“யாரார் வாய் கேட்பினும்” : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆதி காலத்தில் எப்படிப் படிப்பை ஜாதி ஸம்பந்தமில்லாமல் வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு கொள்கையிலிருந்து தெரிகிறது. கல்வியை, அதாவது விஷய ஞானம் பெறுவதை அந்தப் பூர்வ காலத்தில் எவ்வளவு பெரிதாக மதித்திருக்கிறார்களென்பதும் இதிலிருந்து தெரிகிறது. அதாவது ஒரு ஜாதியார் தங்களிடம் இல்லாத, அல்லது முற்காலத்தில் இருந்து பிறகு நஷ்டப்பட்டுப் போன வித்யைகளை எந்த ஜாதியாரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாமென்று தர்ம சாஸ்த்ரங்கள் தாராளமாக அநுமதித்திருக்கின்றன.

நல்ல வித்யை ஒன்றையோ, அல்லது உயர்ந்த தர்மப் பண்பு ஒன்றையோ, அல்லது ரொம்பவும் உத்தமமான கன்னிகை ஒருத்தியையோ எந்த ஜாதியாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாமென்று மநுவே சொல்லியிருக்கிறார். ஆனால் இதில் கன்னிகை விஷயம் மாத்திரம் இந்த்ரிய ஸம்பந்தமாகக் காதல் கீதல் என்று போய், அப்புறம் அதற்குச் சப்பைக் கட்டு கட்டவதற்காக அந்தக் கன்னிகைக்கு உத்தமமான ஸம்பத்தைக் கல்பித்து க்ருத்ரிமங்கள் செய்ய இடங்கொடுத்து விடுமென்பதால் பிற்பாடு தர்ம சாஸ்த்ரத்தில் இவ்விஷயத்தில் வர்ண தர்மத்துக்கு விரோதமாகப் போகவே கூடாது என்று வைத்துவிட்டார்கள். ஆனால், தர்மம், வித்யை – அதாவது அறம், அறிவு – இரண்டையும் ப்ராம்மணன்கூட அப்ராம்மணரிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளலாமென்று சொல்லியிருக்கிறார்கள்.

அறமும் அறிவு நூலால் வருவதே, அறிவு நூலின் பயனும் அறத்துக்கு உதவ வேண்டுவதே. ஆகையால் இவற்றைப் பிரித்துக்கூடச் சொல்லக்கூடாது.

அந்நிய தேசத்தினரோ, காட்டுமிராண்டிகளோ ஒரு பிரதேசத்திலுள்ள ப்ராம்மண வித்வான்களையெல்லாம் ஒழித்துவிட்டால், அல்லது வேறே ஏதோ காரணத்தால் ஒரு ப்ரதேசத்தில் ப்ராம்மணர்களுடைய வேதாப்யாஸம் நின்று போய்விட்டதென்றால், இப்படிப்பட்ட ஆபத்துக்காலத்தில் ப்ராம்மணனாகப் பிறந்தவன் அங்கேயுள்ள க்ஷத்ரியர்களிடமோ வைச்யர்களிடமோ வேதத்தையேக்கூடக் கற்றுக் கொள்ளலாம் என்கற அளவுக்கு மநு போயிருக்கிறார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு.

என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறது.

எந்த விஷயமாகட்டும், அதை யார்தான் எடுத்துச் சொல்லட்டும், அதன் ஸரியான தாத்பர்யம் என்னவென்று பார்த்து ஏற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் என்று அர்த்தம். இப்படிச் சொன்னதால் முதலிலேயே எந்த ஒரு வித்யையும் தப்பு என்று ஒதுக்கி வைத்துவிடாமல் அதிலும் ஏதாவது உசந்த கருத்து இருக்குமா என்று ஆலோசிக்க வேண்டுமென்று ஏற்படுகிறது. அதேபோல, “போயும் போயும் இவர்களிடமா கற்றுக்கொள்வது? இவர்கள் சொல்லியா கேட்டுக் கொள்வது” என்றெல்லாம் நினைக்காமல், “சொல்வது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; சொல்வதில் தாத்பர்யம் இருந்தால் எடுத்துக் கொள்வோம்” என்று நினைக்க வேண்டுமென்றும் ஏற்படுகிறது. இந்த இரண்டு பண்புகளையும் தர்ம சாஸ்த்ரங்களில் வெகுவாக ஆதரித்து வற்புறுத்தியிருக்கிறது.

“விஷயமிருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று பொய் ஸமாதானம் சொல்லிக்கொண்டு, கன்னாபின்னா ஸமாசாரங்களைக்கூட ஒருத்தன் படிக்கலாம். அதாவது “எப்பொருளை”யும் படிக்கலாம். ஆனால் உசத்தி தாழ்த்தி பார்க்காமல் “யாரார் வாய் கேட்பது” லேசில் முடியாது. அதனால் இந்த அம்சத்தை சாஸ்த்ரம் நன்றாக அழுத்தம் கொடுத்து எடுத்துச் சொல்லியிருக்கிறது.

கோபத்திலே கொக்கை எரித்த கொங்கண ரிஷி ஒரு ஸ்த்ரீயிடமிருந்து அநேக தர்மங்களைத் தெரிந்துகொண்டு, அப்புறம் அவள் வார்த்தைப்படி பாக்கியிருந்த தர்மங்களை ஒரு கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டறிந்ததாக மஹா பாரதத்தில் இருக்கிறது. அந்தக் கதையைவிட நம் பூர்விகர்கள் அறிவுக்காக “யாரார் வாய் கேட்க”வும் தயாராயிருந்ததற்குப் பெரிய சான்று வேண்டாம்.

 

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பிற்கால மாறுதலும் தற்கால விபரீதமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  இன்னொர் உண்மை
Next