பூர்வகால போதனையமைப்பின் வளர்ச்சி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வேதகாலம் என்கிற ஆதி காலத்தில் நம்முடைய தேசத்தில் (நம்முடைய தேசத்தில் மாத்திரமில்லை, உலகத்திலேயே) முதல் முதலில் கல்வி போதிப்பது எப்படி ஆரம்பித்தது என்றால்:

ஒவ்வொரு ரிஷியும் அவருக்கு ஈச்வராநுக்ரஹத்தில் ஸ்புரித்த (அதாவது, reveal ஆன) மந்த்ரங்களையும் வித்யைகளையும் தன்னுடைய புத்ரன், புத்ரன் மாதிரியாக இருக்கப்பட்ட நெருக்கமான பந்துமித்ரர்களின் குழந்தைகள் ஆகியவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்தான் ஆதி ‘ஸ்கூல்’ பிறந்தது. வித்யைகள் என்று இங்கே சொன்னது, பிற்காலத்தில் அந்த வார்த்தையில் உள்ளடங்கிய ‘ஆர்ட்’களையும் (கலைகளையும்) ஸயன்ஸ்களையும் அந்த ஆரம்பகாலத்தில் அவ்வளவாகக் குறிக்கவில்லை. அக்காலத்தில் ஒவ்வொரு உபாஸனா மார்க்கமும் மட்டுமே ஒரு வித்யை எனப்பட்டது.

நல்ல த்யான லயத்திலே ஒரு ரிஷியின் அந்தஃகரணம் பரமாத்மாவிடம் சொருகிக்கொண்டு கிடக்கும்போது அந்தப் பரமாத்ம ஸ்வரூபமான ஆகாசத்திலேயிருந்து அவர்களுக்குள் மந்த்ரங்கள் ஸ்புரிக்கும்*; அந்தப் பரமாத்மாவின் அநுக்ரஹத்தில் அதை அடைவதற்கு உபாயமான ஏதாவதொரு உபாஸனா மார்க்கமும் தானாக ‘ரிவீல்’ ஆகும் (வெளிப்படும்). யமதர்ம ராஜா நசிகேதஸுக்கு உபதேசித்த மாதிரி, ஸநத்குமாரர் நாரதருக்கு உபதேசித்த மாதிரி ஒரு தேவதை அல்லது தெய்வத்தன்மை அடைந்த ஒரு மஹா புருஷர் ஒரு ரிஷிக்கு, அல்லது வேறொரு ஸத்பாத்ரத்துக்கு இப்படிப்பட்ட வித்யையை உபதேசிப்பார். ஸ்வர்க்க லோக ஸம்பந்தமுள்ள அக்னி வித்யையை நசிகேதஸுக்கு யமதர்ம ராஜா உபதேசித்தார். அந்த வித்யை அதற்கப்புறம் அதைப் பெற்ற சிஷ்யனான நசிகேதஸின் பெயரிலேயே வழங்கப்படட்டுமென்றும் வரம் கொடுத்தார்.

இதேபோலத்தான் இன்னம் சில வித்யைகளும் அவற்றில் உபதேசம் பெற்ற சிஷ்யர் பெயரில் இருக்கின்றன. உபகோஸல வித்யா, ஸத்யகாம வித்யா, மைத்ரேயி வித்யா என்று உபநிஷத்தில் வருகிறவை, அவை யாரைக் குறித்து உபதேசிக்கப்பட்டனவோ அவர்கள் பெயரை வைத்துத்தான். உபதேசிக்கிற குருவின் பேரிலோ, அல்லது உபாஸனா மூர்த்தி அல்லது தத்வத்தின் பேரிலோ இல்லாமல் இப்படிச் சில வித்யைகள் சிஷ்யர் பேரிலிருப்பதிலிருந்து, ச்ரத்தா-பக்திகளுடன் வித்யையைக் கற்றறிய விரும்புகிற மாணவனுக்கு ஆதியில் எவ்வளவு சிறப்புக் கொடுத்திருக்கிறார்களென்று தெரிகிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆதிக்கும் ஆதிகால ஸ்கூல் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். வித்யைகள் என்பது பற்றிப் பேச்சு வந்தது.

“ப்ரஹ்மவித்யா” என்று எல்லா வித்யைகளுக்கும் முடிவான ஸத்ய தத்வத்தைச் சொல்லும் வேதாந்தமான உபநிஷத்துக்களை ஒரு மொத்தமாகச் சேர்த்துக் குறிப்பிடுவது வழக்கம். “என்ன, பெரிய ப்ரம்ம வித்தையோ?” என்று இதைத்தான் பேச்சு வழக்கில் சொல்வது. இந்த ப்ரஹ்மவித்யையான உபநிஷத்துக்களில் அநேக வித்யைகள் – பஞ்சாக்னி வித்யா, மது வித்யா, வைச்வாநர வித்யா, ஸம்பர்க்க வித்யா, தஹர வித்யா, அந்தர்யாமி வித்யா என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறவை – வருகின்றன. Ritual (சடங்கு) நிறைய இருக்கப்பட்ட வித்யைகள், அப்படியில்லாமல் த்யானாதி அப்யாஸங்களால் க்ரஹிக்கக்கூடிய தத்வரூபமான வித்யைகள் ஆகிய எல்லாம் நிறைய இருந்திருக்கின்றன. இவற்றை முதலில் ஈச்வர ப்ரஸாதத்தால் பெற்ற ரிஷிகளும், இதே மாதிரி மந்த்ரங்களையும், பல மந்த்ரங்கள் அடக்கிய ஸூக்தங்களையும் ஆகாசத்திலிருந்து அபௌருஷேயமாகப் பெற்ற ரிஷிகளும் இவற்றைத் தங்கள் தங்கள் வாரிசுகளுக்கும், ரொம்புவும் நெருக்கமாக இருக்கப்பட்ட மற்ற பசங்களுக்கும் தங்கள் தங்கள் அகத்திலேயே சொல்லிக் கொடுக்க ஆரம்பித்ததில்தான் ஆதிகால ஸ்கூல் உண்டாயிற்று. ரிஷிகளின் பர்ணசாலைகளைப் பொதுவாக ஆச்ரமம் என்பார்கள். அவற்றில் இந்தமாதிரி போதனை நடைபெற்ற ஆச்ரமங்களை ‘ரிஷிகுலம்’ என்பார்கள். ரிஷிகுலம் தான் நம்முடைய, அல்லது மனித குலத்துடைய, முதல் பள்ளிக்கூடம்.

இப்படி ரொம்பவும் ஆரம்பத்தில் ஒரு குடும்பப் பாரம்பர்யமாகவேதான் வித்யைகளும், வித்யாசாலைகளும் இருந்திருக்கின்றன. அப்புறம் இந்த ரிஷிகுலக்காரர்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு, பரிவர்த்தனை ஏற்பட்டு, கல்விமுறை வ்ருத்தியாகி அவரவரும் தங்கள் தங்கள் குடும்ப வித்யையை மட்டுமின்றி மற்ற வித்யைகளையும் மந்த்ர ஸூக்தங்களையும் மற்ற ரிஷிகுலங்களுக்குப் போய்க் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.


* இவ்விஷயமும் இதன்பின் வரும் விஷயங்களில் சிலவும் நம் நூலின் இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையிலுள்ள “அநாதி-அபௌருஷேயம்”, “ஒலியும் படைப்பும்” என்ற பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் அவற்றில் ஒரு கண்ணோட்டம் விட்டால் இனி படிக்கவிருப்பவை நன்கு தெளிவாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'குலபதி'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மொழி, ஒலி ஒழுங்கு
Next