருந்த த்ரோணரிடம் ஏகல்வ்யன் (ஏகலைவன்) எப்படி சரணாகதி பண்ணியிருப்பான்? பரசுராமருக்கு எப்படிக் கர்ணன் அடிமை மாதிரிப் பணிவிடை பண்ணியிருப்பான்?

டான்ஸ் கற்றுக் கொடுப்பவனுக்குக்கூட ‘ஆசார்ய’ பட்டம் கொடுத்து “ந்ருத்யாசார்யன்” என்னும்படியாக, நம் தேசத்து டீச்சர்கள் தங்களுடைய வித்தையில் தேர்ச்சி பெற்றிருந்தது மட்டுமல்லாமல் ஒப்பற்ற ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். ஸங்கீதத்திலே பெரிய ஸிம்ஹம், தான் ஸேன் என்ற உஸ்தாத் அக்பர் ஸபையில் இருந்திருக்கிறான். அவனுடைய ஸங்கீத ஆசார்யர் ஹரிதாஸைப் பற்றிப் படிக்கும்போது அவர் ரிஷி மாதிரியான மஹானாக இருந்திருக்கிறாரென்று தெரிகிறது. ஹரிதாஸ் ஸ்வாமி என்றே சொல்கிறார்கள்.

இங்கேயே திருவையாற்றிலே நூறு வருஷத்துக்குள்ளே மஹா வைத்யநாத சிவன் என்று ஸங்கீத வித்வான் இருந்திருக்கிறார். பெயரையே சொல்லாமல் ‘சிவன்வாள்’ என்றே சொல்லும்படியாக அத்தனை உயர்ந்த வாழ்க்கை நடத்தியிருக்கிறார். ஒருநாள் சிவபூஜை தப்பினது கிடையாது, ஒருவேளை ஸந்த்யாவந்தனம் தப்பினது கிடையாது. வெளியூர்களில் கச்சேரிக்குப் போகிறபோது பூஜைப் பெட்டி வந்துசேராவிட்டால் அன்றைக்குப் பட்டினிதான். ஸாயம் ஸந்த்யோபாஸனைக்குக் குந்தகமில்லாமல் கச்சேரியை மூன்று மணிக்கே ஆரம்பித்து ஆறு மணிக்குள்ளே முடித்து விடுவாராம். அப்படிச் செய்ய முடியாவிட்டால் ஸந்த்யாவந்தனம் ஆனவிட்டு ஆறரை மணிக்கு மேலேதான் கச்சேரி ஆரம்பிப்பாராம். நிர்பந்தமாக எங்கேயாவது நாலு மணி, அஞ்சு மணிக்கு ஆரம்பிக்க நேர்ந்தாலும் ஸரியாக ஸந்த்யா காலத்திலே கச்சேரியை நிறுத்திவிட்டுப் போய் ஸந்த்யாவந்தனம் பண்ணிவிட்டுத் திரும்பிவந்துதான் கச்சேரியை விட்ட இடத்தில் ஆரம்பிப்பது என்று வைத்துக் கொண்டிருந்தாராம்.

பணம், காசு, வழக்கு எல்லாம் முழுக்க அவருடைய அண்ணா ராமஸ்வாமி சிவன்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரும் நல்ல பக்தி, ஸாஹித்ய வ்யுத்பத்தி எல்லாம் உள்ளவர். அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிப் பெரிய புராணக் கீர்த்தனைகள் என்று பண்ணியிருக்கிறார். அவர் பொறுப்பிலேயே எல்லாம் விட்டுவிட்டுத் தம்பி ஸங்கீதம், சிவபூஜை, காயத்ரி இதுவே வாழ்க்கை என்று இருந்திருக்கிறார். சிஷ்ய பரம்பரை உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம்கூட அவருக்கு இல்லை. ஆனாலும் அவருடைய சீலத்தினால் அவரை தெய்வமாக மதித்துத் தாங்களாகவே ஒரு இருபது முப்பது சிஷ்யர்கள் எப்போது பார்த்தாலும் அவருடைய க்ருஹத்திலே இருந்து கொண்டு, அவர் இவர்களை உட்கார்த்தி வைத்து சிக்ஷை என்று சொல்லிக் கொடுக்காவிட்டாலும்கூட இவர் பாட்டுக்கு ஆத்மார்த்தமாகப் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கேட்டே பாடம் பண்ணிவிடுவார்களாம். அந்த இருபது முப்பது பேருக்கும் இவரே சாப்பாடு போட்டிருக்கிறார், குரு தக்ஷிணை என்று எதுவும் வாங்கிக் கொள்ளாமலே!

ஆடல் பாடல் கற்றுக் கொடுத்தவர்கள், கத்தியைச் சுழற்றி யுத்தம் போடச் சொல்லிக்கொடுத்தவர்கள் ஆகியவர்கள்கூட ‘ஆசார்யன்’ என்ற மரியாதைக்குகந்த பெயரைப் பெறும் யோக்யதை ஸம்பாதிக்துக் கொண்டிருந்தார்களென்றால், வேத சாஸ்த்ரம் சொல்லிக் கொடுக்கிறவர்கள், ‘இவனே ஈச்வரன்’ என்று சிஷ்யர்கள் சரணாகதி பண்ணக் கூடியவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதில் ஸந்தேஹமென்ன?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பிற நாடுகளில் இல்லாத சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'குலபதி'
Next