பாத்திரமறிந்து : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கட்டாய பாடம் என்பதால், ஏதோ அரை மனஸாக வந்து, கற்றுக்கொண்டதாகப் பேர் பண்ணிவிட்டுப் போய்விடமுடியாது. முழுமனஸுடன் முழு ‘கோர்ஸை’யும் நல்ல ப்ரஹ்மசர்ய நியமங்களோடு படிக்கக்கூடிய ஸத்பாத்ரத்துக்கே கற்றுக்கொடுக்க வேண்டுமென்று தர்ம சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. சுத்தனாகவும், க்ரஹண – தாரண சக்தியுள்ளவனாகவும் வித்யார்த்தி இருக்க வேண்டுமென்கின்றன. சொல்லிக்கொடுப்பதை நன்றாக க்ரஹித்துக் கொள்வதே க்ரஹண சக்தி. அப்புறம் அதை மறக்காமல் புத்தியில் இருத்திக் கொள்வது தாரணசக்தி.

கம்பல்ஸரி என்றும் வைத்துவிட்டு, இப்படித் தகுதியும் வைத்தால் என்ன அர்த்தம்? இயற்கையாகவே க்ரஹண – தாரண சக்தி போதாதவன் என்ன பண்ணுவது?

இதற்காகத்தான் முதலில் ப்ரஹ்மோபதேசம் என்று காயத்ரியை உபதேசித்து, அப்புறம் வித்யாப்யாஸத்தில் விடுவது என்று வைத்தார்கள். காயத்ரியை ஒழுங்காக ஜபித்து வந்தால் எவனுக்கும் க்ரஹண – தாரண சக்திகள் உண்டாகிவிடும்.

முறையாக காயத்ரீ அநுஸந்தானம் செய்யாததால் க்ரஹண – தாரண சக்திகளைப் பெறாதவன், அஸத்தாக இருக்கிறவன் ஆகியோருக்கு வித்யையைக் கொடுக்கக்கூடாது என்றும், அப்படிப்பட்டவர்களை ஸமூஹத்திலிருந்து ஒதுக்கிவிட வேண்டுமென்றும் வைத்தார்கள்.

நல்ல விதையானாலும் ஊஷர பூமியில் (உவர் நிலத்தில்) விதைத்தால் வீணாகப் போவதுபோல் ஸத்வித்யையும் அஸத்துக்கு உபதேசிக்கப்பட்டால் வீணாகும் என்று சாஸ்த்ரம் எச்சரிக்கிறது.

இப்படிச் சொல்லியிருக்கிறது: யோக்யதையுள்ள சிஷ்யன் கிடைக்கவேயில்லை என்றாலும்கூட ஒரு வித்வான் தன் வித்யையோடேயே செத்தாலும் சாகட்டும்; ஆனால் என்ன ஆபத்து வந்தாலும் அபாத்ரத்துக்கு மட்டும் அதைக் (கற்றுக்) கொடுத்துவிடக்கூடாது. ஒரு கதை மாதிரிக்கூடச் சொல்லியிருக்கிறது. வித்யா தேவதை ஒரு ப்ராம்மணனிடம், “நான் உனக்குக் கிடைத்திருக்கிற பெரிய புதையல். புதையலை எப்படி கவனமாகக் காப்பாற்றி, கருத்தாகச் செலவழித்து, தக்காருக்கே விநியோகம் பண்ணுவாயோ அப்படித்தான் என்னையும் நீ பண்ண வேண்டும். சுத்தனாய், ஜிதேந்த்ரியனாய், ச்ரத்தையோடு வித்யாப்யாஸம் செய்கிறவனாய், ‘இதை நிதியாக ஸம்ரக்ஷிக்க வேண்டும்’ என்று நினைக்கிறவனாய் உள்ளவனுக்குத்தான் என்னை நீ உபதேசிக்க வேண்டும்” என்று சொல்வதாக (தர்ம சாஸ்த்ரம்) தெரிவிக்கிறது.

அக்கறையோடும், பக்தியோடும் கேட்காதவனுக்கும், தர்ம விரோதமாக வித்யையை ப்ரயோஜனப்படுத்தக் கூடியவனுக்கும் சொல்லிக் கொடுக்கவேகூடாது என்று மநு தர்ம சாஸ்த்ரத்தில் இருக்கிறது.

எல்லா தர்ம சாஸ்த்ர க்ரந்தங்களுமே பாத்ரம் பார்க்காமல் பணத்துக்ககாக வித்யையைக் கற்றுக் கொடுப்பவன் நரகத்துக்குப் போவான் என்று ரொம்பவும் பயப்படும்படியாகச் சொல்லியிருக்கின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கட்டாய கல்வி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பிற்கால மாறுதலும் தற்கால விபரீதமும்
Next