ச்ரத்தை; பரிப்ரச்நம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கீதையிலும் பகவான், தத்வதர்சிகளான ஞானிகளிடம் உபதேசம் பெற வேண்டுமென்று சொல்லிவிட்டு (4-34), நாலைந்து ச்லோகங்களுக்கு அப்புறம் (4-39) “ச்ரத்தாவாந் லபதே ஜ்ஞானம்” – “ச்ரத்தை நிரம்பியவனுக்குத்தான் ஞானம் லபிக்கும்” என்கிறார். அங்கே அவரும், சிஷ்யன் குருவை நன்றாகத் தோண்டித் தோண்டிக் கேள்வி கேட்க வேண்டுமென்கிறார். “பரிப்ரச்நம்” என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார். “ப்ரச்நம்” என்று மாத்திரம் சொன்னால், கேள்வி கேட்டறிவது என்று அர்த்தம். “பரி” என்று இதற்கு அடைமொழி போட்டதால் நன்றாகக் குடைந்து கேட்கணும் என்றாகிறது. இது இந்த நாளில், “வாத்தியாருக்குத் தெரிகிறதா?” என்று அவரைக் குடைந்து பார்த்து அவமானப்படுத்த ஆசைப்படுவதுபோல் அல்ல. விஷயத்தைக் குடைந்து பரிபூர்ணமாக அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே தாத்பர்யம். அதனால்தான் இந்தக் கால மாணவரின் போக்குக்கு மாறான இரண்டு வார்த்தைகள் “பரிப்ரச்நம்” என்பதை இரண்டு பக்கமும் அணைத்துக்கொண்டு வரும்படியாக பகவான் பதப்ரயோகம் செய்திருக்கிறார். “ப்ரணிபாதம்” என்பதை இரண்டு பக்கமும் அணைத்துக்கொண்டு வரும்படியாக பகவான் பதப்ரயோகம் செய்திருக்கிறார். “ப்ரணிபாதம்” என்பது “பரிப்ரச்ந”த்துக்கு முந்தி வரும் வார்த்தை. “ப்ரணிபாதம்” என்றால் நமஸ்காரம் பண்ணிப் பணிவோடு இருப்பது. “பரிப்ரஷ்ந”த்துக்குப் பிந்தி “ஸேவா” என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார். அதாவது சிஷ்யன் குருவுக்குப் பணிவிடை புரியணும். முதலில் பணியவேண்டும். அப்புறம் அவருக்கு எல்லாப் பணிவிடையும் செய்யவேண்டும். இதெல்லாவற்றுக்கும் “பேஸிக்”காக (அடிப்படையாக) குரு வார்த்தை, குரு உத்தரவு, குரு உபதேசம் எதுவானாலும் அது நல்லதுதான் என்ற அசைக்கமுடியாத ச்ரத்தை இருக்க வேண்டும். இவற்றோடு கூடிய சிஷ்யனைத்தான் குருவிடம் நன்றாக ஆழ்ந்து கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சொல்லியிருக்கிறது.

இப்படிப்பட்ட நம்பிக்கைக்கு உரியவராக ஒருத்தர் வாஸ்தவமாகவே இருந்தாகவேண்டும் என்பது தனி மநுஷ்யர் குருகுலம் நடத்தும்போதுதான் யதார்த்தத்தில் நடக்கும். அவரோடேயே ஸதா ஸர்வகாலமும் இருந்தால்தானே அவருக்கு வாஸ்தவமாக உள்ள அறிவு என்ன, அவருடைய குணம் என்ன என்பது தெரியும்? ஸ்தாபன ரீதியில் படிக்கும்போது இதெல்லாம் எப்படி ஸாத்யம்? ஏதோ கொஞ்ச நேரம்தான் ஸ்கூல் அல்லது காலேஜ், அதிலேயும் வெவ்வேறே ஸப்ஜெக்டுக்கு வெவ்வேறே வாத்தியார் என்றிருக்கிற தற்கால அமைப்பில் வாத்தியார் ஏதோ கொஞ்சம் நோட்ஸை உருப் போட்டுவிட்டு வந்து ஒப்பித்தே ரொம்பவும் விஷயஜ்ஞர் மாதிரிக் காட்டிக்கொண்டு விடுவதற்கு இடம் கொடுத்துப் போகிறது. “தெரிந்தமட்டும் பதில் சொல்கிறேன்” என்று உபநிஷத் ரிஷி சொன்னாரே, அந்த உண்மை உள்ளம், அதோடு குரு ஸ்தானத்திலிருந்த போதிலும் அவருக்கு இருந்த humility (விநய ஸம்பத்) இந்த நாளில் பார்க்க முடியுமா? சிஷ்யன் என்றாலே விநீதன், அவன் விநயரூபமாக இருக்கவேண்டும் என்பதோடு நிற்காமல் இப்படி குருவும் விநயமாயிருந்திருக்கிறார்!

இப்படியெல்லாம் குரு, சிஷ்யன் இருவருமே உண்மையோடு எளிமையோடு ஒழுகியதற்குக் காரணம், குருகுலம் என்று ஒன்று சேர்ந்து ஒரு அகத்து மநுஷ்யர்களாக குரு – சிஷ்யாள் ஹ்ருதயம் ஒட்டி உறவோடு வஸித்ததுதான். பரஸ்பரம் ஒளிவு மறைவில்லாமல் இருந்திருக்கிறார்கள். அந்த ஹ்ருதய ஒட்டுறவு ஒரு ஸ்தாபனத்தில் எப்படி வரும்? இந்த பாந்தவ்யத்தாலேயே குரு மனஸைத் திறந்து காட்டினார். தன் புத்தியையும் திறந்து, பாத்ரர்களான சிஷ்யர்களிடம் தனக்குத் தெரிந்த ஸகலத்தையும் கொட்டினார். “தெரிந்தவரை சொல்கிறேன்” என்று சொன்ன அதே வாயோடு பிப்பலாதர், “தெரிந்ததில் ஸர்வத்தையும் சொல்கிறேன்” என்று பரிபூர்ணமாக வித்யாதானம் செய்ய முன் வருகிறார். சிஷ்யன் தன்னை மிஞ்சி விடுவானோ என்று பயப்படுவது, சிஷ்யன் எழுதியதையே தன் “தீஸிஸ்” என்று வெளியிடுவது – இப்படியெல்லாம் தற்காலம் கேட்கிறோம். இதெல்லாவற்றுக்கும் மேலே குருகுலத்தின் பாந்தவ்யத்தில் குரு சிஷ்யனிடம் காட்டிய அன்பும், கரிசனமும் இன்ஸ்டிட்யூஷனில் உண்டாகவே முடியாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is உள்ளம் திறந்து குரு - சிஷ்யர்கள் உபநிஷத உதாரணங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சோதித்துத் துலக்குவது
Next