மாணவன் லக்ஷணம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மாணவனுக்கு ப்ரஹ்மசர்ய நியமத்தை மநு விசேஷித்துச் சொல்லியிருக்கிறார். “இந்த்ரிய ஸம்யமம்” (அதாவது புலனடக்கம்) என்பது அவர் சொல்லும் இன்னொரு பேர். இந்த நியமம் எதற்காகவென்று காரணம் சொல்லும்போது, கல்வியின் நோக்கம் அறிவைப் பெறுவதான “வேத க்ரஹணம்” மாத்திரமில்லை, ஆத்மாபிவ்ருத்தியாகிய ‘வ்ரதா தேசனமே’ படிப்பின் லக்ஷ்யம் என்கிறார். இதனால்தான் வித்யாப்யாஸத்தை வ்ரதமாயும் தபஸாயும் சொல்லியிருப்பது.

மாணவனின் அன்றாடக் கடமைகளையும் மநு தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஸந்த்யா வந்தனம், அக்னிஹோத்ரம் (அதாவது ப்ரஹ்மசாரிக்கான ஸமிதாதானம்) , தனக்கான பாடத்தை முறைப்படி கற்று மனப்பாடம் செய்வதான “ஸ்வாத்யாயம்”, பிக்ஷை எடுப்பது (பிக்ஷாசர்யம்) , ஆசார்யனுக்காக ஜலம் கொண்டுவருவது, விறகு வெட்டிக்கொண்டு வருவது, சுத்திக்கான ம்ருத்திகை (குழைமண்) கொண்டுவருவது, அவருடைய பூஜைக்குப் புஷ்பம் கொண்டுவருவது முதலான எடுபிடிப் பணிகள், பாடத்தை நன்றாக விளக்கி “ப்ரவசனம்” பண்ணும்படி ஆசார்யரை ப்ரார்த்தித்துக் கொண்டு செவ்வனே கேட்டறிதல் – என்றிப்படி சிஷ்ய தர்மத்தைச் சொல்லியிருக்கிறது. “ஸ்வாத்யாயம், ப்ரவசனம் ஆகிய இரண்டையும் கொஞ்சங்கூட விட்டுவிடப் படாது” என்று தைத்திரீய (உபநிஷ)த்திலும் சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மாணவனை அடிக்கலாமா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆரோக்ய வளர்ச்சிக்கும் உதவி
Next