அபூர்வமாகச் சில இடங்களில் சதுர்தச வித்யைகளிலும் உள்ள ஸகல சாஸ்த்ரங்களையும் ஸாங்கோபாங்கமாக ஆராய்ந்து கற்றுக்கொடுப்பதற்காக பல ஆசிரியர்களைத் தம் கீழே வைத்துக்கொண்டும், ஸீனியர் ஸ்டூடன்ட்களைக் கொண்டு ஜூனியர்களுக்குக் கற்றுக் கொடுத்தும் ஏராளமான மாணவர்களுக்குக் கல்வி அளித்த குருமார்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் “குலபதி” என்று பெயர்.
குலபதி முன்ஷி என்கிறோம். மெட்றாசில் குலபதி (பாலக்ருஷ்ண) ஜோஷி என்று இருக்கிறார். இரண்டு பேரும் குஜராத்காரர்கள்! இருவர் பேரும் ‘ஷி’யில் முடிகிறது! ஆனால் இவர்கள் நான் இப்போது சொன்ன ஒரிஜினல் அர்த்தப்படி ‘குலபதி’கள் இல்லை. காலப்போக்கில், கல்வி ப்ரசாரத்தில் மிகவும் சிறப்பாகத் தொண்டு செய்யும் ஒரு பெரியவரைக் ‘குலபதி’ என்று சொல்வதாக ஏற்பட்டதிலேயே இவர்களைக் குலபதி என்கிறோம். முன்ஷி அநேக வித்யாசாலைகளும், நம்முடைய கலாசார ப்ரசாரத்துக்காக வித்யாபவனமும் வைத்தவர். ஜோஷி அநேக வருஷங்கள் உசந்த முறையில் ரொம்பவும் நல்ல பெயருடன் தியாலஜிகல் ஹைஸ்கூலில் ஆசிரியராக இருந்தவர். அதனால் இவர்களைக் ‘குலபதி’ என்று சிறப்பித்துச் சொல்கிறோம்.
வஸிஷ்டர் மாதிரி மஹா பெரியவராக ஒரு குரு இருக்கிறபோது அவரிடம் நாலு வார்த்தையாவது நேரே கற்றுக்கொண்டு “வஸிஷ்ட சிஷ்யன்” என்று பெயர் வாங்க வேண்டுமென்று ஏராளமானவர்களுக்கு ஆசையாய் இருந்திருக்கமல்லவா? இவர்களுடைய ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக அந்த மஹா பெரியவர்களும் ஆசையோடு வருகிற அத்தனை வித்யார்த்திகளையும் குருகுலத்தில் சேர்த்துக் கொண்டு, நிறைய ஆசிரியர்களைத் தங்களுக்குக் கீழே அமர்த்திக் கொண்டு இவர்கள் மூலம் அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது, ஆரம்ப கட்டங்களில் ஏதோ ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டும் தாங்களே சொல்லிக் கொடுத்து, “அட்வான்ஸ்ட்” கட்டம் வரும்போது ஸவிஸ்தாரமாக க்ளாஸ் எடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
போன (பத்தொன்பதாம்) நூற்றாண்டில் மன்னார்குடி ராஜு சாஸ்த்ரிகள் என்று வித்யா பாரங்கதராக ஒருவர் இருந்தார். பாரங்கதர் என்றால் கரை கடந்தவர். ‘பாரம்’ (paaram) என்றால் அக்கரை. அவருடைய சிஷ்யர்கள் என்று ரொம்பப் பேர் அடுத்த தலைமுறையில் வந்தார்கள். அவ்வளவு பேரும் முழு வித்யாப்யாஸமும் அவரிடம் செய்தவர்களில்லை. கடைசி ஸ்டேஜில்தான் இவர்கள் நேரே அவரிடம் பாடம் கேட்டது. அதற்கு முன் அநேகமாக ஸீனியர் மாணவர்களிடம்தான் இவர்கள் படித்ததெல்லாம்.
“ரகுவம்ச”த்தில் (முதல் ஸர்க முடிவில்) வஸிஷ்டரைக் “குலபதி” என்று சொல்லியிருக்கிறது. “சாகுந்தல”த்தில் கண்வ மஹர்ஷியைக் குலபதி என்று சொல்லியிருக்கிறது. சிறிது காலம் கழித்து ஏராளமாக சாஸ்த்ரங்களும் காவ்யங்களும் உண்டாகிவிட்டபோது, பத்தாயிரம் மாணவர்களுக்கு இம்மாதிரி குருகுலம் நடத்துகிறவருக்குத்தான் “குலபதி” என்ற பெயர் கொடுக்கப்பட்டது. பத்தாயிரம் என்பது அதிசயோக்தியாய் (மிகைபடக் கூறலாய்) இருக்கலாம் என்கிறார்கள். எப்படியானாலும் நூற்றுக் கணக்கிலாவது மாணவர்கள் இவற்றில் இருந்திருக்கக்தான் வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் இத்தனை மாணவர்கள் இருந்தபோதிலும் குருவானவர், அதாவது அந்தக் குலபதியானவர், ஃபீஸையோ தக்ஷிணையையோ நினைக்காமல், அவ்வளவு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தாமே சாப்பாடு போட்டு ரக்ஷிக்கும் நிஜ ஆசார்யராக இருந்திருக்கிறார்! ‘யோ அன்ன தானாதி போஷணாத் அத்யாபயதி‘ – ‘எவன் சாதம் போட்டுப் பாடம் சொல்லித் தருகிறானோ அவனே குலபதி’ என்று லக்ஷணம் சொல்லியிருக்கிறது. ‘நல்ல கார்யம் செய்கிறார். தன் ராஜ்யத்தில் நிறைய வித்வான்களை உருவாக்குகிறார்’ என்று ராஜா பாட்டுக்கு இவருக்கு ஸம்பாவனை பண்ணிக் கொண்டிருப்பான். இவரும் ஏராளமான சீஷப்பிள்ளைகளைக் கல்விமான்களாக்குவார். “வ்ருத்யர்த்தம்” (பணத்துக்காக) என்ற வாடையே இராது.
ஆனாலும் மொத்தத்தில் பார்த்தால் பெரிய வித்யாசாலைகள் நடத்திய குலபதிகள் அபூர்வமாகத்தான் இருந்தார்கள். தனியாக ஒரு ஆசார்யன் சிறிதாக குருகுலம் நடத்துவதே பொது விதியாக இருந்தது.