இன்னோர் உண்மை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இவ்வாறு ப்ராமணர்களுக்கும் போதிக்கக் கூடிய அளவுக்கு விஷயமறிந்த நாலாம் வர்ணத்தினர் இருந்திருக்கிறார்கள், “அவர்களிடம் போய் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்” என்று தர்ம சாஸ்த்ரங்களே குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்பதிலிருந்து இன்னொரு உண்மையும் தெரிகிறது. தற்காலத்தில் நினைப்பதுபோல ப்ராமணர்கள் அவர்களை ஒரேயடியாக அறிவில் இருட்டு நிலையிலேயே ஒதுக்கி வைத்திருக்கவில்லை என்று தெரிகிறது. நேராக அவர்களுக்கு வேத பாடம் சொல்லித் தராவிட்டாலும், அவர்கள் தங்கள் தொழிலில் சாஸ்த்ரக் கல்வி பெறுவதற்காக வரும்போது, அவர்களுக்கு ப்ராமணர்கள் தொழிற்கல்வியோடு நிறைய தர்மோபதேசமும், ஞானோபதேசமும் செய்திருக்கிறார்கள். முக்யமாகப் புராணங்களின் மூலமே இந்த உபதேசங்களைச் செய்திருக்கிறார்கள். இப்படியாக அவர்களில் நல்ல தார்மிக, ஆத்மிக வித்யா ஸம்பத்தைப் பெற்றுக் கொண்டவர்களாகப் பல பேர் ஏற்பட்டதால்தான், அப்புறம் ப்ராமணர்களிலேயே அவ்வளவு அறிவு பெறாதவர்கள் அவர்களிடம் போய்க் கேட்டுக்கொள்ள இடமேற்பட்டிருக்கிறது.

இதிலே ரொம்பவும் ஆச்சரியப்படத்தக்க த்ருஷ்டாந்தம் முதல் முதலில் அந்தப் புராணங்கள் உபதேசமாகி ப்ரசாரம் செய்யப்பட்டதிலேயே இருக்கிறது. வேதங்களை ப்ராமண சிஷ்யர்கள் மூலம் ப்ரசாரம் செய்த வ்யாஸ பகவான் புராணங்களைச் செய்து அப்ராமணராகிய ரோமஹர்ஷண ஸூதர் என்பவருக்கே அவற்றை உபதேசித்து ப்ரசாரம் பண்ண அனுப்பினார். ஸத்பிராமணர்களாகிய நைமிசாரண்யத்து ரிஷிகள் அந்த ஸூதருக்கு ரொம்பவும் மரியாதை செய்து, அவரைப் பீடம்போட்டு உட்கார்த்தி வைத்து, அவரிடம் புராணங்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'யாரார் வாய் கேட்பினும்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வித்யாதானத்தின் உயர்வு
Next