மாணவனை அடிக்கலாமா? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ரொம்பவும் நெரிப்பு இல்லாமலிருப்பதற்கே அவ்வப்போது அநத்யயனம் என்று லீவ் கொடுத்ததைச் சொல்லும்போது, வித்யார்த்தியிடம் பொதுவாக ஆசார்யர் எப்படி நடக்கவேண்டுமென்பது பற்றிய தர்மசாஸ்த்ரக் கருத்துகளையும் தெரிவிக்கத் தோன்றுகிறது.

ப்ரியம் என்று சொல்லிக்கொண்டு ரொம்பவும் செல்லம் கொடுத்துக் குட்டிச் சுவராக்கிவிடக்கூடாது என்பதுதான் பொதுக் கொள்கை. அதற்காகத்தான் வீட்டிலேயே படிப்பதென்றில்லாமல் குருகுலத்தில் சேர்த்ததே. சிஷ்யன் ஸ்வயேச்சைப்படிப் போகவிடாமல் அவனை ஆசார்யரின் வார்த்தைப்படியே நடக்குமாறுதான் சாஸ்த்ரம் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஆசார்யர் எப்போதும் உர்ரென்று மிரட்டி உருட்டிக் கொண்டிருக்கவேண்டுமென்று ஒரு இடத்தில்கூடச் சொல்லவில்லை. ப்ரியத்தோடு நடத்தும் போதே பையன் ஸ்வாதீனமாகப் போகாதபடியும் அவனை ஒழுங்குபடுத்தவேண்டுமென்பதே சாஸ்த்ரக் கருத்து. உபநிஷத்துக்களில் ஆரம்பித்துப் புராண – இதிஹாஸங்களைப் பார்த்தால் குரு – சிஷ்யாள் பரஸ்பரம் ஆழ்ந்த ப்ரியத்திலேயே கட்டுப்பட்டிருந்ததற்கு நிறைய த்ருஷ்டாந்தம் கிடைக்கும்.

மதுரமாகப் பேசியும், ப்ரியமாக நடத்தியுமே சிஷ்யனை முன்னேற்றப் பார்ப்பதுதான் வழி என்று சொல்லியிருக்கிறது. “ஸெளம்யா!” என்று சிஷ்யனைக் குளிரக் குளிரக் கூப்பிடுவதிலிருந்து இந்த மாதுர்யம் தெரிகிறது.

சிஷ்யனை அடிக்காமலே சிக்ஷை சொல்லித்தர வேண்டும் என்று கௌதம ஸ்ம்ருதியில் இருக்கிறது. சிக்ஷை தருவது என்றாலே தண்டனை தருவது என்று பிற்பட்டு அர்த்தம் ஏற்பட்டிருந்தாலும், ஆதியில் போட்ட ‘ரூல்’ இப்படித்தான் இருக்கிறது.

ஆனாலும் தவிர்க்கமுடியாமல் சில ஸமயங்களில் அடிக்கவும் வேண்டியிருக்கலாம். அதனால்தான் “அடியாத மாடு படியாது”, “அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவுகிறதில்லை” என்றெல்லாம் வசனம் இருக்கிறது. “Spare the rod and spoil the child” (‘பிரப்பம்பழம்’ போடாவிட்டால் பிள்ளை குட்டிச் சுவர்தான்) என்று வெள்ளைக்காரர்களும் சொல்கிறார்கள்.

இம்மாதிரி, அடிக்கும்படியாக நிர்பந்தம் ஏற்பட்டால் கூட, சின்னதாக ஒரு கயிறு அல்லது மூங்கில் கம்பால் தட்டலாமேயொழிய, சவுக்கு, புளியங் கொம்புகளால் வீறுவது என்பது கூடாது என்று மநுஸ்ம்ருதி சொல்கிறது. முதுகில் மட்டும்தான் அடிக்கலாம், வேறே எங்கேயும் அடிக்கப்படாது, தலையில் ஒருகாலும் அடிக்கப்படாது என்று கட்டுப்பாடு செய்திருக்கிறது. தலையில் அடித்தால் பொறி கலங்கிவிடக் கூடுமல்லவா?

இப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சாஸ்த்ரங்கள் கூர்மையாக கவனித்துப் பயனுள்ள உபதேசங்களைத் தந்திருக்கின்றன.

மொத்தத்தில் மாணவன் அந்தப் பருவத்தில் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கவேண்டும். இதில் அவனே இந்த்ரியத்தைக் கட்டிக்கொள்வது முக்யம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is விடுமுறை நாட்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மாணவன் லட்சணம்
Next