பிற்கால மாறுதலும் தற்கால விபரீதமும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அறிவு, குணம் இரண்டாலும் வித்யார்த்தி யோக்யதாம்சமுள்ளவனாக இருக்கவேண்டுமென்பது பூர்விகர் ஏற்பாடு. பிற்பாடு ஸ்கூல் என்று வைத்துவிட்டபின், ‘க்ளாஸில் ரொம்ப ரௌடித்தனம் பண்ணாமலிருக்கிறானா?’ என்று பார்ப்பதற்கு மேல் குணத்தைப் பற்றிப் பார்க்க வேண்டியதில்லையென்றும், அறிவுக்குறைவை வைத்தே ஃபெயில் பண்ணுவதென்றும் அல்லது முதலிலேயே அட்மிஷன் கொடுக்காமலிருப்பதென்றும் ஆயிற்று. அதுவும் தற்காலத்தில் மாறிப்போய் ரௌடித்தனம் பண்ணுகிறவனின் இஷ்டப்படியே அவனுக்கு மார்க் போட்டு விடுவது என்று பயப்படுகிற ஸ்திதிக்கு வந்திருக்கிறது!

குணத்தையும் பார்க்கவேண்டாம், அறிவையும் பார்க்க வேண்டாம், எலெக்ஷனில் வோட் வாங்க யாருடைய ஆதரவு தேவையாயிருக்கிறதோ அந்த வர்க்கத்தைச் சேர்ந்த பசங்களாயிருந்துவிட்டால் போதும், அது ஒன்றுதான் யோக்யதாம்சம் என்று ஆகியிருக்கிறது. ஆனால் அப்படிச் சொல்லிக்கொள்ளாமல், ‘பிற்பட்டவரை முன்னுக்கு கொண்டுவருகிறோம், தாழ்த்தப்பட்டவரை உசத்துகிறோம்’ என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

(இவை) அவச்யம் செய்யவேண்டிய கார்யங்கள்தான். ஆனால் எதையுமே அளவறிந்தும் முறையுடனும் செய்ய வேண்டும். பொது க்ஷேமத்தையும், ஸகல ஜனங்களுக்கும் கிடைக்கவேண்டிய நீதி ந்யாயத்தையும் கவனிக்காமல் செய்தால் அனர்த்தம்தான் ஏற்படும்.

இன்றைக்கு உள்ள சில ஸமூஹங்களைச் சேர்ந்த பசங்களின் தாத்தாவும் கொள்ளுத்தாத்தாவும் ஆதிகாலப் பூர்விகர்களும் நிறையக் கல்வி கற்றபோது, வேறு சில ஸமூஹத்தினர் அப்படிச் செய்யவில்லை அல்லது செய்யமுடியவில்லை என்பதற்காக, “என்றைக்கோ உங்கள் தாத்தாவும், அவருக்குத் தாத்தாவுடைய தாத்தாவும் படிப்பிலே கொடிகட்டிப் பறந்து விட்டார்களோல்லியோ? அதனாலே இன்றைக்கு நீங்கள் எத்தனை புத்திசாலிகளாயிருந்தாலும் உங்களை இரண்டாம் பக்ஷமாகத்தான் கருதிக் கலாசாலைகளில் இடம் கொடுப்போம். உங்களைவிடத் தகுதியிலே குறைந்திருந்தாலும் யாருடைய தாத்தா, முத்தாத்தா படிக்கவில்லையோ அவர்களுக்குத்தான் இடம் ரிஸர்வ் பண்ணி வைப்போம்” என்கிறார்கள்.

இப்படிச் சொல்வது வேறு எதற்குப் பொருந்தினாலும் பொருந்தும் – ஆனால் பகுத்தறிவுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பது புரியவில்லை. ஆனாலும் தங்களைப் பகுத்தறிவாளிகளாகச் சொல்லிக் கொள்கிறவர்கள்தான் இப்படிச் செய்து வருகிறார்கள்! ஆதியிலே நிஜமாகவே ஜனனஸமூஹம் தொழில்களால் ஜாதியாகப் பிரிந்திருந்தபோது, அந்தப் பிரிவனைக்கு ஒத்தாசையாகவே செய்திருந்த கல்வி முறையின் ஏற்பாட்டை ஜாதிக் கொடுமை என்கிறார்கள். இன்றைக்குத் தாங்கள் அறிவுத் தகுதியைவிட – ஜாதிதான் முக்யம் என்று ஏகத்தாறாக ரிஸர்வ் செய்வது அதைவிட ஜாதிக்கொடுமையாக இருந்தபோதிலும் இதை முற்போக்கு, ஸமநீதி, பகுத்தறிவாளர் கொள்கை என்றெல்லாம் சொல்வது ஆச்சரியமாயிருக்கிறது!

பின்னாலிருப்பவரை முன்னால் கொண்டு போவதை யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. அதற்காக முன்னால் இருப்பவர்களில் தாங்களாகவே முன்னேறக் கூடியவர்களையும் பின்னாலே தள்ளிவைப்போம் என்பதற்குத்தான் ஆக்ஷேபம். பசிக்கிறவனுக்குச் சாதம் போடட்டும். அதற்காக, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவனின் வயிற்றிலடிக்க வேண்டியதில்லை.

ஸம தர்மம், அபேதம் என்ற பரம உத்தமமான தத்வங்கள் இப்போது விபரீதமாக நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பதில் ஒரு அம்சம்தான் இதுவும். ஜாதிகள் போகவேண்டுமென்பவர்களே தங்களுடைய கல்வி – உத்யோகக் கொள்கைகளால் ஜாதிகளை ஆழமாக, அழுத்தமாக முத்ரை போட்டுக் கெட்டிப்பது இந்த வீபரீதத்தில் பெரிய விசித்ரம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பாத்திரமறிந்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'யாரார் வாய் கேட்பினும்'
Next